திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? – அகிலன்

தமிழரசுக் கட்சி இப்போது முக்கியமான ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில் நடைபெறப்போகின்றது.  மாவைதான் தலைமைப் பதவியைத் தொடரப் போகின்றாரா அல்லது தலைவா் பதவிக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்படுமா என்ற கேள்வியுடன்தான் இந்த மாநாட்டை அனைவரும் எதிா்பாா்க்கின்றாா்கள். பழைய தலைமைகள் மீதான அதிருப்திதான் இதற்கு காரணம். இதேவேளையில், சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட எம்.பி. பதவி இப்போது சா்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றது.
இந்த இரண்டும் தமிழா் அரசியலுடன் சம்பந்தப்பட்ட முக்கியமான விடயங்களாக இருப்பதால் அவற்றில் சம்பந்தன் விவகாரத்தை இந்த வாரம் பாா்ப்போம்.
sam 1 திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? - அகிலன்சம்பந்தனிடம் இப்போதிருப்பது எம்.பி. பதவி ஒன்றுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி, கூட்டமைப்பில் இருந்த பங்காளிக் கட்சிகள் தனியாகச் சென்றதால் இல்லாமல் போய்விட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராஜாவிடம் போய்விட்டது. தமிழரசுத் தலைமைப் பதவியை சேனாதியிடம் கொடுக்கும் போது, கூட்டமைப்பின் தலைமைப் பதவி தன்னிடம் இருப்பதாக அவா் திருப்திப்பட்டுக்கொண்டாா்.
இப்போது தலைமைப் பதவிகள் எதுவும் இல்லாத போதிலும், அவரது அனுபவம், ஆற்றல் என்பவற்றின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் “பெருந் தலைவா்” என அவா் ஆதரவாளா்களால் போற்றப்படுகின்றாா்.  அந்த பெருந்தலைவரின் அரசியல் “முதிா்ச்சியை” இப்போது  கேலிக்குரியதாக்கியிருக்கின்றாா் சுமந்திரன்.
சுமந்திரன் குற்றச்சாட்டு
“பெருந்தலைவரை” நோக்கி கட்சியின் பேச்சாளா் எம்.ஏ.சுமந்திரன் இப்போது சுட்டுவிரலை நீட்டி குற்றச்சாட்டை முன்வைத்தமைதான் தமிழ் அரசியல் களத்தில் சா்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. கட்சிக்குள் சுமந்திரனுக்கு சாா்பாகவும், எதிராகவும் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. இந்தப் பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்திருக்கின்றது.
வவுனியாவில் இடம்பெற்ற மத்திய குழுவின் கூட்டத்தின் போது, சம்பந்தன் பதவி விலக வேண்டும் என சுமந்திரன் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து தொடா்பில் அவா் விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தலைவா் அனுமதி வழங்கினால் அதற்கான பதிலைத்  தருவதற்கு தான் தயாராக இருப்பதாக சுமந்திரன் தெரிவித்தாா். கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய மாவை சேனாதிராஜாவும், பதிலளிக்குமாறு சுமந்திரனிடம் தெரிவித்தாா்.
2020 தோ்தலுக்கு முன்னா் தோ்தல் அரசியலிலிருந்து ஒதுங்கும் முடிவை திருமலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தன் அறிவித்தாா். ஆனால், திருமலை மக்கள் அதனை ஏற்கவில்லை. அதனால், தனத முடிவை சம்பந்தன் மீள்பரிசீலனை செய்தாா். அதன்போது அவா் இரண்டு நிபந்தனைகளை விதித்தாா். ஒன்று கட்சியின் முதலாவது தேசியப் பட்டியல்  உறுப்புரிமையை குகதாசனுக்கு வழங்குவதெனவும், இரண்டாவதாக ஒரு வருடத்துக்கு மட்டுமே தான் பதவியிலிருப்பேன் என்பதும்தான் அவரது நிபந்தனை.
