தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் – நேற்றும் இன்றும் : தேடல் 9 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

537 Views

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!

யாழ்ப்பாணம் ‘பெரியாஸ்பத்திரி’ அல்லது ‘தர்மாஸ்பத்திரி’ என்று எமது பெற்றோர்களால் நம்பிக்கையோடு அழைக்கப்பட்டுவந்த அந்த மருத்துவமனையில் எமது உயிருக்குப் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்து அதன் முன்கூடத்தில் நினறுகொண்டிருந்தோம்!

அந்தக்கணங்கள்…. எனக்கான அரசியல் விழிப்புணர்வுணர்வுக்கான போதிமரக் கணங்களாகவே பயன்பட்டன என நான் இன்றும் உறுதியாக நம்புகின்றேன்!

இலங்கைத்தீவின் மதவெறி, இனவெறி, அரசியற் கலாச்சாரம், சட்டம் நீதி, காவற்துறைகளுக்கான ‘அறப்பிறழ்வுக்’ கோட்பாடுகள் எமது தமிழ்த் தேசிய இனத்தின், இறைமை, உயிர்ப்பு, இருப்பு, உரிமைகள், உணர்வுகள், எதிர்காலம், பாதுகாப்பு இவற்றிற்கான உத்தரவாதமின்மை எனப் பலகோணங்களில் என்னை இக்கணங்கள் சுற்றிச் சுழரவைத்தன!

இந்துசமுத்திரத்தின் முத்தாய்த்திகழ்ந்த இலங்கைத்தீவு  அன்று பிரித்தானியரது ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்ற செய்தியினை முற்றுமுழுதாக நம்பிய நிலையில், எல்லாக் குடிமக்களும் ஒருமித்த இலக்குகளோடு, இலங்கைத்தேசிய உணர்வோடு வாழும் சூழலில் இலங்கை ஓர் ‘இருமொழிக்குரிய’ தேசிய இனங்களும் ஒன்றாயிணைந்து வாழ்கின்ற ஒரு சனநாயக, சகோதரத்துவ நாடாகத் திகழும் என்ற தெளிந்த கனவோடு ஆனந்த சமரக்கோன் எனும் அன்றைய சிங்களக்கவிஞன்  இலங்கைக்கான தேசியகீதத்தினைச் சிங்கள மொழியில் யாத்ததைத் தொடர்ந்து, அதே நம்பிக்கையோடும், கனவுகளோடும் உயிரோசையோடும் எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்கள் அக்கீதத்தினைத் தமிழிலும் யாத்தது நாம் எல்வோரும் அன்று படித்த வரலாற்றுச் செய்திகளுள் ஒன்று!

மாநாடு தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் - நேற்றும் இன்றும் : தேடல் 9 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

ஆயினும் பின்வந்த காலங்களில் இலங்கைத்தீவின் ‘இருமொழிக்கொள்கை’ ‘ஒரேமொழிக்கொள்கை’ ஆக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேலும்  தொடரும் காலங்களிற்  ‘பன்மதக் கோட்பாடுகள்’ ‘சிங்களப் பௌத்த மதவெறித்  தீக்காடுகளாகவும்’ ‘ஈரினத் தீவு’ ‘ஓரினத்தீவாகவும் மாற்றப்படப்போவதற்கான அரசியற் பூகம்பம் அத்தீவிற் குடிகொள்ளப்போவதற்கான மிகவும் தீர்க்கமான அறிகுறிகளை 1974 சனவரி மாதம் 10ஆம் திகதி இரவுப் பொழுதில் நடந்த நான்காம் மாநாட்டு நிகழ்வுகள் எமக்குத் திரையிட்டுக்காட்டின எனலாம்!

உண்மையில் மாநாட்டு நிகழ்வுகளின் பின்னணியில் இலங்கைக்குச் ‘சிறீலங்கா’ எனப் பெயர் சூட்டிய வரலாறும் சிங்களக் கவிஞர் ஆனந்த சமரக்கோன் அவர்களின் சம்மதமின்றித் தேசிய கீதத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் அதனைத்தொடர்ந்த அக்கவிஞனது உயிர்க்கொடையும் இன்னும் பல ஆட்சி முன்னெடுப்புகளும் இலங்கை வரலாற்றில் அரங்கேறிய அரசியற்காட்சிகளாகும்!

இப்போது…

யாழ்ப்பாண நகரமே பீதியில் இருந்த வேளையில் யாழ்ப்பாண மருத்துவமனையின் முன்கூடத்தில் அச்சத்தோடும், அதிர்ச்சியோடும் நின்ற எமது செவிகளில் மீண்டும் பொலீஸ் வாகனங்கள் லாரிகளின் உறுமற்சத்தங்கள் நாராசமாக வந்து வீழத்தொடங்கின!

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு முன்னாலுள்ள யாழ்ப்பாணப் பெருவீதியில் ‘பொலீஸ்’ வாகனங்கள் நிறுத்தப்பட்டு அவ்வாகனங்களிலிருந்து கவசமணிந்த ‘கலவர எதிர்ப்புப்’ படையணியினர் ஒருசிலர் மருத்துவமனை வாசலை நோக்கி ‘பூட்ஸ்’ ஓசையோடு ஓடிவந்தனர்!

இவர்களுக்குத் தலைமை வகித்தபடி ஒரு காவற்துறைத் தலைமையதிகாரி திடுதிப்பென்று மருத்துவமனைக்குள் ஆவேசத்துடன் பிரவேசித்தவாறு, எங்களை மருத்துவமனையைவிட்டு வெளியேறும் டி மிகவும் அதட்டற் தொனியில், உரத்தகுரலில், ஆணையிட்டார்! அவரது கையிற் துப்பாக்கி இருந்ததை எம்மால் அப்போது அவதானிக்க முடிந்தது! இந்த அதிகாரியின் அதட்டற்குரல் கேட்டமாத்திரத்தில் அதுவரை எமது பாதுகாப்பையும் நலனையும் கண்காணித்துக்கொண்டும்  எம்மோடு ஆதரவாகப்பேசிக்கொண்டும் நின்ற மருத்துவமனையின் முதன்மை வைத்திய அதிகாரி மிகவும் துணிவோடும் அமைதியான பக்குவத்தோடும் எம்மை அதட்டிய காவற்துறை அதிகாரியை நோக்கி முன்சென்று, அவருக்கு ஆங்கிலத்திற் பதில் கூறினார்!

‘இவர்கள் தமது பாதுகாப்புத் தேடி இங்கு வந்துள்ளார்கள்! இவர்களை வெளியே நான் அனுப்பமாட்டேன்!’ என்று எதுவித பதட்டமுமின்றி மிகவும் உறுதியான குரலில் இவர் பதிலளித்ததைத் தொடர்ந்து, இவரின்மீது  காவற்துறை அதிகாரிக்கு கோபமும் ஆத்திரமும் அடைந்ததை எம்மால் உணரமுடிந்தது! திடீரெனத் துப்பாக்கியை உயர்த்தியபடியே ‘இவர்களை வெளியே அனுப்பாவிட்டால் துப்பாக்கியைப் பிரயோகிப்பேன்’ என்று அந்த அதிகாரி அச்சுறுத்தவும்  ‘முடிந்தால் என்னை முதலிற் சுடு’ என் எங்கள் மருத்துவமனையின் முதன்மை வைத்திய அதிகாரி தமது நெஞ்சினை நிமிர்த்தியவாறு நின்ற காட்சி இன்றும் எனது மனக்கண்முன் நிற்கிறது!

இவ்வேளை என்னைக் காணாமற் தேடியவாறு எனது ஒன்றுவிட்ட அண்ணர் ஒருவர் அவரும் அன்றைய பளைப்பகுதிக்கான வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மருத்துவமனைக்கு வந்து என்னைத் தம்முடன் வரும்படி அழைத்தார்! நானும் அவருடன் செல்லச் சமிமதித்து அவருடன் மருத்துவமனைக் முன்கூடத்தைவிட்டு வெளியே வந்தேன்! அவ்வளவுதான் தெரியும்! வெளியே காத்துக்கொண்டிருந்த படையணியினரில் நான்கைந்து பேர் எம்மை நோக்கி ஓடிவந்தனர்! ஓரிருவர் எங்களிருவரையும் மருத்துவமனையின் மதிற்சுவரோடு சாத்தி அடிக்க வந்தனர்! இப்போது வேறும் ஒருசிலர் மருத்துவமனையிலிருந்து வெளிவரத் தொடங்கியதால் இவர்களது கவனம் அவர்கள் பக்கம் திரும்பவும், எனது அண்ணர் என்னைத் தப்பி ஓடும்படி வற்புறுத்தவே நானும் ஏதொவொரு வரட்டுத்துணிவுடன் தெருவில் ஓட ஆரம்பித்தேன்! நான் ஓடுவதைக் கண்ட படையினர் என்னைத் துரத்த ஆரம்பித்தனர்! அந்த ஓட்டம் எனது உயிரைக் காப்பதற்கான மரணஓட்டமாகவே என்னுள் இன்றும் நிலைத்திருக்கிறது! மரணபயத்தில் ஓடும்போது அதற்கான ஒருதனி வேகமும், விசையும் தானாக வந்துவிடுகிறது என்பதனை நான் அன்றுதான் உணர்ந்தேன்! அதுவும் எதுவித குற்றமோ தவறோ இழைக்காமல் யாருக்கும் எதுவித இன்னலும், இடையூறும் விளைவிக்காமல் மரணதண்டனைக்கு ஆளாக்கப்படுவதன் ஆனுபவத்தினை நான் அந்த ஒருசில நிமிடத்துளிகளுக்குள் நான் அனுபவித்துத் தீர்த்தேன்!

