தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் – தாய் நாட்டிற்கான இராணுவத்தினர்

சிறிலங்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமாயின், தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள தாய் நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பு கோரியுள்ளது.

குறித்த அமைப்பினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய குறித்த அமைப்பின் இணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன பேசும் போது,

கருணா, குமரன் பத்மநாதன் ஆகியோர் வெளியே சுதந்திரமாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை ஏன் வெளியே அனுமதிக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கும் போது,

“பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

முப்பது வருடப் போரின் போது எமது பக்கமும், அவர்கள் பக்கமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர். வடக்கில் இன்று விதவைகள் பலர் உள்ளனர். தெற்கிலும் அதே நிலைதான் உள்ளது. எங்களைத் துரோகி என அவர்களும், அவர்களைத் துரோகி என நாங்களும் மாறி மாறி குற்றம் சுமத்தியவாறே இருக்கின்றோம். ஆனால் விதவைகளும், பிள்ளைகளும் தான் இன்று துன்பப்படுகின்றனர்.

போர்ச் சட்டத்தின்படி உலகில் கைதிகள் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. ஈழப்போர் மனிதாபிமான போர் என்று கூறிய போதும், இறுதியில் இரு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

கோத்தபயா ராஜபக்ஸ, தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, சுனில் ரத்நாயக்க, புலனாய்வுத் துறையின் மேஜர் டிக்ஷன் மற்றும் கோப்ரல் பிரியந்த ராஜகருணா ஆகியோருக்கு பொது மன்னிப்பு அளிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை. ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இரு தரப்பினரிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனை பெற்றவர்கள் சிறைகளில் உள்ளனர். அவர்களில் தான் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோரும் உள்ளனர்.

எனவே சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோருகின்றேன்“  என கேட்டுக் கொண்டார்.