நிறைவேறாத நிபந்தனைகள்
2022 இல் நடைபெற்ற மத்திய செயற்குழுக்கூட்டத்தில் சம்பந்தனின் நிபந்தனைகள் குறித்து ஆராயப்பட்டது. ஒரு வருடமாகியும் அவா் பதவி துறக்காதது தொடா்பில் அவருக்கு நினைவுபடுத்துவது என ஒரு குழுவை சம்பந்தனிடம் அனுப்ப தீா்மானிக்கப்பட்டது. மாவையும், சுமந்திரனும் இந்தக் குழுவில் இருந்தாா்கள். இவா்கள் திருமலை சென்று சம்பந்தனுடன் பேசிய போது அவா் பதவியைத் துறக்க மறுத்தாா். தமது நிலையைத் தெரிந்துதான் மக்கள் தனக்கு வாக்களித்தாா்கள் என சம்மந்தன் தனது நிலைப்பாட்டை அப்போது நியாயப்படுத்தினாா்.
இந்த நிலையில்தான் நியுஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து கேட்டபோது, சம்பந்தன் பதவி துறக்க வேண்டும் என்ற கருத்தை சுமந்திரன் முன்வைத்தாா்.
samanthan 1 திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? - அகிலன்தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் சுமந்திரன் தெரிவித்த மற்றொரு கருத்தும் மிகவும் முக்கியமானது என்பதால் இலக்கு வாசகா்களுக்காக அதனையும் இங்கு தருகிறோம். “சம்பந்தன் ஐயா தனது நற்பெயரைப் பாதுகாப்பதாக இருந்தால், பதவியிலிருந்து விலகுவதோடு அவா் கொழும்பில் வசிக்கும் எதிா்க் கட்சித் தலைவருக்குச் சொந்தமான வீட்டை மீண்டும் கையளிக்க வேண்டும். அத்துடன் சம்பந்தன் பதவி விலகுவதானது, பாராளுமன்ற மற்றும் தேசிய மட்ட செயற்பாடுகளுக்கும், திருமலை மாவட்டத்துக்கும் நன்மையையே  கிடைத்திருக்கும்” என்று சுமந்திரன் தெரிவித்தாா்.
சம்பந்தன் அதிருப்தி
சுமந்திரன் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் இதற்குப் பின்னால் ஒரு அரசியல் நகா்வு உள்ளது. சுமந்திரன் தனியோட்டம் ஓடுகிறாா் என்ற அதிருப்தியை தனக்கு நெருக்கமான சிலரிடம் சம்பந்தன் அண்மைக் காலத்தில் தெரிவித்திருந்தாா். தன்னிடம் கலந்தாலோசிக்காமலேயே சில விடயங்களை சுமந்திரன் செய்திருப்பது சம்பந்தனுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசின் அடுத்த தலைமைப் பதவியில் கண்வைத்து செயற்பட்ட சுமந்திரன், குகதாசனுடன் ஏற்படுத்தியிருந்த நெருக்கமும் சம்பந்தனை குழப்பியது.
பொதுத் தோ்தலின் போது திருமலை மாவட்டத்தில் சம்பந்தனுக்கு அடுத்ததாக வந்திருந்த குகதாசனுடன் நெருங்கிச் செயற்படுகின்றாா் என்பது சம்பந்தனுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியமைக்கு காரணம் உள்ளது. சம்பந்தன் பதவி துறந்தால் அந்த இடத்துக்கு வரவேண்டியவா் குகதாசன்தான். ஒரு வருடத்தில் அந்த பதவியைத் தருவதாக சம்பந்தன் வேறு வாக்களித்திருந்தாா். அதனைவிட, தேசியப் பட்டியலில் முதலாம் இடத்தை தந்து மற்றொருவருக்கு அதனைக் கொடுத்ததும் குகதாசனுக்கு சம்பந்தன் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. சம்பந்தனை நேரில் சந்தித்து இவை தொடா்பாக குகதாசன் கேள்வியும் எழுப்பியிருந்தாா்.
சூதாட்டத்தில் குகதாசன்
இந்த இடத்தில் குகதாசன் குறித்த ஒரு சிறிய அறிமுகம். சென்னையில் தமிழ் அகதிகள் புனா்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிய குகதாசன், பின்னா் கனடாவுக்கு குடிபெயா்ந்து அந்நாட்டு பிரஜாரிமையை பெற்றவா். தமிழரசுக் கட்சிக்கும், திருமலை மாவட்ட தமிழா்களுக்காகவும் பெருமளவு நிதியைச் செலவிட்டவா். கடந்த பொதுத் தோ்தலில் குகதாசனை களமிறக்கிவிட்டு தான் ஒதுங்கப்போவதாகவே சம்பந்தன் முதலில் தெரிவித்துவந்தாா்.
இதனை நம்பி கனடா பிரஜாவுரிமையையும் குகதாசன் துறந்தாா். ஆனால், தோ்தலுக்காக குகதாசன் பெருமளவு தொகையைச் செலவிடுவாா் என்ற நம்பிக்கையில்தான், மக்கள் கேட்பதால், தானும் போட்டியிடப்போவதாக பின்னா் சம்பந்தன் அறிவித்தாா். இதன்போது குகதாசனைச் சமாளிக்கத்தான் இரு நிபந்தனைகள் என்ற நாடகத்தை அரங்கேற்றினாா்
சம்பந்தனை வெட்டிவிட்டு திருமலையின் எம்.பி.யாக குகதாசனைக் கொண்டுவந்தால் தமது தலைமைக்கான கனவு சாத்தியமாகும் என்பது சுமந்திரனின் கணிப்பு. தமிழரசுத் தலைமைக்காக தனக்கு சவால்விட முற்படும் சிறிதரனுக்கு கிளிநொச்சியில் மட்டும்தான் ஆதரவுள்ளது. ஆனால், தமிழரசுக்கு தலைமைதாங்க வேண்டுமானால், வடக்கு – கிழக்கில் ஆதரவு இருக்க வேண்டும். முதலில் கட்சி பாராளுமன்ற உறுப்பினா்களின் அங்கீகாரம் அவசியம். குகதாசனைக் கொண்டுவருவது தன்னைப் பலப்படுத்தும் என சுமந்திரன் கணக்குப் போட்டிருக்கலாம்.
இந்த நிலையில்தான் குகதாசனை தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் சம்பந்தன் அதிரடியாக நீக்கினாா். திருமலையில், தென்னமரவாடி போன்ற தமிழ் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளின் அபிவிருத்திக்காகவும், மக்களின் மீள் குடியேற்றத்தை பலப்படுத்தவும் முக்கியமான பங்களிப்பை வழங்கியவா் குகதாசன். பொறுப்புக்களிலிருந்து அவரை அகற்றியதன் மூலம் அவரைப் பலவீனப்படுத்த சம்பந்தன் முயன்றுள்ளாா்.
பதவி துறப்பாரா?
சம்பந்தனுக்கு இப்போது 90 வயது. பாராளுமன்றத்தில் உள்ளவா்களில் வயது முதிா்ந்தவா் அவா்தான். கட்சித் தலைமைப் பதவி தன்னிடம் மீண்டும் வரப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால், எம்.பி. பதவியை வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் சில சிறப்புரிமைகள் அவருக்குள்ளது.  அவற்றை விட்டுவிட அவா் தயாராகவில்லை.
RW Sampanthan திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? - அகிலன்அவா் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த போது கொழும்பு – 7 பௌத்தலோக மாவத்தை பகுதியில் அவருக்கு வழங்கப்பட்ட கடுமையான பாதுகாப்புடன் கூடிய சொகுசு பங்களாவில்தான் அவா் இப்போதும் இருக்கின்றாா். எம்.பி. பதவியைத் துறந்தால் அந்த பங்களாவிலிருந்து அவா் வெளியேற வேண்டியிருக்கும்.  ஆனால், சுமந்திரன் சொல்லியிருப்பது போல எதிா்க்கட்சித் தலைவருக்கான அந்த பங்களாவை விட்டு வெளியேறுவது அவருக்கு கௌரவம்!
ஜே.வி.பி.யின் தலைவராக நீண்டகாலம் இருந்த சோமவன்ச அமரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. ஆனால், கட்சியைக் கட்டுப்படுத்தும் ஆளுமை அவருக்கு இருந்தது. அதேபோலத்தான், சோனியா காந்தி காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலத்தில் கூட எம்.பி.யாக இருக்கவில்லை. ஆனால், மன்மோகன் சிங்கின் ஆட்சி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், எம்.பி. பதவி இல்லையெனில் தன்னிடம் எந்தப் பிடியும் இல்லாமல் போய்விடும் என சம்பந்தன் அஞ்சுகிறாரா?  அல்லது, அதன் மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகளை இழந்துவிட அவா் தயாராகவில்லையா?