தமிழ் இனத்திற்கு எதிராக தமிழ் சட்டமாஅதிபர் மேற்கொண்டுவரும் அநீதிகள் ஏராளம்

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களை அழைத்து குருந்தூர்மலை  வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தது உட்பட பல காரணங்களினால் பதவியை ராஜினாமா செய்து உயிர் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டமாதிபராக வருவதற்கு முன் திரு சஞ்சய் ராஜரட்ணம்  எனக்கு எதிராக உச்ச நீதிமன்றில் ஆஜராகி சிரேஷ்ட அரசாங்க ஊழியராக இருந்து கொண்டு நான் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு சார்பாக சக வைத்தியர்களுக்கு  மின்னஞ்சல் அனுப்பியது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வாதாடியதால்  13 மாதங்கள் வேலையும் சம்பளமும் இன்றி அவஸ்தைப்பட்டேன் என சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

பின்னர் உச்சநீதிமன்றம் இவருடைய கருத்துக்களை புறந்தள்ளி மீண்டும் என்னை 13 மாத சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தியது.

இவர் சட்டமாஅதிபராக பதவி ஏற்றதும் சில உதட்டளவில் தமிழ் பேசும் தமிழ் அமைப்புகள் தமிழர் ஒருவர் சட்டமாதிபராக பதவி ஏற்றார் என்று கொண்டாடினார்கள். தற்போது  இலங்கையில் தமிழர்கள் பதவி உயர்வு பெற்று உயர் நிலைக்கு வந்தால் அவர்கள் எப்படிப்பட்ட தமிழர்களாக இருப்பார்கள் என்பதை நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களின் கூற்று வெளிப்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.