உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்வது சட்டத்துக்கு புறம்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
தற்கொலையைத் தடுக்கும் தினமாக செப்டம்பர் 10ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற போதும்ää உலக மனித இனத்தின் உலநலத்தைப் பேணும் வகையில் 2019ம் ஆண்டு உலக உளநல தினமானது அதிகரித்துவரும் தற்கொலைக்கு விழிப்புணர்வூட்டி ஆரோக்கிய உளத்தை வளர்த்தெடுக்கும் முகமாக “தற்கொலையைத் தடுத்தல்” எனும் தொனிப்பொருள்களில் சர்வதேச ரீதியாக ஒக்டோபர் 10ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
வாழ்க்கை வெள்ளத்தின் அழிவுகளில் சிக்கி எல்லாவற்றையும் இழந்து,தங்களையும் இழக்க நேரிடும் சோகங்கள், நிகழாத தேசங்கள் இல்லை. இன்று தற்கொலை என்பது சர்வதேச பிரச்சினையாகவே உள்ளது. சிறுவர் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை, மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை தற்கொலையில் ஈடுபடாத சமூகப்பிரிவுகளே கிடையாது. ஓர் மனிதன் ஏதோ ஒரு உந்துதலில் சுய விருப்புடன் அல்லது சுய தீர்மானத்துடன் தன் உயிரைத் தனக்கு உகந்த ஓர் வழியில் போக்கிக்கொள்வதே தற்கொலை.
தற்கொலைக்கான அடிப்படை உண்மை எந்தவொரு மனிதன் ஒரு நாளுக்கு போதுமான தூக்கம், ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லையோ அந்த மனிதன் நாட்பட்ட நாளுக்கு அப்பால்; அவனின் ஆழ் மனதில் எழும் எண்ணமே நிரந்தரமான தூக்கம் தேவை என்பதாகும். அதற்காக தேர்ந்தெடுக்கும் வழியே தற்கொலை. உதாரணமாக அதிகளவானோர் பரீட்சைக்காக நித்திரையின்றி, ஓய்வின்றி பல கனவுகளுடன் கற்று,பரீட்சையில் எதிர்பார்த்த புள்ளி பெறவில்லை எனின் இவ்வளவு காலம் எடுக்காத தூக்கம், ஓய்வு என்பவற்றை நிரந்தரமாக எடுக்க எண்ணி தற்கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
உலக ககாதார நிறுவனத்தின் கருத்துப்படி உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 800,000 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு மனிதன் தற்கொலையால் இறக்கின்றான்.
இந்த எண்ணிக்கையை காட்டிலும் 25மூ வீதத்திற்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறு நிகழும் தற்கொலையால் சராசரியாக 135 பேர் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டிற்கு 108 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடந்த 48 ஆண்டுகளில் தற்கொலை 60 % உயரந்துள்ளது. 15- 24 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதும் தற்கொலையே. ஏமாற்றம்,உறவுகளைப் பிரிதல்,இயலாமை, குற்ற உணர்வு,நோய்ää கடன், அவமானம்,காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி என பல காரணங்கள் தற்கொலைக்குள் தள்ளுகின்றது.
தற்கொலை எண்ணம் கொண்டுள்ள நபர்களில் வெளிப்படும் அறிகுறிகள்
தற்கொலை எண்ணமுடையவர்கள் உடல், உள, மனவெழுச்சி, நடத்தை ரீதியில் பல அறிகுறிகளை வெளிப்படுத்துவர். இவர்கள் மரணம் பற்றி கதைத்தல், எழுத்தாக்கங்கள்,ஓவியங்களில் மரணம் பற்றி குறிப்பிடல், உடலாலும், உள்ளத்தாலும் பலம் குன்றியிருப்பதாக எண்ணல், தற்கொலை செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையின்மை, திடீரென தினக்குறிப்பு எழுதல், கடுமையான சோர்வு,நம்பிக்கையில்லாத் தன்மை, திடீரென உணவில் நாட்டமின்மை, குற்றவுணர்வு, குழப்பமான சிந்தனையூடாக நடத்தை மற்றும் உணர்ச்சி மாற்றங்களைக் கொண்டிருப்பர்.
