தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தென்பகுதி காசாவாக மாறியிருக்கும் – விமல் வீரவன்ஸ தெரிவிப்பு

தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தெற்காசியாவின் காசாவாக இலங்கையின் தென்பகுதி மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளைபிரேரணை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. மேற்படி பிரேரணை மீதான விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் தேசியப் பிரச்சினையை, பாலஸ்தீன பிரச்சினை போல இலங்கை அரசாங்கம் கருத வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கம் எமது நாட்டில் உள்ள
பிரச்சினையைத் தீர்க்க முற்படாமல் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய போதே, “தமிழீழம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால் தெற்காசியாவின் காசாவாக இலங்கையின் தென்பகுதி மாறியிருக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.