தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் தலைவரான பேராசிரியர் ராமு மணிவண்ணன் தமிழீழம் மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறார். 2009 இனப்படுகொலைக்குப் பிறகு தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சாட்சியங்களை சேகரித்து ஐ நா மனித உரிமை மன்றத்தில் சமர்பித்ததில் முக்கிய பங்காற்றியவர்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மையப்படுத்தி Hiding the elephant என்ற நூலை எழுதி ஐ நா மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஈழ அரசியல், இலங்கை அரசியல், தமிழின விடுதலைப் போராடடம் போன்றவற்றில் தெளிவான அரசியல் பார்வையுடன்தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். இலக்கிற்காக அவர் வழங்கிய செவ்வியின் முதற்பாகத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கேள்வி- கோத்தபயா ராஜபக்ஸ தேர்தலில் வெற்றி பெற்றது சிங்களவர்களின் வாக்குகளால் என்று சொல்லிக் கொள்கின்றார். இதன் பின்னணியில் இலங்கை அரசியலை எவ்வாறு நோக்கலாம்?

பதில்- இலங்கை அரசியலை இரண்டு விதமாகப் பார்க்கலாம். இலங்கை அரசியல் ஒன்று, இலங்கை தேர்தல் அரசியல் மற்றொன்று. இலங்கை அரசியலில் என்பது சிங்களப் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பேரினவாத அரசியல். இலங்கையின் தேர்தல் அரசியலில் தமிழர்களுக்கும் ஒரு பங்கு இருந்தது. இந்தத் தேர்தலில் தமிழர்களின் பங்கு முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட்டது. அதாவது, தமிழர்களின் வாக்கு சிங்கள அரசியலில் வெற்றி பெறுவதற்கோ அல்லது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளாக அமையப் போவதில்லை என்பதை இந்தத் தேர்தல் ஊடாக பார்க்க முடிந்தது. இது சிங்கள பேரினவாதம் மட்டுமல்லாது, சிங்கள தேர்தலிலும் இது ஒரு வெளிப்பாடு.

gggg தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

கோத்தபயாவின் வெற்றியை நாம் பார்க்கும் போது, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தினரின் தொடர் வெற்றி, அவர்களின் அரசியல் ஆதிக்கம் மட்டுமல்லாது, சிங்களப் பேரினவாதம் முழு வீச்சுடன் செயற்படுவதற்கான ஒரு எடுத்துக் காட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ராஜபக்ஸ குடும்பத்தினரின் வெற்றியாக இருப்பதோ, அல்லது கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வென்றிருப்பதோ, தேர்தலில் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்த போதிலும் அவர் பெற்ற வாக்குகளின் வித்தியாசத்தைப் பார்க்கும் போது, ஆச்சரியமாக இருக்கின்றது.

இந்த தேர்தல் 3 நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதம், சிங்களவர்களின் தேர்தல் அரசியல், இத்தனை ஆண்டு காலம் தமிழர்களுக்கு தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டியிருந்த பங்காற்றல் வாக்குகள், இனிமேல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம் கூட தேவையில்லை என்பதை இந்தத் தேர்தல் நமக்கு காட்டுகின்றது.

கேள்வி- கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட உடனேயே பெயர் பலகைகளில் தமிழ் அழிக்கப்பட்டது, மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தமை போன்றவற்றை பார்க்கும் போது, எந்த அரசு வந்திருந்தாலும் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்குமா? அல்லது கோத்தபயா ராஜபக்ஸ வந்ததனால், இது இன்னும் அதிகமாக இருந்திருக்குமா?

