தமிழ்ப் பொது வேட்பாளர் சர்ச்சைகளுக்கு தீர்வு காண யாழ்ப்பாணத்தில் பகிரங்க கருத்தரங்கு – சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், எதிர்வரும் ஜுன் மாதம் 9ஆம் திகதி கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் எம்.ஏசுமந்திரன் குறிப்பிட்டார்.

இது தொடா்பில் சுமந்திரன் மேலும் தெரிவித்தபோது, “கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிவில் சமூகத்தினர், பத்தி எழுத்தாளர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக அதனுடைய காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையிலே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்தவிடயம் சம்பந்தமாக நாங்கள் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை நான் சொன்னபோது அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.

வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடும் வகையில் செய்வதற்கு நான் ஒழுங்கு செய்திருக்கின்றேன். இரு தரப்பில் இருந்தும் சிலரை அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.