தன்னம்பிக்கை இல்லாதவர்களே தற்கொலை செய்கின்றனர் எனக் கருதுவது தவறானது. வாழ்வில் பெரும் வெற்றி பெற்ற பலரும் இந்த தவறுகளை இழைக்கின்றனர். இங்கு யாரும் இறக்க வேண்டும் என இவ் முடிவுகளை எடுப்பதில்லை. தன்னை அணைத்து, ஆறுதல் கூற யாரும் இல்லாததினாலே அதற்கு தீர்வாய் பலர் இம் முடிவை எடுக்கினறனர்.
தற்பொழுது அறிவியல் உலகில் தவறான இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பகாலங்களில் உறவுகள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். பிரச்சினைகள் எதுவாயினும் அவர்களுடன் கலந்து பேசின் ஒரு தீர்வு கிடைக்கும் என இருந்தனர்.
ஆனால் இன்று பணம், அந்தஸ்து, தனிக்குடும்ப வாழ்வு, இணையத்தள மோகம் என்பவற்றால் ஒரே வீட்டில் இருப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பேச முயற்சிப்பதில்லை. தோல்வி, மனக் கசப்பு, குழப்பங்கள் எழும் சந்தர்ப்பங்களில் சரியான அன்பும், அரவணைப்பும் இருந்தாலே தற்கொலையைத் தவிர்க்கலாம்.
பெற்றோர்கள் ஓயாமல் ஓடிச் செல்வங்களைச் சேகரிப்பதை நிறுத்தி பிள்ளைகளிடம் நேரத்தை ஒதுக்கி பேச வேண்டும். பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற துணையாய் இருங்கள்,வெற்றி,தோல்வி என எந்த சூழலிலும் அன்பும், ஆதரவும் உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். உண்மையில் குடும்பம் என்ற இடத்தில் மட்டும்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு குட்டிக் கதை
ஒரு பால் வியாபாரிக்கு சுற்றிப் பல இடங்களில் கடன். கடனைத் தீர்ப்பதற்கு வங்கிகளில் பல உதவி கேட்டும் கிடைக்கவில்லை. மன விரக்தியால் கோயிலுக்கு சென்றார். கோயிலில் பலர் கடவுளின் வரம்பெற வரிசையில் நின்றனர். இவர் வரிசையின் இறுதியில் நின்றமையால் தரிசனம் பெற முடியவில்லை. தரிசனம் கிடைக்காததும் அவருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கை தொலைந்து போகக் காரணமாகியது.
இனி “நான் வாழக் கூடாது. தற்கொலை செய்யலாம்” என எண்ணி மலை உச்சிக்குச் சென்றார். மலை உச்சியில் அதிகளவானோர் தற்கொலை செய்வதற்கு வரிசையில் நின்றனர். இவரும் அவ்வரிசையில் நின்றார். அங்கே முன் வரிசையில் ஒரு முதியவர் தான் தற்கொலை செய்யாமல்,பின் வரிசையில் நிற்போர் தற்கொலை செய்வதற்கு இடம் விட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்.
அதைப் பார்த்த வியாபாரிக்கு புரியவில்லை. பின் வியாபாரி குதிக்கும் நேரம் வந்தது. அப்போது வியாபாரி முதியவரைப் பார்த்துக் கேட்டார். “ஏன் நீங்கள் குதிக்காமல் தற்கொலை செய்ய இடம் விட்டுக் கொடுக்கிறீர்கள்” என்று. அதற்கு முதியவர் “எனக்கு 60 வயதாகிவிட்டது. நான் வாழ்க்கையை ஓரளவு வாழ்ந்துவிட்டேன். முதுமையின் கோரம் என்னை பயமுறுத்துகிறது. அதனால் தற்கொலை செய்யலாம் என்று வந்தேன். பள்ளத்தைப் பார்க்க பயம் வந்துவிட்டது. வேறு யாராவது குதித்தால் அவர்களின் துணிவைப் பார்த்து குதிக்கலாம் என காத்திருந்தேன். பலர் வந்து குதித்தனர். பார்த்ததும் பயம் தெளிந்து, சிந்தனை பிறந்தது.