பதில்- மாவீரர் தினத்தில் அவர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கலாம். அதுமட்டுமல்லாது, ராஜபக்ஸ குடும்பத்தினரோ அல்லது குறிப்பாக கோத்தபயா ராஜபக்ஸவின் வெற்றிக்குப் பின்னர் இன்னும் அதிகமான அழுத்தங்கள் தமிழ் சமுதாயத்திற்கு இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கலாம். இது எங்கள் எதிரியைப் பற்றி நாங்கள் நிர்ணயிக்கக்கூடிய அரசியல் சூழல் என்று தான் நான் நினைக்கின்றேன். 2009 இடம்பெற்ற ஓர் மிகப்பெரிய இனப்படுகொலைக்குப் பின்னர், தமிழர்கள் இனப்படுகொலையை வழிநடத்திய இராணுவ மந்திரிமீதோ அல்லது படைத் தளபதி மீதோ ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள், அரசியல் தீர்வுகள் குறித்தும் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்தார்கள். அந்த நம்பிக்கை வைத்தது கூட சரியானதென நான் நினைக்கவில்லை.

காரணம் என்னவென்றால், சிங்களப் பேரினவாத அரசியலில் இருந்து கோத்தபயா ராஜபக்ஸவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, சந்திரிகா குமாரதுங்கவோ இவர்கள் அனைவருமே, தமிழ் இனத்திற்கு எதிராகவும், தமிழர்களுக்கு உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு தருவார்கள் என்பது கனவிலும் கிடையாது. இவர்கள் அரசியல் தீர்வுவாக குறைந்தபட்ச அதிகாரத்தைக்கூட வழங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் மாவீரர் தினம், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழர்களின் அரசியல் அடையாளம், தமிழர்களின் நிலவுரிமை போன்றவற்றை மதிப்பார்கள் என்று நான் கடுகளவும் நம்பவில்லை.

அதனால் இவை தொடரும். இவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு மிகப் பெரிய வன்மம் என்பதற்கான சாட்சியங்களும், சாத்தியக்கூறுகளும் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இதையும் ஒரு அரசியல் களமாகத் தான் தமிழ்ச் சமூகம் எடுத்துச் செல்ல வேண்டும். எதிரியை நாம் நேரடியாகவும் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், நடப்பு ரீதியாகவும் நாம் தெரிந்தும், புரிந்தும் கொள்ளும் ஒரு தருணத்தில் தான் தமிழ்ச் சமூகம் இருக்கின்றது.

இத்தனை காலம் ஏதோ ஒரு மாயையில் தமிழ் சமூகம் இருந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவையும், இராணுவப் படைத் தளபதியையும் நம்புகின்ற ஒரு தமிழ்ச் சமூகம் இருந்ததென்றால், அது மாயை தானே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவைகூட இந்த மாயைக்குள்ளேயே மக்களை அழைத்துச் சென்றிருக்கின்றன. இந்த மக்களுக்கு விடுதலை வேண்டுமென்றால், அவர்களுக்கு மாற்று வழி வேண்டுமென்றால், இந்த மாயையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். இந்த மாயைக்கு சிங்கள அரசியல் பேரினவாதமும், இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் காரணமாகின்றன.

கேள்வி- இனப்படுகொலையை முன்னின்று நடத்திய கோத்தபயா இன்று ஜனாதிபதியாக இருக்கும் பட்சத்தில், ஐ.நாவின் இனப்படுகொலை விசாரணை என்பது எந்தளவிற்கு சாத்தியமாகும்?

பதில்- பேரினவாத இனப்படுகொலைக்கு அச்சாணியாக விளங்கியவர் தான் இன்றைய ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ. இவர் மகிந்த ராஜபக்ஸவின் இனப்படுகொலைக்கு பின்புலமாக நின்று இனப்படுகொலை வியூகத்திற்கு அச்சாணியாக செயற்பட்டவர் தான் இவர். அப்படியானவர் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் போது, தமிழர்களுக்கு பன்னாட்டுத் தளத்திலோ அல்லது உள்நாட்டிலோ விசாரணை என்ற பொய்ப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு ஒரு முகாந்திரம் கிடையாது. உள்நாட்டிற்கான அரசியல் தீர்வு, உள்நாட்டுப் பிரச்சினை, பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சு பொய்யானது.

ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இதற்கான முன்னெடுப்புகள் இருக்குமென்றால், உலக நாடுகளின் புரிதலில் ஒரு மாற்றம் வேண்டும்.மேற்கத்தய நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள், மனிதப் படுகொலைகள் எல்லாவற்றிற்கும் சாட்சியங்கள் உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நாம் ஒரு நீண்ட பயணத்தையும் நடத்தியிருந்தோம். இந்த பயணத்தின் ஊடாக நாம் அறிக்கைகள் மட்டுமல்லாமல், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதொரு உரையாடலையும் நடத்தியிருந்தோம். பன்னாட்டுத் தளத்திலும், மனித உரிமை மன்றத்திலும்கூட இலங்கை அரசாங்கம் கோத்தபயா ராஜபக்ஸ பதவியேற்றிருக்கும் இத்தருணத்தில் எந்தெந்த முன்னெடுப்புகளுக்கு உலக நாடுகளின் வழிநடத்தலுக்கு அவர்கள் இணங்குவார்கள் என்று நோக்கினால், பன்னாட்டு விசாரணையே இருக்கக்கூடாது என்பதைத் தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். அதாவது, மேற்கத்தய நாடுகளினதோ, எந்த ஒரு வெளிநாட்டினதோ தலையீடுகள் இருக்கக் கூடாது என்று தான் அவர்கள் சொல்கின்றார்கள்.

goda தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

மைத்திரிபால அரசாங்கம் உள்நாட்டு விசாரணையைக்கூட நடத்தவில்லை. நாங்கள் இதைப் பற்றி புதியதொரு அரசியல் வரைபை நிகழ்த்த யோசித்திருக்கின்றோம் என காலந்தாழ்த்துவதையே இந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அந்த பூச்சாண்டி வேலைகளுக்குக்கூட தற்போது வாய்ப்பு கிடையாது. அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் உட்பட எமது பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு, இவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி கூட இல்லை. ஏன் மனிதாபிமான்கூட இவர்களுக்கு இல்லை. இப்படியான ஒரு அரசியல் தலைமையே தற்போது பதவியில் இருக்கின்றது. இவர்களை வேடதாரிகள் என்றுகூட சொல்ல முடியாது.

இவர்களுக்கு முன்பிருந்தவர்களை வேடதாரிகள் என சித்தரிக்கலாம். இவர்கள் வேடத்தைக் கலைத்துவிட்டு, முழுமையான இனப்படுகொலைகளை நடத்தியவர்கள், நடத்தியதாக ஏற்றுக் கொண்டவர்கள். அத்துடன் அதற்காக ஒரு வெற்றியையும் கொண்டாடியவர்கள். பதவியேற்பு நடத்திய விதம், நடத்திய இடம் இவற்றின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு கருத்தை முன்வைக்கின்றார்கள். அதை ஒரு சரித்திர ரீதியாக அவர்கள் முன்வைக்கும் போது, தமிழ்ச் சமூகம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குரிய ஒரு முன்னெடுப்புக்களை தமிழ்ச் சமூகம் முன்னெடுத்து அதை வழிநடத்த வேண்டும். தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றதென்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி- கோத்தபயாவின் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்திய விஜயம் அமைந்தது. இந்த விஜயம் உணர்த்திய செய்தி என்ன?

பதில்- உலகெங்கும் அறியப்பட்ட இனப்படுகொலையாளியான கோத்தபயா ராஜபக்ஸ, இந்தியாவிற்குத் தான் தனது முதல் பயணம் அமைய வேண்டும் எனக் கருதியது இந்தியாவிற்குத் தான் அவமானம். சரித்திர ரீதியாக சொல்லப் போனால், இந்தியாவிற்கு தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கைகளுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்ட போது, முதல் பயணமாக எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகின்றீர்கள் எனக் கேட்ட போது, தான் இந்தியாவிற்கு செல்லவிருப்பதாகவும், இந்திய நாடு தங்களின் இனப்போராட்டத்திற்கும், தங்களின் விடுதலைக்கும் பெரிதும் உதவி புரிந்த ஒரு நாடு என்றும் கூறியிருந்தார்.

