தமிழ் மக்களின் போராட்டங்கள் எழுச்சிபெற வேண்டிய காலம் இது- மட்டு.நகரான்

645 Views

வடகிழக்கு தமிழர்களால் தாயப்பகுதிகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு போராட்டங்கள் நடைபெறும்போது குறித்த போராட்டங்களை ஒரு சில குறித்த பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் பல்வேறு தாக்கத்தினை இன்று சிறீலங்காவிற்கு ஏற்படுத்தியிருக்கின்றது. வடகிழக்கினை இணைத்ததாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். இதனை இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுவரும் இந்த நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட – முன்னெடுக்கப்பட்டுவரும் அநீதிகள் மற்றும் தமிழின படுகொலைகளுக்கு ஒரு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், எதிர்காலத்தில் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கும் இன்று போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் இந்த நேரத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தினை சிங்கள அரசு விரும்பாத போதிலும், அந்த போராட்டங்கள் கிழக்கில் இருந்து தோற்றம்பெறுவதை அடியோடு விரும்பாத நிலையிலேயே தொடர்ச்சியான செயற்பாடுகளை சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது.

பிரித்தானியாவில் அம்பிகா அம்மா அவர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், வடகிழக்கில் தமிழர் தாயகப்பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த போராட்டங்கள் என்பது தமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நிலையில், இதில் தமிழ் மக்களுக்கு எதிரான – அநீதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் பங்கெடுத்து வருகின்றனர். எனினும் இந்த போராட்டங்களுக்கான ஆதரவுத் தளம் என்பது குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களாக இவை காணப்படுகின்றபோதிலும், வடகிழக்கில் செயற்படும் தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகள் இந்த போராட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்காத நிலையென்பது மிகவும் கவலையுடன் பார்க்கவேண்டிய விடயமாகவுள்ளது.

குறிப்பாக பாராளுமன்றத்திலும், பொதுமக்களின் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு ஐ.நா மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம், சிறீலங்கா அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று வாய்கிழிய மேடைகளில் பேசியவர்கள், இன்று இந்த போராட்டங்களை புறக்கணிப்பதன் காரணத்தினை வெளிப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ் தேசியம் சார்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம், போர்க்குற்றம், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம், யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சிறீலங்காவை நிறுத்தவேண்டும் போன்ற கோசங்களை முன்வைத்தே தமிழ் மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். ஆனால் வடகிழக்கில் இன்று முக்கிய காலத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கான ஆதரவுத் தளம் வழங்கப்படவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.

கடந்த காலங்களில் வடகிழக்கில் தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், அந்த போராட்டங்களில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு மட்டுமே அரசியல்வாதிகள் வந்துசெல்லும் நிலையினை காணமுடிகின்றது.

இவ்வாறான நிலையே தமிழ் தேசிய அரசியல் பரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயம் மட்டுமல்ல, தமிழர்களின் இருப்பினை தக்க வைப்பதற்கான ஆரோக்கியமான விடயமாகவும் கருதமுடியாத நிலையாக இருக்கின்றது.

குறிப்பாக இதுவரை காலத்தில் வடகிழக்கில் தமிழர்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி சுயாதீனமாக ஒரு போராட்டத்தினை இதுவரையில் நடாத்தாத நிலையே இருந்துவருகின்றது. இதற்கான காரணம், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தமிழ் தேசிய உணர்வினையும், தமிழ் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டினையும் அவர்கள் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே வடகிழக்கில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் ஈடுபாடு குறைந்து வந்திருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறான தமிழ் மக்களின் நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் பழைய கதையாகவே தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது கிழக்கில் அந்த போராட்டத்தினை தடுப்பதற்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தார்களோ அவ்வாறான செயற்பாட்டை இன்று சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. வடக்கினை விட கிழக்கில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமான கவனத்தினை செலுத்தி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்காத நிலை எதிர்காலத்தில் சிங்கள அரசுக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்தும்.

வடகிழக்கில் ஒரு சிலரே போராட்டம் நடாத்துகின்றனர், தமிழ் மக்களும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை, எனவே சிறீலங்கா தொடர்பான தீர்மானங்களை கைவிடவேண்டும் என்ற அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு இந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகள் துணைபோவது கவலைக்குரியது.

இந்த போராட்டத்தினை மேற்கொள்ளும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு குற்றங்களை சுமத்துகின்றபோதும், அதில் உண்மைத்தன்மையிருந்தாலும், சிவில் சமூக அமைப்புகளை பயன்படுத்தி இந்த நேரத்தில் போராட்டங்களை முன்கொண்டு செல்லவேண்டிய கடமை தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அதனை அவர்கள் செய்வதற்கான தூண்டுதல்களையும், அவர்களை போராட்டங்களில் பங்குபற்றச்செய்வதற்கான செயற்பாடுகளையும் சிவில் சமூக அமைப்புகள் பொறுப்புடன் செய்யவேண்டியதும் கட்டாயமாகும். வெறுமனே அரசியல்வாதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் என்பது எங்களுக்கு பாரிய வெற்றியை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாங்கினை சிவில் அமைப்புகள் தவிர்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் எதற்காக வாக்களித்தனர் என்பதை அவர்களின் ஐந்து வருட சேவைக் காலத்தில் உணர்ந்து கடமையாற்ற வேண்டும். எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தில் உணர்வுமிக்கவர்களை தெரிவுசெய்யவேண்டிய கடமைப்பாடும் தமிழ் மக்களுக்கு உள்ளது.

எவ்வாறாயினும் இன்று தமிழ் மக்களுக்கு நீதிவேண்டி அம்பிகா அம்மா பிரித்தானியாவில் மேற்கொண்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், தமிழர்களுக்கு நீதிவேண்டியும் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் எழுச்சிபெறவேண்டிய காலகட்டத்தில் நிற்கின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு தமிழ் தேசியம் சார்ந்து ஒன்றாக பயணிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply