‘கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவர் அல்லாத மக்களின் உரோமாபுரி திருக்கோணேஷ்வரம்” என வர்ணித்துள்ளார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துக்கீச பாதிரியார் குவைரோஸ். கி. முன் 6000 வருடங்களுக்கு முன் இலங்கையை ஆண்ட அராவணேஷ்வரன் என்னும் மன்னன் வழிபட்ட 7 ஆம் நாற்றாண்டில், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட குளக்கோட்ட மன்னனும் கஜபாகு மன்ன னும் திருப்பணி செய்த உலகப்புகழ் பெற்ற ஒரு ஆலயம் திருக்கோணேஷ்வரம்.
ஈழத்தில் காணப்படும் நகுலேஸ்வரம், முனீஷ்வரம், திருக்கேதீஸ்வரம், தொண்டேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்களில் இதுவுமொன்றே. திருகோணமலை என்பது தெயவீகத்தன்மை வாய்ந்தது என்று பொருள்படும். இதற்கு கோகண்ணம், கோகர்ணம், திருகோணமலை, திருக்குன்றாமலை, கோணமலை, மச்சேந்திர பர்வதம், மச்சேஸ்வரம், தெக்கண கைலாசம், தென்கையிலாசம், எனப் பல பெயர்கள் வருவதற்கு காரணம் திருக்கோணேஸ்வரம் என்னும் உலகப்புகழ் கொண்ட ஆலயமாகும். இலங்கையின் கிழக்குக் கரையில் திரிகோண வடிவில் அமைந்திருக்கும் மலையின் உச்சியில் கோணேஷ்வரம் அமைந்திருப்பதனால், இதற்குத் திருக்கோணேஸ் வரம் என்ற நாமம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பி யருடைய ஆட்சிக்காலத்தில் அதனை சுவாமி மலை என்றும் கோணேஷர் மலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.
திருகோணமலைக்கென்று ஒரு விஷேட மான நாகரீகம் இருந்துள்ளமையால் திருகோண மலை நாகரீகமும் மொஹஞ்சதாரோ நாகரீகமும் ஏறக்குறைய ஒரே காலத்துக்குரியவையென ஆய் வாளர்கள் குறிப்பிடுவர். திருக்கோணேஷ்வரத்தின் தெய்வீக எழுச்சியை திருஞான சம்பந்தர் எவ்வாறு திருக்கோணேஷ்வரப்பதிகத்தில் பாடினாரோ, அதே போல் பின்வரும் நூல்கள் விரிவாக எடுத்து இயம்புகின்றன. தெட்ஷண கைலாசபுராணம், திருக்கோணாசலபுராணம், கோணேசர் கல்வெட்டு, திருமுறைகள், யாழ்ப்பாண சரித்திரம், தமிழரும் இலங்கையும், திருகோணமலை அந்தாதி என்பன போன்ற திருக்கோணேஸ்வரம் தொடர்பான பல நூல்கள் எழுந்தபோதும், கோணேஷ்வரம் பற்றிய நூல்களிலே தட்சஷண கைலாசபுராணமும் திருக்கோணாசல புராணமும் பிரசித்தி பெற்றவை. தெட்ஷண கைலாசபுராணம் இது கோணேஷர் ஆலயம் தொடர்பான தல புராணமாகும். இவ்விரு புராணங்களில் கூறப்படும் கர்ண பரம்பரைக்கதைகளின்படி கி. முன் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராவணேஷ்வரன் வழிபட்ட தலம் கோணேஷ்வரம் எனவும். இராமாயண இதிகாசத்தில் உள்ளபடி, இராவணன் தனது தாயாரின் விருப்பத்துக்கு அமைய லிங்கம் ஒன்று பெறுவதற்காக அங்கு தவம் செய்தான் என்று கூறும் கதை மூலம் இது மிகப் பழமை வாய்ந்த ஆலயம் எனவும் பெருமைப்பட முடிகிறது.
திருக்கோணேஷ்வரம் பற்றி ஏழு கல்வெட்டுகள் உள்ளதாக பேராசிரியர் சி. பத்ம நாதன் குறிப்பிடுவார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த துண்டாமன சமஸ்கிருத கல்வெட்டு, 14 ஆம் நூற்றாண்டுக்குரிய கங்குவேலி கல் வெட்டு. கோட்டை வாசல் கல் வெட்டு. கந்தளாய்க்கல் வெட்டு, 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த மானாங்கேணி கல்வெட்டு, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலாவெளி கல்வெட்டு. இவை போன்றே பெரிய குளக் கல்வெட்டு, பள மோட்டை கல் வெட்டு என திருகோணமலைப் பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட கல் வெட்டு கள் திருக்கோணேஷ்வரத்துடன் தொடர்புபட்ட கல் வெட்டுகளாகக் காணப்படுகிறன.
