தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவை சந்தித்துப் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேசவுள்ளார் எனவும் அவர் கூறினார். அத்துடன், இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வியாழனன்று எதிர்கட்சித் தலைவரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்துள்ளனர் எனவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளமை குறித்து அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.