துணிவாக இறப்பதை விட துணிவாக முதுமையை எதிர்கொள்ளலாம் என இதை ஒவ்வொருவரிடமும் கூறுகிறேன்” என்றார். இதைக் கேட்ட வியாபாரி துணிவோடு தற்கொலை செய்வதை விட துணிவோடு வாழ்வோம் என தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இதில் வியாபாரி எதிர்கொண்ட நீண்ட வரிசைதான் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,நெருக்கீடுகள் ஆகும். இங்கு முதியவராய் ஆலோசணை கூறியவர் எமது நண்பராகவும், உறவினராகவும் எம்முடனே இருப்பர்.
தற்கொலை எண்ணத்திலிருந்து பாதுகாக்க
தற்கொலையின் ஆரம்ப கட்டம் மனஅழுத்தம். மனஅழுத்தத்திலிருப்பவர்கள் தமது கஷ்டத்தை பகிர்ந்துகொண்டால் உடனே அறிவுரை வழங்காமல் பொறுமையாகக் காது கொடுத்து கேட்க வேண்டும். “இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிவிடும், இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தைகளை மனஅழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்டு “ உன்கு எப்ப கஷ்டம் வரும் போதும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்” எனப் பேசி நம்பிக்கையூட்ட வேண்டும்.
தற்கொலை எண்ணம் தோன்றும் போது சிந்தனையை மாற்றும் வகையில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை சிந்தித்தல் அல்லது அதை நாட்குறிப்பேட்டில் எழுதுவதால் தற்கொலை என்ற எண்ணம் மறைந்து செல்கின்றது. தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம் தனி ஒரு இடம் தேடி,கண்களை மூடி,அமைதியான இடத்தில் படுத்து சிந்திக்க வேண்டும்.
“ஏதோ ஒரு வழியைப் பின்பற்றி, தற்கொலை செய்து, இறந்த உடலை வீட்டில் வைத்திருக்கிறார்கள் எனவும். அப்பொழுது உறவுகளின் அவஸ்தை நிலைகளையும்,அத்துடன் தற்கொலை செய்யும் பெண்களுக்கு முதலில் பிறப்பு உறுப்புக்களே பரிசோதனை செய்யப்படும் என்பதையும் சிந்திக்கும் போது இயல்பாகவே அவ் எண்ணம் மறையக்கூடும்.
தற்கொலை எண்ணம் உடையவர்களை அடையாளம் காணும் போது அன்பும்,ஆதரவும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். அவர்களின் சுய மதிப்பீட்டை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் வெற்றியடைந்த விடயங்கள், பிரச்சினைகளுக்கு சவால்கொடுத்த வழிமுகைளை எடுத்துரைக்க வேண்டும். குடும்பப் பொறுப்புக்களில் ஈடுபட வைத்தல்,சமூக ஆதரவைப் பெற்றுக்கொடுத்தல், ஆன்மீக வழி திசை திருப்புதல்,வாழ்வின் அர்த்தம் காண வைத்தல் என்பன அவர்களின் எண்ணங்கள் மறைந்து போகக் காத்திரமாய் அமையும்.
பல தோல்விகளில் எப்பொழுது விழுந்தாலும் திரும்பத் திரும்ப எழுந்து வந்தவர்களே இன்றைய சாதனையாளர்கள். தற்கொலை கோழைத்தனம். அதில் வீரத்தனமும் உண்டு. அந்த வீரத்தனத்தை வேறு வழியில் திசை திருப்பி, சாதனை படைத்து வாழத் துணியுங்கள். வாழ்வில் பெறும் தோல்விகள் முயற்சிக்கானது மட்டுமே வாழ்க்கைக்கானது அல்ல எனத் துணிந்து சாதனை படையுங்கள்.
சொ. திவ்யா (உதவி விரிவுரையாளர்,யாழ்.பல்கலைக்கழகம்)