1236 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப் பற்றி ஆண்ட வீரபாண்டியன் என்ற மன்னன் கோணேஷ்வரர் ஆலயத்தில் மீன் இலச்சினையைப் பொறித்து சென்றதாகவும் மகாசேனன் என்ற மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் கி.பி 276. 303 கோகோணம்என்று அழைக்கப்படும் கோணேஷ்வரத்தை இடித்து, அதற்கு அருகில் பௌத்த விகாரையை அமைத்தான் என மஹா வம்சமும் 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் இவ்வாலயத்தை இடித்து கோட்டை யொன்றைக் கட்டினர் என வரலாற்று ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர்.
கோணேஷர் ஆலயம் பற்றி ஆதி கால புராணங்கள் கூறும் செய்திகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். வட மொழியில் எழுதப்பட்ட செவ்வந்தி புராணத்திலும் குப்த பேரரசு காலத்தில் எழுதப்பட்ட வாயு புராணத்திலும்( கி.பி 4, 5 ) கோணேஷ்வர ஆலயத்தின் தோற்றம் பற்றி பின் வருமாறு கூறப்படுகிறது.
சிவன் உமா தேவியுடன் திருக்கைலாசத்தில் வீற்றிருக்கிறார். மும்மூர்த்திகளும் தேவர்களும் கணநாதர்களும் வணங்கி நிற்க ஆதி சேடனுக்கும் வாயுபகவானுக்கும் இடையில் ஏற்பட்ட யார் பலசாலிகள் என்ற கடும் போரில் அண்டங்கள் அசைந்தன. தேவர்கள் அஞ்சி நடுங்கினர். வாயுபகவான் சிவன் எழுந்தருளி இருந்த திரிகோண சிகரத்தையும் வேறு இரு சிகரங்களையும் பிரித்தெடுத்தது கண்ட சிவன் வாயு பகவானை நோக்கி நீ பறித்தெடுத்த சிகரங்களில் திரி கோண சிகரத்தை ஈழநாட்டிலுள்ள கிழக்குச் சமுத்திரக்கரையில் வைப்பாயாக என்றும் ஏனை இரு சிகரங்களையும் திருக்காளத்தி என்னும் இடத்திலும் திருச்சிராப்பள்ளியிலும் வைக்கும்படி திருவாய் மலர்ந்தருளியதாக மேற்படி புராணங்கள் இயம்புகின்றன.
திரிகோணாசலம் என்ற மலையை வசந்த ருதுவில் சித்திரை மாதத்தில் ஞாயிறு தினத்தில் அத்த நட்சத்திரமும் விருத்தி யோகமும் கூடிய பௌர்ணமி திதியில், திரி கூட மலையின் வட பாகத்தில் அம்மலையை வாயுபகவான் வைத்தார். அன்று முதல் இம்மலை தெட்ஷண கைலாசம் என பெயர் பெற்றது. இதற்கு வெள்ளி மலை தரிகூடம் தரிகோணமலை திருக்கோணமலையென அழைக் கப்பட்டு வந்துள்ளது.
இத்திரிகோண பீடத்தில் 9 வீதிகள் அமைந் திருப்பதாகவும், ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு வகை சிறப்புகளைக் கொண்டதாகவும் வாயு புராணம் இயம்புகிறது. இத்தகைய சிறப்புக் கொண்ட ஆலயம் பல கடல் கோள் அழிவுகளுக்கு அகப்பட்டு பல காலங்களில் புனரமைப்புச் செய்யப்பட்டதாகவும், அவ்வகையில் கி. முன் 3544 ல் ஏற்பட்ட கடல் கோள் காரணமாகவும், உதாரணமாக சுமார் 12000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் 7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் சுமார் 5 கடல் கோள்கள் ஏற்பட்டதன் காரணமாக ஆலயம் அழிக் கப்பட்டதாக வெசினரும், டெனற் என்பவரும் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர். இன்னொரு ஆய்வின் படி முதலாவது கடல்கோள் கி. மு 2378 லும் இரண்டாவது கடல் கோள் கி. மு 504 ஆம் ஆண்டிலும் மூன்றாவது கடல் கோள் கி. மு.306 லும் ஏற்பட்டதென சூழல் ஆய்வாளர் குறிப்பிட்டு, முதலாவது கடல் கோள் காரணமாக இலங்கை, இந்தியக்கண்டத்திலிருந்து பிரிந்தது என்றும் மூன்றாவது கடல்கோள் காரணமாக இலங்கைக்கு பேரழிவு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
டெனற் என்ற ஆய்வாளர் கருத்துப்படி மூன்றாவது கடல் கோள் காரணமாகப் புகழ் பெற்ற ஆலயமொன்று அழிந்திருப்பதாகவும், அதுவே கோணேஷ்வரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே தற்போது பூஜை நடைபெறும் மலைப்பாறைக்கு கீழ் தொன்மையான ஆலயத்தின் எச்சங்கள் காணப்படுவதாக குறிப்பிடுவர்.
