மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்தியம்புவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.உகண்டாவில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்குப் பதிலாகப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த மாநாடு தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.
குறித்த செய்திக்குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டாவில் நடைபெறுகிறது பல்வேறு நாட்டுச் சபாநாயகர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கூட்டத் தொடரிலே அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை சம்பந்தமான விடயங்களையும், தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து முடிந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவறான அடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக எடுத்து விளக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுநலவாய நாட்டுப் பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்துச்செல்லும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நான் நன்கு பயன்படுத்துவேன்.
இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகள், இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினைகள் மற்றும் நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறிச் செயற்பட்டமை என்பன மிகத்தெளிவாக ஒவ்வொரு தலைவர்களிடமும், பிரதிநிதிகளிடமும் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறியுள்ளேன்.
தமிழ் மக்களுடைய பிரச்சினையை நேரடியாகவே தமிழ் மக்களுடைய பிரதிநிதி என்ற வகையிலே அதுவும் வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பங்கு பற்றும் அனைத்து பிரதிநிதிகளிடமும் எடுத்துரைப்பேன்.
இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.