தற்போது கோத்தபயா ராஜபக்ஸவை இந்தியா வரவேற்கின்றதென்றால், உண்மையில், அவருக்கு இந்தியா உதவி புரிந்திருக்க வேண்டும். மாறியது இந்தியா தான். ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு உதவியதும் இந்தியா தான். தற்போது ஓர் இனப்படுகொலையாளிக்கு உதவுவதும் இந்தியா தான். இந்தியா ஓர் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? யார் காரணம் என்பதை அறிய வேண்டும்.

இந்தியாவின் அரசியல் கொள்கை, அரசியல் சித்தாந்தம் இவை அனைத்திலுமே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவே முடியாது. அதேபோல் இந்தியாவிற்கு கோத்தபயா ராஜபக்ஸ வரவேண்டும் என்பது கோத்தபயா ராஜபக்ஸவின் முடிவாகக்கூட இருக்கலாம். ஆனால் முதலில் சென்று இலங்கைக்கு வாழ்த்துத் தெரிவித்ததும் இந்தியா தான். இந்தியாவிற்கு கோத்தபயா ராஜபக்ஸ ஓர் இனப்படுகொலையாளி என்பது தெரியாதா? இது ஓர் உலகம் அறிந்த விடயம்.

Rajapaksa தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்

இந்தியாவைப் பொறுத்தவரை அவர்களின் புவிசார் கண்ணோட்டம், உலக அரசியல், சீனாவின் பன்முனைத் தாக்குதல் போன்றவற்றை ஈடுகட்ட வேண்டிய நிலையில், இலங்கையை வேறு நாடுகள் பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முன்பு, தான் இலங்கையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

இலங்கை ஜனாதிபதி இந்தியா சென்று பிரதமரைச் சந்தித்த பின் அவர் இரண்டொரு நாட்களில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியைச் சந்தித்தார். அதன் பின் சீனாவுடன் உறவு நிலையை மேம்படுத்தினார். இலங்கை அரசியலிலும், கோத்தபயா ராஜபக்ஸவின் மனஓட்டத்திலும் எந்தவிதமான மாற்றமும் நிகழாது. அதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என நாம் விரும்புகின்றோம். எப்போதுமே இந்தியாவின் புவிசார் அரசியல் முன்னெடுப்புகளுக்கு பெருங்கடலில் தமிழ்ச் சமூகம் தான் அரணாக விளங்கும். இதில் மாற்றம் வரும்வரை அதாவது இந்தியா சிங்களவர்களை புரிந்து கொள்ளும் வரை பெரும் மாற்றங்கள் எதுவும் நிகழாது.

கேள்வி- கோத்தபயா – மோடி உரையாடல் என்னவாக இருந்தது?

பதில்- என்னைப் பொறுத்தவரை, 2009இற்குப் பின்னர் சிங்களவர்கள் ஓர் உச்ச நிலையை அடைந்துள்ளனர். தமிழர்களுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது, ஒரு மாநிலமும் கிடையாது, அரசியல் ஆட்சியாளர் அமைப்புகளும் கிடையாது, 25 அல்லது 30 ஆண்டுகளாக இருந்த அரசியல், இராணுவ கட்டமைப்புகளும் கிடையாது. அப்படியிருக்கும் போது, பேரினவாதிகளின் எண்ணமெல்லாம் தமிழர்களின் நிலப்பரப்பும், தமிழர்களின் வடக்கும் கிழக்கும் ஒரு முழுமையான இராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததையடுத்து, இலங்கைக்கு இந்த நிலையை தக்கவைப்பதோடு அல்லாமல், பேரினவாத அரசியலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதுமேயாகும்.

அது இஸ்லாமிய சமூகமாக இருந்தாலும் சரி, தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி இது சிங்களவர்களின் நிலப்பரப்பு, இது சிங்களவர்களின் தேசம் என்ற ஒற்றை பண்பைத் தான் அவர்கள் முன்வைக்கின்றார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை புவிசார் அமைப்பை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமென்று கோரும்.இப்போது இலங்கை ஒரு மிகப்பெரிய மூழ்கும் கடனாளி நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீனாவின் முன்னாலேயே நடந்த ஆக்கிரமிப்புக்கள், இராணுவக் கட்டமைப்புகள், கப்பல் தளங்கள்,கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகம்கூட சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் போகும் போது, இந்தியாவிற்கு இது அதிர்ச்சி என்பதோடு மிகப் பின்னடைவாகக்கூட இருக்கின்றது.

