தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

826 Views

யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில்கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, இராணுவத்தின் நெருக்குவாரங்கள் நிறைந்த மாதமாக அமைந்து விடுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்,  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவுகூரும் மாவீரர்நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்குகூட அஞ்சும் நிலையும் இன்று வரை தொடர்கிறது.

IMG 7103 1 தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

ஏன் கார்த்திகைப் பூவுக்கும் தடையா? ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்துக் குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்துக் காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது.

இக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும், சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை வித்துத் தாவரங்களில், வெங்காயக் குடும்ப வரிசையாகிய லில்லி(Liliales)ஆசியே என்ற வரிசையில் கொல்சிகேசியே (Colchicaceae) எனப்படும் வகையினைச் சேர்ந்ததாகும்.

IMG 7050 1 தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும்.  6-12 அங்குல நீளமும், 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது.

இது கலப்பை போலத் தோன்றுவதால் இதனைக் கலப்பை எனவும் அழைப்பர். காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம், 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.

பூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர் முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம், 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.

IMG 2456 1 தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும். 6 இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6 அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம், முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே(colchicine) வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பயன்படுத்துவார்கள்.

தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக
இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும். கார்த்திகை திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.

இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும் அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரி காலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால், தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர.

கார்த்திகைப் பூவினை ஏனைய மொழிகளில், சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily) எனவும் அழைப்பர்.

IMG 2450 1 தாயகத்தில் கார்த்திகைப் பூவுக்கும் தடையா..?-கோ.ரூபகாந்

இவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

Leave a Reply