துறைமுக நகர் தொடர்பில் தமிழர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை – மனோ

340 Views

துறைமுக நகர் தொடர்புல் தமிழ் மக்களும் அரசியல்வாதிகளும் அதிகமாக அலட்டி கொள்ள தேவையில்லையென  நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தேசம் பறிபோகிறது. சீனமயமாகிறது. சீன கொலனியே உருவாகிறது” என்று பெரிய தேசபக்தர்களாக மாறி, ஒப்பாரி வைத்து ஓலமிட தேவையில்லை என்பது தன் கருத்து எனவும் மனோ கணேசன்   மேலும் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து தனது முகநுாலில் கருத்து பதிவிட்டுள்ள மனோ கணேசன்,

தமிழ் அரசியலரும், தமிழ் மகாஜனங்களும், “துறைமுக நகர்”, தொடர்பில் “என்ன நடக்கிறது” என்ற விபரங்களை அறிந்துக்கொண்டால் போதும்.

அதைவிடுத்து. “இலங்கை தேசம் பறிபோகிறது. சீனமயமாகிறது. சீன கொலனியே உருவாகிறது” என்று பெரிய தேசபக்தர்களாக மாறி, ஒப்பாரி வைத்து ஓலமிட தேவையில்லை என்பது என் கருத்து.

எமது இனத்து மக்களின், மிக மிக நியாயமான அன்றாட மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்குகூட, சும்மா ஆங்காங்கே, சில வாய்பேச்சுகளை தவிர உள்ளார்ந்தமாக ஆதரவு குரல் எழுப்ப இங்கே எவரும் தயாரில்லை.

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு,   இந்த “கொழுப்பு” நடவடிக்கை பற்றி எவரையும் விட நன்கு தெரியும். இவர்களின் உண்மை முகங்களும் தெரியும்.

இலங்கை அரசியல் அதிகார பரப்பில் சீனாவின் இந்த “சட்டபூர்வ” உள்நுழைவு, எப்படி இலங்கையின் தேசிய போக்கில் அதிகாரம் செலுத்த போகிறது? அதை எப்படி ஏனைய வல்லாதிக்க சக்திகள் கையாள போகின்றன? அதை எப்படி நாம் எமது தேசிய இனச்சிக்கல் தீர்வுக்கு பயன்படுத்துவது? என்று மட்டும் பார்த்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply