தமிழீழம் என்னும் இலக்கை அடைய வழிவகுக்கும்  ஏழு கொள்கைகள் -சத்தியா சிவராமன்

1,302 Views

ஓர் சுதந்திரமான, இறைமையுள்ள, பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நாட்டை மீட்டெடுக்கின்ற தமிழீழ மக்களின் நீண்ட, கடினமான பயணம், தற்கால வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது.

எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையை விட்டு வெளியேற ஆயத்தமான பிரித்தானிய காலனீய அரசு, ஒன்றிணைக்கப்பட்ட சிறீலங்கா அரசிடம் தமிழீழ நாட்டைக் கையளித்த கணப்பொழுதிலிருந்து தமிழீழ மக்களின் விடுதலைக்கான இந்தப் பயணம் ஆரம்பமானது.

அதன் பின்னர் கொழும்பை நடுவமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாதம் நிறைந்த, பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக தமிழ் மக்களின் நீதியும் மாண்பும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் வன்முறையற்ற, அமைதி வழிகளில் தமிழ் மக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈற்றில் இப்போராட்டம் ஒரு முழு அளவிலான விடுதலைப் போராகப் பரிணமித்தது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நீடித்த இப்போர், 2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையுடனும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்ட நிகழ்வுகளுடனும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இக்காலப் பகுதியில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் சிறீலங்கா அரச படைகளினால் இழைக்கப்பட்டன. மிகவும் கொடூரமான முறையில் இழைக்கப்பட்ட இக்குற்றங்களுக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறைவுற்ற போது, ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் கைதுசெய்யப்பட்டு, ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவிப் பொதுமக்கள் தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் இழைக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று, ஒருபுறம் கொழும்பில் ஆட்சியில் இருப்போரின் ஆணவத்தையும் மறுபுறத்தில் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரதேசங்களையும் அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அநீதிகளுக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்தவிதத்திலும் அக்கறை காட்டாத பன்னாட்டுச் சமூகத்தையும் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மனம் தளர்ந்து போவதும் நம்பிக்கையை இழப்பதும் இயல்பாகவே எதிர்பார்க்கக் கூடிய விடயங்கள் தான்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, ஊடகங்கள் கோலோச்சும் ஒரு காலப்பகுதியிலும் தொடர்பாடல் வசதிகள் உச்சக்கட்ட நிலையிலிருந்த ஒரு காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பன்னாட்டுச் சமூகம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை. மனித உரிமைகள் பற்றியும் சனநாயகம் தொடர்பாகவும் ஓயாமல் கோசமெழுப்புகின்ற வல்லரசுகள், இந்த இனப்படுகொலையைப் புரிந்து விட்டு இன்றும் சிறீலங்காவின் ஆட்சிக் கதிரையில் இருக்கும் பாசிசவாதிகளைத் தண்டிப்பது தொடர்பாக எந்தவித சலனமும் இன்றி இருப்பதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

சிறீலங்காவை உற்று நோக்கும் போது, இராஜபக்சாக்களை தலைமையாகக் கொண்ட கொழும்பு அரசு, முழுத் தீவையுமே சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கிறது. பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைச் சிஙகளமயமாக்கும் செயற்பாடு, ஈடுசெய்யப்பட முடியாத வகையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல மொழிகளையும், பல சமயங்களையும், பல இனங்களையும் தன்னகத்தே கொண்ட சிறீலங்கா, ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாறுவதாயின், தமக்குரிய தனிநாடான தமிழ் ஈழத்துக்காகப் தொடர்ந்து போராடுவதைத் தவிர தமிழ்ஈழத் தமிழ்மக்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை.

உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து வாழுகின்ற புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடாக, அமைதியான வழிகளிலும், முற்று முழுதாகச் சனநாயக வழிமுறைகளிலும், தமிழ் மக்களுக்கான மாண்பையும், நீதியையும், விடுதலையையும் அடைந்து கொள்ளும் தூரநோக்குடன் இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனப்படுகொலையை மேற்கொண்டவர்களுடன் சமரசம் செய்வதென்ற கேள்விக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்பது மட்டுமன்றி தற்கால சனநாயகத்தின் அடிப்படைகள் பற்றியோ, மனித நாகரிகக் கொள்கைகள் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாதவர்கள் நடுவில் சிறுபான்மை மக்களாகக் ஈழத்தமிழ் மக்கள் காலாதிகாலம் வாழ்வதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்தில், நாம் கைக்கொள்கின்ற தந்திரோபாயங்களை மட்டுமல்ல நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பாகவும், அந்த இலக்கை அடைவதற்குரிய வழிவகைகள் தொடர்பாகவும் இருக்கின்ற அடிப்படைக் கொள்கைகளையும், அனுமானங்களையும் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாகும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட எந்தவொரு மக்களினத்தின் விடுதலையை நோக்கும் பொழுதும், அவர்கள் அந்த விடுதலைக்காக எப்படிப்பட்ட ஈகத்தைச் செய்திருந்தாலும், அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டுத் தளங்களில் பூகோள ரீதியாக எவ்விடயங்கள் இன்று முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன என்ற தெளிவு இன்றி இவை எதுவுமே சாத்தியமாகாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

முதலாவதாக, நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு தூரநோக்குப் பார்வையை (vision) நாம் கொண்டிருப்பதோடு, அந்த இலக்குத் தொடர்பான விபரங்கள் வெளிப்படைத்தன்மையோடு வரையறை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தை முற்றுமுழுதாக எதிர்காலத்தின் கைகளிலே விடுவதும், உணர்ச்சிவசப்பட்டு தெளிவற்ற நிலையில் இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்களாகும். நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு முழுமையான வரைபு தொடர்பாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஆனால் நாம் உருவாக்க விரும்புகின்ற நாட்டுக்கான கட்டமைப்பு, கொள்கைகள், நிறுவனங்கள், சட்டவிதிமுறைகள் என்பவை தொடர்பான முன்குறிப்புகளைப் பற்றியே இங்கு நாம் பேசுகின்றோம்.

இரண்டாவதாக, சமகாலத் தாயகம், பூகோள அரசியல் நிலைமை, கடந்த கால வரலாறு, எதிர்காலத்தில் முன்னுரிமை பெறக்கூடிய விடயங்கள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து வரையப்படும் எமது நோக்கங்களை அடைவதற்கான ஒரு நல்ல வழிவரைபு (road map)  எமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வழிவரைபை உருவாக்கும் பயணத்தில் உதவக்கூடிய சில கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் மேலும் ஆய்வுசெய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கொள்கைகள் ஆலோசனைகளாக மட்டுமே தரப்படுகின்றன. விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுகின்ற அனைவரதும் பங்களிப்புடன் இக்கருப்பொருட்களின் அடிப்படையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கொள்கைகள் இறுதிசெய்யப்படலாம்.

கொள்கை ஒன்று: ஓர் உறுதியான பூகோளப்பார்வையைக் கொண்டிருத்தல்

தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நாம் பார்க்க முடியாது. மாறாக இப்போராட்டம், பல்வேறு சக்திகளுக்கு இடையேயான ஒரு பூகோள அரசியல் யுத்தமாகவே நோக்கப்பட வேண்டும்.

இரண்டாயிரத்து ஒன்பதில் நடைபெற்று முடிந்த போரில், மிகவும் வல்லமைமிக்க பன்னாட்டு மற்றும் பிராந்திய சக்திகளின் கூட்டணியே தமிழ் மக்கள் மேலும் விடுதலை இயக்கத்தின் மேலும் ஒரு இனப்படுகொலைத் தாக்குதலை சிறீலங்கா அரசு மேற்கொள்ள நேரடியாக உதவிசெய்ததை நாம் போரின் இறுதிக்கட்டங்களில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆகவே தான் தமிழ் ஈழத்தை அடைவதற்கான போராட்டத்தில் எமது கண்ணோக்கு, சிறீலங்காவின் வரையறைகளைக் கடந்ததாகவும் பூகோள ரீதியாக நிலவுகின்ற சூழலையும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் உள்ளடக்குவதாகவும்  அமைவது இன்றியமையாததாகும்.

இந்தக் கொள்கையை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு, தன் (சுய)நிர்ணய உரிமை, நீதி, மனித உரிமைகள், சனநாயகம் போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற நாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய பன்னாட்டுக் கூட்டணிகளையும் நட்பு நாடுகளையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு வழியில் சொல்வதென்றால் தமிழ் ஈழத்தை அடைவதற்கான செயற்பாடுகள் மிகவும் உறுதியான பூகோளப் பரப்பிலும், பன்னாட்டுக் கண்ணோட்டத்திலும் வடிவமைக்கப்பட வேண்டுமேயோழிய, அந்த முயற்சிகள் பிராந்தியக் கட்டமைப்புகளுக்குள்ளேயோ அல்லது உப பிராந்திய மட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

கொள்கை இரண்டு: தற்கால நாடிய அரசுகளைக் (nation states) கட்டமைக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ளல்

 முன்னெப்போதும் இல்லாத வகையில் இடத்துக்கிடம் மாறிக்கொண்டிருக்கும் நிதி, மனித வளம், அறிவு என்பவற்றின் மூலதனம், மிக அதிக வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் மனித அறிவு, விரைவாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய இவை அனைத்துமே இப்பூகோளத்தையும் நாடிய எல்லைகளையும் ஏன் ‘நாடிய அரசு” என்ற எண்ணக்கருவையுமே புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன.

கடந்து சென்ற       நூற்றாண்டுகளில் தொடர்வண்டிப் பாதைகளும் வீதி வலைப்பின்னல்களும் எவ்வாறாக  முன்னைய அரசுகளை முற்று முழுதாக மாற்றியமைத்தனவோ, அதே போலத் தொடர்பாடலும் நிதி வலைப்பின்னல்களும் இன்று புதிய அடையாளங்களையும் உறவுகளையும் சமூகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய பெருநிறுவனங்கள், நாடுகளை விடவும் பலம் வாய்ந்தவையாக விளங்குவதுடன் நாடிய அரசுகள் இன்று பன்னாட்டு மூலதனங்களுக்கு வழிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

முன்னைய நாடிய அரசு என்ற எண்ணக்கரு தொடர்பாகப் பூகோள ரீதியாக பொருண்மிய முன்னுரிமைகள் இன்று எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி மிக விரைவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது இன்று அவசியமாகியிருக்கிறது.

பூகோள ரீதியிலான மூலதனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம் மாறும் தன்மை, நாடுகளின் எல்லைகளையே மாற்றியமைத்து, அரசியல் இறைமை, ஏன் சுதந்திரம் தொடர்பான எண்ணங்களுக்கே புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது. இவ்வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்களைக் கொண்டு இலக்குகள் கட்டமைக்கப்பட்டு கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களைத் துணையாகக் கொண்டும் எதிர்காலத்தில் வலுவாகக் கால் பதித்தவாறும் தமிழ் ஈழத்துக்கான  தூரநோக்கு (vision) வடிவமைக்கப்பட வேண்டும்.

கொள்கை மூன்று: தமிழ் ஈழம் ஏன் அவசியமானது என்பதை முற்றிலும் புதிய முறையில் உலகுக்கு எடுத்துரைத்தல்

தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது முற்றிலும் நியாயமான ஒரு போராட்டமாகும். ஆனால் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் வெற்றிகரமாக மேற்கொண்ட தவறான பரப்புரைகளின் காரணமாக உலகம் எமது போராட்டத்தை ஒரு நியாயமான போராட்டமாகப் பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எமது போராட்டம் தொடர்பாக உலகின் பெரும் பகுதிக்கு எதுவுமே தெரியாது.