இந்தியா சிந்திக்க வேண்டும். சிங்களவன் தமிழர்களை ஏமாற்றிய காலம் கடந்து விட்டது. தமிழர்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இந்தியாவுடன் பேசியோ தமிழர்களை பகடைக்காகய்களாக பாவித்த ஒரு காலம் போய்விட்டது. அந்தக் காலம் முடிந்து விட்டது என்பது இந்தியாவிற்கு விளங்கவில்லை. தமிழர்களின் அதிகாரம், 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று இந்தியா நினைக்கின்றது. எதைச் செய்தாலும் தமிழர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை.

முதலாவது காரணம் என்னவென்றால், 13ஆவது சட்ட சீர்திருத்தமோ, அல்லது அரசியல் சாசன வரைபுகளிலோ தமிழர்களின் அதிகாரப் பகிர்வைப் பற்றி எந்தவிதமான முன்னெடுப்புகளும் கிடையாது. அப்படியிருக்கும் போது, இந்திய அரசாங்கம் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதால் மட்டுமே தமிழர்களுக்கு அரசியலில் ஒரு புதிய நிலைப்பாட்டை உருவாக்கலாம் என நினைப்பது தவறு. தமிழர்கள் நிலப்பரப்பில் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் போது தான், இந்தியாவின் அதிகாரம் மேலோங்கும்.

இதை இந்தியா தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு அரணாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தை பாதுகாப்பதிலோ அல்லது அவர்களை வளர்த்தெடுப்பதிலோ ஓர் அரசியல் ரீதியாகவோ, ஒரு கட்டமைப்பு ரீதியாகவோ இந்தியா முன்னெடுப்புகளை இந்தியா சிந்திக்காத வரை சிங்களவனுக்கும் இந்தியா பகடைக் காயாக இருக்கும். தமிழர்கள் இப்போது சிங்களவர்களுக்கு பகடைக்காய் கிடையாது. ஆனால் தமிழர்கள் இந்தியாவிற்கு பகடைக்காய் என்று இந்தியா நினைக்கின்றது. அதுவும் கிடையாது.

இந்த இரண்டு நிலையினை விட்டு விலகிய பிறகு இந்தியாதான் ஒரு புதியதொரு பார்வையை திரும்பப் பெறவேண்டும். தமிழர்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கின்றது. இந்தியா தமிழர்களை எவ்வாறு பார்க்கின்றது. இதில் நடந்த மாற்றங்கள் என்னென்ன? உலக நாடுகளுடன் இந்தியாவை எடை போடுகின்றார்களா? அல்லது சரித்திர ரீதியாகவும், சரித்திர கலாச்சார ரீதியாகவும் தாய்த் தமிழகம் மற்றும் இந்தியா என்ற வரலாற்று சித்தாந்த கருத்துப் பார்வையோடு பார்க்கும் போது, இந்தியா நமக்கு அரணாக நிற்கும் என்ற ஒரு காலம் இப்போது கடந்து விட்டது.

இந்தியாவிற்காக நம்மால் என்ன பேசமுடியும் என்ற ஒரு மாற்று சிந்தனைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. பன்னாட்டு அரசியல் தளத்தில் அவர்களின் விழிப்பபுணர்ச்சி மிகப் பெரிய ஒரு கொடையை,தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்த பின்னர் வரும் ஒரு புதிய அரசியல் பார்வையை எடுத்துரைக்க வேண்டும் என தமிழ் சமூகம் சிந்திக்குமேயானால், தமிழர்களின் அரசியலிலும், வாழ்விலும் ஒரு பெரிய மாற்றம் நடக்கும். புதிய ஒரு தலைமையையும் தேட வேண்டும். உள்நாட்டிலேயே வடக்கு கிழக்கிலேயே தமிழ்ச் சமூகம் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

-தொடரும்