வவுனியா செட்டிகுளத்தில் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினாலேயே அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் பல ஏக்கர் நெல் பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அரசடிகுளம் மதவுவைத்தகுளம் பாவக்குளம் ஒன்பதாம் யூனிட் பெரியபுளியாலங்குளம் ஆகிய கிராம விவசாயிகளே யானையினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று இரவும் யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடிமனைகளுக்குள் புகுந்தமையினால் உழுந்து பயிர்ச்செய்கைகள் மற்றும் நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத நிலையில் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தாயகத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு புலம் பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டிவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.