ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஊடாக அந்தக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப திட்டமிட்டுவருவதாக சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசியப் பட்டியல் மூலம் 9ஆவது பாராளுமன்றத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் ஏற்கனவே ஏழு நாள் காலஅவகாசம் கோரியுள்ளார்.
இந்நிலையில் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவையே தேசியப் பட்டியலுடாக நாடாளுமன்றம் அனுப்ப ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கு பரந்த அரசியல் அனுபவம் உள்ளதாலும், அரசின் நாட்டு நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கப் பொருத்தமான நபர் என்பதாலும் அவரை நாடாளுமன்றம் அனுப்புவதே பொருத்தம் எனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.