இந்த விடயம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். எமது போராட்டம் பற்றிய உண்மை, முழு உலகுக்கும் சொல்லப்படும் வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் அதற்குத் தேவையான பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை.

தமது சொந்த எதிர்பார்ப்புகளையும் விடுதலைக்கான விருப்பையும் கடந்து தமிழ் ஈழத்துக்கான தமது போராட்டம் இன்று வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டது என்பதை ஈழத்தமிழ் மக்கள் புரிந்துகொள்வது மிக மிக அவசியமானதொன்றாகும். வெறுமனே ஒரு நாட்டின் விடுதலைக்காக மட்டும் முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல எமது போராட்டம்.

ஜேர்மனி நாட்டின் நாற்சிகள் (Nazi) கைக்கொண்டது போன்ற ஒரு மிக மோசமான பாசிசவாதத்துக் (Fascism) கெதிரான ஒரு போராட்டமாகும். ஒரு காலத்தில் இராஜபக்ச அரசை வெற்றிகொள்வது என்பது ஒரு சிறிய தீவுக்குள்ளே நடைபெறும் யுத்தமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த நிலை முற்றிலும் மாறி, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான ஒரு பூகோளச் சமராக இது மாறிவிட்டதுடன் மனித குலத்தையே தன்நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு போராட்டமாகவும் மாறிவிட்டது.

தமிழ் ஈழம் ஈழத்தமிழ் மக்களின் இலட்சியமாக மட்டும் இனிமேல் இருக்க முடியாது. இந்தப் பூகோளப் பந்தில் இருக்கும் மனச்சான்று இருக்கின்ற ஒவ்வொரு மனிதப்பிறவியும் “இப்போது நாங்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தான்” என்று பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாறு இனிமேல் தனியே தமிழ் ஈழ மக்களின் கதையாக மட்டும் இருக்காது. அதற்கு மாறாக அது முழு மனித குலத்தினதும் கதையாகவும் மனிதகுலம் முழுவதற்கும் பொதுவாக அமையக்கூடிய விழுமியங்களுக்கான கதையாகவும் விளங்கப்போகிறது.

கொள்கை நான்கு: ஏனைய சமூகங்களோடு இணைந்து பன்னாட்டுக் கூட்டுறவைக் கட்டியெழுப்புதல்

இன்றைய சூழ்நிலையில் தங்களைப் போன்ற நிலையிலே இருக்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து கொள்ளாமல் எந்தவொரு குழுவோ, சமூகமோ, நாடோ தாங்கள் விரும்பியதை அடைந்துவிட முடியாது. தமக்காக மட்டுமே போராடுபவர்கள் உலகளாவிய வகையில் ஏனையோரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது. தங்களைப் போன்ற தேவைகளைக் கொண்டிருக்கின்ற ஏனைய மக்களுடன் ஒத்துணர்வுடன் (empathy)  இணைந்து செயற்படுபவர்கள் நிச்சயமாக முழு உலகத்தாலும் போற்றப்படுவார்கள்.

ஆகவே, தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது, உலகிலே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற ஏனைய சமூகங்களுடனும் கைகோர்த்துப் போராடுவதிலேயே தங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையைக் காட்டுவதும், கட்டியெழுப்புவதும் உலகளாவிய வகையில் மட்டுமல்ல; சிறீலங்காவினுள்ளும் குறிப்பாக நீதி, அமைதி, சனநாயகம் போன்ற பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த உலகத்தைப் படைக்க விரும்புகின்ற சிங்கள மக்களையும் உள்ளடக்க வேண்டும்.