அழிந்து போன ஆலயத்தை பல்லவர் கால மன்னர்களோ அன்றி சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட காலத்திலோ அழிந்துபோன ஆலயம் புனரமைக்கப்பட்டு, கற்கோயில் ஒன்றுநிர்மாணிக்கப்பட்டிருக்கலாமெனக் கருதப்படு கிறது. இது தொடர்பாகவே குளக்கோட்டன் என்ற மன்னன் இவ்வாலயத்துக்கான திருப்பணியை செய்தான் எவும் அவனைத் தொடர்ந்து கஜ பாகு மன்னன் புனரமைப்பு வேலைகளைச் செய்தான் எனவும் பல வரலாற்றுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் போர்த்துக்கீசர் ஆலயத்தை இடிப்பதற்கு முன் 1624 பழமை யான ஆலயமொன்று கடல் கோளினால் அழிந்திருக்கிறது. அழிந்ததன் பின் மூன்று கோயில்கள் நிர்மாணிக்கட்டுள்ளன. மலையடி வாரம் மலை உச்சி மலை நடுப்பகுதி. இம் மூன்று கோயில்களும் கி முன் 3000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. இதை குளக்கோட்டன் என்று கூறப்படும் மன்னன் திருப்பணி செய்ததாகவும் இதையே போர்த்துக் கேயர் இடித்திருக்கலாமெனவும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோணேஷ்வரத்துக்கும் இலங்கை வேந்தன் இராவணன் சோழ மன்னன் குளக்கோட்டன் கஜபாகு மன்னன் திருஞான சம்பந்தர் ஏனைய நாயன்மார்கள் என்போருக்குமிடையேயுள்ள தொடர்புபற்றிக் கூறும் புராணங்களில் முக்கிய மானதாக காணப்படுவது தெட்ஷண கைலாச புராணமாகும். இராச குருவான பண்டிதராசர் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க மகா வித்துவான் சிங்கை செகராச சேகரன் இதைப் பாடினார் என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடு கிறார்.
இராவணன் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்ற லிங்கம் ஒன்றைப் பெறுவதற்காக திருக்கோணேஷப் பெருமானிடம் வருகிறான், கடும் தவம் இருக்கிறான் எம் பெருமான் காட்சி தரவில்லை கடுங் கோபங் கொண்ட தசக்கரீவன் மலையை அசைக்க முயற்சிக்கிறான். முடியவில்லை தன்னிடமுள்ள சந்திரகாசம் என்னும் வாளினால் வெட்டினான். அதுவே இன்றுவரை இராவணன் வெட்டு என அழைக்கப்படுகிறது. தனது உடலை வருத்தி சாம கீதம் பாடினான். இரக்கம் கொண்ட சிவன் காட்சி அளித்து லிங்கத்தை அளித்தது கண்டு விஷ்ணுபகவான் இவன் இந்த இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து விட்டால், உலகில் இவனை வெல்ல யாராலும் முடியாது எனப் பொறாமை கொண்டு இராவணனின் தாயார் இறந்து விட்டதாக பொய் சொல்லி லிங்கத்தை சூழ்ச்சி செய்து கவர்ந்ததாகவும் தாயாரின் ஈமக் கிரிகைகளைச் செய்யக் கிழத் தோற்றத்தில் வந்த விஷ்ணுபகவானை வேண்ட, கன்னியா வெந்நீரூற்றுக்களை பகவான் ஆக்கியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன.
கோணேஷ்வரத்தின் மான்மியங்களை கூறு வதில் தலைசிறந்த புராணமாக காணப்படுவது கேணேஷர் கல் வெட்டு கவி ராஜவரோதயன் என்னும் பல்லவரால் பாடப்பட்ட இந்நூல் குளக்கோட்ட மன்னன் கேணேஷ்வரத்தில் நிறைவேற்றிய திருப்பணிகளையும் அம்மன்னன் திட்டம் பண்ணிய நியமங்களையும் தீர்க்க தரி சனங்களையும் உள்ளடக்கியது. கோணேஷர் ஆலயத்துக்கு குளக்கோட்ட மன்னன் புரிந்த திருப் பணிகள் கயபாகு மன்னன் ஆலயத்துக்குச் செய்த திருப்பணிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.
