மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நேற்று (23) மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு அஞ்சல் அட்டைகளை பூர்த்திசெய்து அங்கிருந்து மட்டக்களப்பு பிரதான தபாலகம் வரையில் ஊர்வலமாக சென்று தமது தேர்தல் பகிஸ்கரிப்பு தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்,அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் இணைந்து பத்தாயிரம் அஞ்சல் அட்டைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்களின்போது பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் இதன்போது குற்றஞ்சாட்டினர். இந்த நியமனங்கள் குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்பாக இதற்கு பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகள் தமக்கு நியாயம் வழங்கவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் இந்த ஆட்சிக்கு எதிராக தாங்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாகவும் பட்டதாரிகள் இங்கு தெரிவித்தனர்.