கொள்கை ஐந்து: புதிய எண்ணங்களை ஊக்குவித்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்

சண்டைக் களத்தைப் பொறுத்தவரையில், கெரில்லாப் போராளிகள் எதற்கும் அஞ்சாதவர்கள், எதற்கும் துணிந்தவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். சண்டைக் களத்தில் வெளிப்படுத்தப்படும் இந்தப் பண்புகள் அரசியல் அரங்கிலும் அரச தந்திரச் செயற்பாடுகளிலும் கூட வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றால், வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில் முன்சார்பெண்ணங்களோ அல்லது எம்மைக் கட்டிப்போடும் பழக்கவழக்கங்களோ புதிய வழிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் எமது சிந்தனை ஆற்றலை எந்தவிதத்திலும் முடக்கிவிட நாம் அனுமதிக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த நிகழ்வு, பலருக்குத் துன்பங்களைத் தந்திருந்தாலும் இந்த நெருக்கடி பல புதிய வாய்ப்புக்களைத் தந்திருப்பதையும் மறுத்துரைக்க முடியாது. ஒரு புதிய நாட்டை மட்டுமல்ல உலகம் அலட்சியம் செய்ய முடியாத வகையில் முற்றிலும் ஒரு புதிய வகையான நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இது தந்திருக்கிறது.

உலகெங்கும் பரந்து வாழுகின்ற புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் ஏற்கனவே ஒரு நாடாக (ஒரு தேசமாக) இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது. அரசு அல்லது நிலப்பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்துகின்ற முன்னைய எண்ணக்கருவைப் போலன்றிச், சமகாலச் சிந்தனைகளுக்கு ஏற்ப ஓர் புதிய நாடாக இருக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழ் மக்களும், தமக்கு எதிரான, தம்மை அடக்கியாளும் எண்ணங்களைக் கொண்ட சக்திகளின் நடுவில் தற்போது அகப்பட்டிருக்கின்ற போதிலும், இந்த நாடு முன்னரைவிட அளவில் எவ்வளவோ பெரிதாகவும் அறிவிலும் ஆற்றலிலும் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் ஒரு மக்களினத்தைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கின்றது என்ற உண்மை உணரப்பட வேண்டும்.

எதிர்காலத்திலே உருவாகப் போகின்ற ஒரு நாடாக மட்டும் தமிழ் ஈழத்தை நாம் கண்ணோக்க முடியாது. அந்த நாடு ஏற்கனவே உருவாகி விட்டது என்பது மட்டுமன்றி, பூகோளப்பரப்பில் இந்த நாடு தனக்கென்று தனித்துவமான எண்ணத்தை வடிவமைத்து, அந்த எண்ணத்தை உரக்கச் சொல்லத் தொடங்கி விட்டது. உண்மையாகச் சொல்வதாயின், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாம் கொண்டிருக்கின்ற ஆற்றலை முதலில் தெளிவாக இனங்காண வேண்டும். அப்படியாக அந்த ஆற்றல் இனங்காணப்படும் பொழுது, உலகமும் அதனை அங்கீகரிக்கும் நேரம் உருவாகும்.

பாரம்பரியக் கட்டமைப்புகளுக்குள்ளே மட்டும் நின்று சிந்திப்பதை விடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து பன்னாட்டு அரசதந்திரம் (global diplomacy), குடியுரிமை, சனநாயகம் போன்ற அனைத்து விடயங்களிலும், துணிந்து, புதிய எண்ணக்கருக்களைப் வடிவமைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுப்பதே தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சவால் எனக் கொள்ளலாம்.