கோணேஷர் கல் வெட்டில் கூறப்பட்ட செய்திப் படி மனு நீதி கண்ட சோழன் மரபில் வந்த வரராமதேவன் என்னும் மன்னனுடைய மகனான குளக்கோட்டன் ஆலயத் திருப்பணியை செய்தது மட்டுமன்றி நிலபுலங்களைத் தானம் பண்ணியமை கந்தளாய்க்குளத்தை நிர் மாணித்தமை குடி மக்களை குடியேற்றியமை போன்ற பல்வேறு கைங்கரியங்களை ஆற்றினான் என கோணேஷர் கல் வெட்டு கூறுகிறது.
இத்தகைய புகழ் பூத்த ஆலயத்தை 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசர் திருகோணமலையை கைப்பற்றியதோடு ஆலயத்தின் அருட் சிறப்பை யும் திரவியங்களையும் கண்டு பொறாமை கொண்ட போர்த்துக்கீச தளபதி டி சில்வா என்பவன் 1620 ஆண்டளவில் ஆலயத்தின் வரை படங்களை வரைந்து திட்ட மிட்ட முறையில் 1624 ஆம் ஆண்டு சித்திரை மாதமளவில் தனது படையினரை பூசகர் போல் வேடம் தரிக்கப்பண்ணி ஆலயத்துக்குள் நுழைந்து தேவலோகம் போல் காட்சியளித்த ஆலயத்தைத் துவம்ஷம் செய்தான் செல்வங்களை கொள்ளை அடித்தான், ஆலயக் கற்களைக் கொண்டு பிரட்டிக்கோட்டையை அமைத்தான், ஆயிரக்கணக்கான விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டன. ஏழு அடுக்குக்களை உடைய தங்கரதம் எரித்து சாம்பல் ஆக்கப்பட்டது
ஆலயத்தின் பூசகர்கள் தொண்டர்கள் வரிப்பத்தார் தான தத்தார் முதன்மைக்குருக்கள் ஆகியோர் நாலா திசையும் ஓடினார்கள். அவர்களுடன் ஆலயக் கடமை புரிந்த வன்னியர் ஆட்சியின் பங்குதாரர்கள் படையாண்ட குடிகள் முத்து சங்கு எடுப்போர் என ஓடியவர்கள் அங்கிருந்த விக்கிரகங்களை காப்பாற்ற எண்ணி தம் கைக் கெட்டிய விக்கிரகங்களை எடுத்துக் கொண்டு சென்று ஆலயத்துக்கு அருகிலுள்ள கிராமங்களான 10 ஆம் குறிச்சி சின்ன படுக்கை வீரநகர் போன்ற இடங்களில் பாதுகாப்பாக புதைத்துவிட்டு சில விக்கிரகங்களை தம்பலகாமம் எடுத்துக் கொண்டு ஒடினார்கள். இவர்கள் ஓடியதை சாதகமாக பயன்படுத்திய போர்த்துக்கேயப் படைகள் அழகிய வடிவமைக்கப்பட்ட சிற்ப கற்களை உடைத் தெடுத்து கலைச்செழுகை கொண்ட கற்களைக் கொண்டு பிரமாண்ட கோட்டையை கட்டினார்கள்.
சுமார் 325 வருடங்கள் ஆலயம் அழிந்து போய்க்கிடந்த நிலையில், 1939 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கடமை யாற்றிய டாக்டர் பாலேந்திரா போர்துக்கீசர் இடித்த ஆலயத்தை அடையாளம் கண்டு பிடித்த போதும், ஆலயத்தைப் புனரமைக்க முடியாத காரணத்தினால் 1952 ஆம் ஆண்டு போர்த்துக்கல்லில் உள்ள அஜூடா காட்சியகத்துக்குச் சென்று, போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன் இருந்த ஆலயத் தின் படத்தை எடுத்துவந்தார். இதன் பின் 1950 ஆம் ஆண்டுக்குப்பின் ஆலய புனருத்தாரணப் பணிகள் தொடங்கப்பட்டன. 1952 ஆம் ஆண்டு சுவாமி மலையில் தற்காலிக ஆலயம் அமைக் கப்பட்டு அங்கு விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டன. இதன்பின் ஆலய நிர்மாண வேலைகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங் களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் கண்டு எடுக்கப்பட்டு ஆலய புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு 1963 ஆம் ஆண்டு ஆனி 30 ஆம் திகதி முதலாவது கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது.