குறுகிய கால முன்னறிவிப்புடன் கொழும்பு வந்த இந்திய நிதி அமைசசா் நிா்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை ஊடாக இந்தியா திரும்பியுள்ளாா். இந்திய அமைச்சருடைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே செய்யப்பட்டிருந்தாலும் கூட, ஒரு சில தினங்களுக்கு முன்னா்தான் அது பகிரங்கமாக வெளியிடப்பட்டது.
நிா்மலா சீதாராமன் இந்திய அரசாங்கத்தின் ஒரு சக்திவாய்ந்த அமைச்சா். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவா்களில் ஒருவா். இவற்றைவிட இந்தியாவின் நிதி அமைச்சா் என்ற முறையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து தீா்மானங்களை எடுப்பதில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தியவா். அவரது இலங்கை விஜயம் முக்கியமானதாக நோக்கப்பட்டமைக்கு இற்றைவிட மற்றொரு காரணமும் இருக்கின்றது.
இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் “காரணம் சொல்லப்படாமல்” ஒத்திவைக்கப்பட்ட பின்னணியில்தான், இந்திய நிதி அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்பட்டது. செப்ரெம்பா் 2 ஆம் திகதி ராஜ்நாத் சிங் கொழும்பு வருவாா் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள் இரவுதான் அவரது விஜயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சீனக் கப்பல் சா்ச்சை
அவர் தனது இலங்கை பயணத்தை திடீரென ஒத்திவைத்திருப்பது ஆய்வாளா்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஊகங்களை கிளப்பியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்தான் இந்த திடீா் ஒத்திவைப்புக்கு காரணமாகச் சொல்லப்பட்டது. உத்தியோகபூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும், சீன கப்பல் சர்ச்சைதான் இதற்கு வழிவகுத்தது.
சீன ஆய்வுக் கப்பலை ‘உளவு கப்பல்’ என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாகவும், இந்தியா கவலை தெரிவித்துள்ளது. விஜயத்தை ஒத்திவைப்பதன் மூலம், சீனக் கப்பலை இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதித்ததற்காக கொழும்பிற்கு தனது அதிருப்தியை சூட்சுமமாக இந்தியா வெளிப்படுத்தியது. இந்த நிலையில், இந்திய நிதி அமைச்சரின் விஜயம் முக்கியமானதாக நோக்கப்பட்டது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கைப் பயணம் இருதரப்பு உறவுகளுக்கு மட்டுமின்றி, தமிழா்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நாம் 200” என்ற இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவா் அழைக்கப்பட்டிருந்தாா். தென்னிந்தியாவிலிருந்து மலையகத் தமிழா்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 200 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொருளாதார உதவிகள்
இலங்கை கடுமையான கடன் நெருக்கடி உட்பட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான இந்தியாவின் நிதி உதவி, அதன் அண்டை நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் உதவி பெருமளவுக்குக் கைகொடுத்தது.
கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சி குறித்த அமைச்சர் நிா்மலா சீதாராமனின் உரைகள் முக்கியமானவை. சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நிதி உத்தரவாதத்தை வழங்கும் முதல் இருதரப்பு கடன் வழங்குநராக இந்தியாவின் பங்கு மற்றய நாடுகளும் பின்பற்ற வழி வகுத்தது. அந்த வகையில் இந்தியாவின் நிதி அமைச்சா் என்ற முறையில் மட்டுமன்றி, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவா்களில் ஒருவா் என்ற முறையிலும் நிா்மலா சீதாராமனின் விஜயம் முக்கியத்துவம் பெற்றது.
மகாசங்கத்துடன் சந்திப்பு
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அரசியலில் அதிகளவுக்கு செல்வாக்கை செலுத்தும் மகாசங்கத்தினரையும் கண்டிக்குச் சென்று சந்தித்து பேசினாா். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை இதன்போது அவா் வலியுறுத்தினார்.
சிங்கள – பௌத்த மக்கள் மத்தியில் இந்தியா குறித்த நல்லுணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் புதுடில்லிக்குள்ள அக்கறையை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தியது. மகாசங்கத்தினரைச் சந்தித்து ஆசீா்வாதங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகத்தான் இதனை சாத்தியமாக்கலாம் என புதுடில்லி கணக்குப் போட்டுள்ளது.
அதேவேளையில், இலங்கையில் பௌத்த மதத்தை மேம்படுத்துவதற்காக 107 கோடி ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. இது தொடா்பான தகவல்களையும் பௌத்த மகா சங்கத்தினருக்கு இந்திய நிதி அமைச்சா் தெரியப்படுத்தினாா். பொருளாதார நெருக்கடியின்போதும், தற்போது பௌத்தத்தை வளா்ப்பதற்காக இந்தியா வழங்கும் நிதி உதவிகளுக்கு மகாசங்கத்தினா் தமது நன்றிகளைத் தெரிவித்தாா்கள்.
வடக்கு கிழக்கில்
எவ்வாறாயினும், இந்திய அமைச்சரின் உரையாடல்களில் குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழ் தலைவர்களுடனான சந்திப்புகள் உள்ளடக்கப்படவில்லை. வழமையாக இலங்கை வரும் வெளிநாட்டுத் தலைவா்கள் தமிழ்க் கட்சிகளின் தலைவா்களை சந்திப்பதை “சம்பிரதாயமாக“ கொண்டிருந்தாலும் கூட, இந்திய அமைச்சருடன் அவ்வாறான சந்திப்பு எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
வடக்கு – கிழக்கு தமிழ்த் தலைவர்களைச் சந்திக்காததற்கான சரியான காரணங்கள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. அமைச்சர் சீதாராமனின் பயணம் பொருளாதார ஒத்துழைப்பு, கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் போன்ற பரந்த கருப்பொருள்களில் முதன்மையாக கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த விவாதங்கள் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்களுடன் நேரடியாக ஈடுபட வேண்டிய அவசியமில்லை என அவா் கருதியிருக்கலாம்.
அதனைவிட, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுவான கருத்தொருமைப்பாட்டுக்கு வராத நிலையில், அவா்களுடன் பேசுவதில் அா்த்தமில்லை என்றும், அவருக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்த இந்திய இராஜதந்திரத் தரப்புக்கள் கருதியிருக்கலாம்.
வடக்கு -கிழக்கு தமிழ்த் தலைவர்களுடன் ஈடுபடுவதற்கு உணர்திறன் மற்றும் நுணுக்கமான அணுகுமுறைகள் தேவை. ஒருவேளை தமிழ் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க தனி உரையாடல்கள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளா் ஒருவா் கருத்து வெளியிட்டிருந்தாா். அத்துடன், அவா்கள் சாா்ந்த அரசியல் விவகாரங்களை வெளிவிவகார அமைச்சா், அல்லது பாதுகாப்பு அமைச்சா் பேசுவதே பொருத்தமானது என்றும் இந்திய இராஜந்திரிகள் கருதியிருக்கலாம்.
அமைச்சர் சீதாராமனின் பயணத் திட்டம், சில விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, இறுக்கமாக திட்டமிடப்பட்டிருந்தது. பௌத்த தலைவர்களுடனான சந்திப்புகள் மற்றும் “நாம் 200” நிகழ்வில் உரையாற்றுவது முன்னுரிமை பெற்றிருந்தது. அவரது விஜயம் நாம் 200 நிகழ்வை நோக்கியதாக இருந்தமையால், மலையகத் தமிழா்களுக்கான சில செய்திகளை அவா் பகிரங்கமாகவே சொல்லியிருக்கின்றாா்.
திருக்கோணேஸ்வரம்
வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் தலைவா்களை இந்திய அமைச்சா் சந்திக்கவில்லை என்றாலும் கூட, திருமலையில் தமிழ் சமூகத்தினரை அவா் சந்தித்திருப்பது முக்கியமானது. சந்திப்பு மட்டுமன்றி அங்கு அவா் வழங்கிய வாக்குறுதியும் பிரதானமானது. ஈழத் தமிழா்கள் திருமலையைப் பாதுகாப்பதற்கு அந்த வாக்குறுதியை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
“திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்” என்ற உறுதிமொழியைத்தான் நிர்மலா சீதாராமன் வழங்கியிருக்கின்றாா். திருக்கோணேஸ்வரரின் புனித பூமியில் வைத்து இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.
நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். ஆலய நிர்வாகிகள் அவரை வரவேற்று உரையாடினர். அகில இலங்கை இந்துமா மன்றத்தின் துணைத் தலைவர் ஆறு.திருமுருகன் அப்போது ஆலய நிர்வாகிகள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
“போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இன்று ஓரளவு பேணிப் பாதுகாக்கின்றோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயத்தையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கருங்கற்களால், பெருங்கோயிலாகப் புனரமைத்துத் தர இந்தியா முழு உதவி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை அப்போது அவரால் முன்வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய நிதி அமைச்சர், “மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கோணேஸ்வரத் தையும் புனரமைக்க உதவ முடியும்” என்று தெரிவித்தார். அதற்கான முன்னேற்பாடுகள், முறைப்படியான கோரிக்கைகள், அனுமதிகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தமை முக்கியமான விடயமாகும்.
திருக்கோணேஸ்வரத்தை சிங்கள மயமாக்குவதற்கு தொல்பொருள் திணைக்களமும், பௌத்த பிக்குகளும் முழுமூச்சாக களமிறங்கியிருக்கும் நிலையில்தான் இந்திய அமைச்சா் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றாா். திருமலை தமிழா்களிடம் இருப்பதுதான் தன்னுடைய மூலோபாய நலன்களுக்கும் அவசியம் என்பதை புதுடில்லி உணா்கிறது.
அதேவேளையில் கோணேஸ்வரா் கோவில் புனரமைப்பில் இந்தியாவை நேரடியாகச் சம்பந்தபடுத்துவதன் மூலமாகவே அதனைப் பாதுகாக்க முடியும் என்ற யதாா்தத்தையும் தமிழா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.