கொள்கை ஆறு: அரசாங்கம் போலவே செயற்படுதல், நாடாகுதல்

பல்வேறு தமிழ் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, வேறு விடயங்களில் அவர்கள் எப்படிப்பட்ட மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பொதுத் தளத்தில், ஒரு பொதுவான இலக்குக்காக அனைவரும் பணியாற்றக்கூடிய ஒரு தந்திரோபாயத்தை வகுப்பது, தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஒரே விதமாக எல்லோரையும் சிந்திக்க வைப்பது சனநாயகம் அல்ல. அதற்கு மாறாக, வேறுபாடுகளின் நடுவிலும் ஒரு பொதுவான இலக்கை அடைய அனைவரும் ஒருங்கிணைத்து உழைப்பது தான் சனநாயகம் ஆகும். சனநாயக வழிமுறைகளின் ஊடாக இவ்வாறான ஒரு ஒற்றுமையை எம்மால் காட்சிப்படுத்த முடிந்தால், அப்போது தமிழ் ஈழத்தின் காத்திரமான தன்மையை உலகமும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும்.

எமது தாயகத்தின் முழுமையான இறைமை இன்னும் அடையப்படாத போதிலும், தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டையும் ஒரு நாடு ஏற்கனவே உருவாகிவிட்டது போன்ற நடத்தையையும் எமது பொதுவான இலக்குகள் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

புவியியல் ரீதியாக உலகத்தின் எப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் தமிழ் ஈழத்தை இயங்க வைப்பதும், அதன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதும் தற்போது அவசியமான விடயங்களாகும். எமது ஆளுகைக்கான கட்டமைப்புகள் (structures of governance), எமது வணிகத் தொழிற்பாடுகள், எமது வங்கிகள், எமது பிள்ளைகளுக்கான பாடசாலைகள், எமது பெருநூலகங்கள், எமது பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானத்தில் உயர் வளர்ச்சியைப் பறைசாற்றும் எமது நடுவங்கள், சுகாதார நிறுவனங்கள், எமது விளையாட்டு மைதானங்கள், எமது பண்பாட்டு அரங்கங்கள் போன்றவற்றை இப்போதே கட்டியெழுப்பத் தொடங்குவோம். தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்காமல், இப்போதே நாம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ, அங்கங்கெல்லாம் எமது தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டைத் தொடங்குவோம்.

கொள்கை ஏழு: எம்மை எதிர்ப்பவர்களது தரத்தை விட எமது தரத்தைப் பன்மடங்கு உயர்வாகப் பேணுதல்

எந்த ஒரு போராட்டத்திலும் ஒருவர் தன்னை எதிர்ப்பவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதே நேரத்தில் எதிராளிகள் செய்வதையே எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பின்பற்றுவதும் ஏற்புடைய விடயமாக இருக்க முடியாது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அணியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் தமது போராட்டத்தில் வெற்றியைச் சந்திக்கும் போது, தமது எதிராளிகளைப் போன்று மோசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது எல்லாவிதமான முன்னணி விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினதும் தார்மீக அடிப்படையாகும்.

பூகோள ரீதியிலான ஆதரவைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் நாடிய விடுதலைப் போராட்டத்தின் (national liberation struggle) அறநெறிமுறைகள் தொடர்பான தெளிவை தமது அணியிலுள்ளவர்களிடையே உறுதிப்படுத்துவதற்காகவும், தமது எதிராளிகளை விடவும் தரத்தில் உயர்ந்த சிந்தனை, செயற்பாடு, நடத்தை என்பவற்றைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும். இனவாத, பாசிசவாதப் பண்புகளைக் கொண்ட ஓர் எதிரிக்கு எதிராகப் போராடுகின்ற அதே நேரம், எந்தவிதத்திலும் எதிரியின் அதே கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றியை ஒருபோதும் அடைந்துவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலுமே முழு மனித குலத்தாலும் மதித்துப் போற்றப்படும் உன்னதமான விழுமியங்களைப் பேணுவதன் மூலமே இப்போராட்டத்தின் வெற்றியை நாம் எமதாக்கிக் கொள்ள முடியும்.

(சத்தியா சிவராமன் -டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஊடகவியலாளர் என்பதோடு ஒரு சுகாதார ஆர்வலரும் ஆவார்)

Leave a Reply