ஒருசிறிய தூரம்! குறுகிய நேரத்துளிகள்! உயிரைக் குடிக்கத் துடிக்கும் அரக்கக் கரங்கள்! மரணத்தை வெல்வதற்கான போராட்டமல்லவா இது?

இன்றெல்லாம் ஆண்டாண்டு காலமாக எதுவித விசாரணைகளோ, நியாய நீதி வாதப் பிரதிவாதங்களோ, தீர்ப்புகளோ இன்றித் தாம் செய்யாத குற்றங்களுக்காக தமது அரசியல் நம்பிக்கைகளுக்காக தங்கள் வாழ்வியல் வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களுக்காகக் காலங்காலமாகக் கம்பிச்சிறைகளுக்குப் பின்னாலும், கம்பி வேலிகளுக்குப் பின்னாலும் மரணபயத்தோடும் மானத்துக்கான சவால்காளோடும் கலங்கித்துடிக்கும் மானிடப்பிறவிகளை எண்ணும் போதெல்லாம் எனது இதயம் வெந்து வெடிப்பதுண்டு!

யாழ்ப்பாண மருத்துவமனையின் வலப்பக்கமாகத் திரும்பும்போது ஒரு சிறிய தூரத்தில்  யாழ்ப்பாணத் தபாற் தந்திக் காரியாலயமும் அதற்கு முன்னால் ஒரு சிறு குறுக்கு வீதியும் இருந்ததாக எனக்கு இன்றும் ஞாபகத்திலுள்ளது!

தெருவில் ஓடிய எனக்குள் ஏதொ ஒரு சிறுதுளி நம்பிக்கை! இவர்களிடமிருந்து தப்பிவிடுவேன் எனும் ஒரு முரட்டு நம்பிக்கை! ‘எங்காவது ஒளிந்துவிடலாமா?’ இந்த எண்ணம் உதிக்கவும், அந்தக் குறுக்குவீதியின் ஓரத்தில் ‘சாக்கு’ மறைப்பினுள்ளிருந்து ஒரு குரல் என்னை வந்து மோதிற்று! ‘இங்கை வாங்க தம்பி!’ அந்தக் குரலிற் ‘தமிழகப் பாசம்’ வந்து என்னைத் தழுவிக்கொண்டது!

74901817 1d57 4450 b983 aaa71cc65b75 1 696x464 1 தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல் - நேற்றும் இன்றும் : தேடல் 9 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

‘ஆபத்பாந்தவ’ நிலையில் எழுந்த அந்த அழைப்பினை உற்றவாறு அந்தச் ‘சாக்கு’த் திரைக்குள் எனது சடலத்தை மறைத்துவாறு நின்றேன்!

ஓரிரு நிமிடங்கள்தான் இந்தத் ‘திரைமறைப்பு’ எனக்கு அரங்கமைத்தது!

வெளியே வாடா!’ எனும் ‘மரணமொழி’ குரல் ஓங்கி ஒலிக்க, நான் திரையை விலக்கியவாறு ‘சாக்கு’ மறைவினுள்ளிருந்து வெளியே வந்து அவர்களுக்குக் காட்சி கொடுத்தேன். துப்பாக்கி வேள்விக்கு விடப்பட்ட ஒரு இளங்காளைபோல! என்முன்னே கையிற் துப்பாக்கியுடன்  நான்கு அல்லது ஐந்து படையணியினர் நின்றுகொண்டுகொண்டிருந்தனர்!

இவ்விடத்தில்… ஒரு முக்கிய குறிப்பினைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்!

1956இன் தனிச்சிங்கள் மொழித் திணிப்பையும் தொடர்ந்த தமிழ் மொழியழிப்பையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில்…

கொழும்பில் 1970-1971களில் கல்கிசைப் பகுதியில் வாழ்ந்துகொண்டு அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியிற் கல்வி கற்றுவந்தபோதும் கூட சிங்களத்தில் ஒருவார்த்தையைக்கூட ஒழுங்காகக் கற்க முனைப்போ முயற்சியோ எடுக்காத கூட்டத்தில் ஒருவனாகவே நான் உலவிய காரணத்தினால்…

1974 சனவரி மாதம் 10ஆம் திகதி இரவு, அந்த சிங்களப் படையினரின் முன்னால் மரணத்தை நோக்கி நின்றபொழுது, அவர்கள் ‘வெளியே வாடா!’ எனச் சிங்கள மொழியில் என்னை அதட்டியது எப்படி எனக்கு மகவும் தெளிவாக  விளங்கியது என்பது எனக்கு இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது!

(தொடரும்)

Leave a Reply