நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு!
1974 சனவரி 10ஆம் திகதி!
என்றும் போல் அன்றும் இனிதே விடிந்தது! கன்றுகளும் காளைகளும் பெண்டுகளும் பிள்ளைகளும் கொண்டும் கொடுத்தும் பண்டிருந்த பண்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்!
சிறீமாவோ அம்மையாரின் சிங்களப் பௌத்த அரசாங்கத்தின் நாடி நரம்புகளாக விளங்கி இயங்கி நிகழவிருந்த நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கெதிரான அத்தனை கெடுபிடிகளையும், கேடுகளையும் விளைவித்த சிங்கள-தமிழ்ப் பிரமுகர்கள் அறிவியல், மொழியியல், சமூக அரசியற் பொருளாதார மேலாளர்கள் இராணுவ காவற்றுறை அதிகாரிகள் ஆட்சிபீட அலுவலர்கள் என அத்தனைபேரது முனைப்புகள் முயற்சிகளையெல்வாம் முறியடித்த நிலையில் மாநாட்டு ஆய்வரங்க, அறிவரங்க, கலையரங்க, கல்வியரங்க நிகழ்வுகள் 3ஆம் திகதியிலிருந்து மும்முரமாக நிகழ்ந்து நிறைவேறி ஏறக்குறையப் பத்தாயிரம் பேர்மட்டில் சனத்திரள் கூடியிருந்த ஒரு மாபெரும் நிகழ்வாக மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்வு அந்த அழகான மாலைப் பொழுதில் நிகழ்ந்து கொண்டிருந்தது!
அரங்கிலே தமிழறிஞர் அணி குழுமியிருந்தது! தமிழ்த்தாயின் புகழ் பெருகிவழிந்தது!
அரங்கின்முன்னே
தமிழரார்வலர்கள், தமிழ்ப்புரவலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், தமிழுணர்வாளர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள், கற்றோர்கள், கலைஞர்கள், மழலையர்கள், முதியோர்கள், தாயர்கள், தந்தையர்கள் சேயர்கள், சிறுவர்கள், மாதர்கள், மங்கையர்கள், இளைஞர்கள், யுவதிகள் என மக்கள் வெள்ளம் அலைதிரண்டு காணப்பட்டது!
இவ்வாறான ஒரு உணர்வுச் சூழலில்…
பேராசிரியர் நைனா முகமது அவர்களின் ஒப்பற்ற பேருரையைச் செவிமடுத்தவாறு அவரது சிந்தனைச் செம்மாப்பினை உள்ளெடுத்தவாறு மெய்மறந்து நாமெல்லோரும் முத்தமிழில் முக்குளித்துக்கொண்டிருந்த வேளையது!
இப்போது திடீரென எம்மைச்சுற்றி ஓர் அபாயத்தின் அதிர்வலைகள் வந்து சூழ்ந்து கொள்கிறது! எம்மையறியாத ஒரு பீதி எம்மைவந்து கௌவிக்கொள்கிறது!
‘ஜீப்’ வண்டிகளின் சத்தமும் படையணியினரின் ‘பூட்ஸ்’ ஓசையும் படிப்படியாக எமக்குக் கேட்கத் தொடங்கவும் மக்களிடையே ஓர் அச்ச உணர்வும் பரபரப்பும் எழத்தொடங்குகிறது!
அரங்கினையும் மௌ்ள மௌ்ள இப்பரபரப்புத் தொற்றிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது!
எதையும் அறியத்துடிக்கும் இளவயதினராகவிருந்த என்போன்றவர்கள் நிலைமையையும் நிகழ்வுகளையும் மிகவும் விரைவாகச் சுதாகரித்துக் கொண்டோம்!
‘பொலீஸ்’ ‘ஜீப்’பிலும் லொறியிலும் வந்திறங்கிய காவற்படையினர் அதட்டும் குரல்களில் மக்கள் கூட்டத்தினை விரட்டியவாறே நடந்துகொண்டிருந்த விழா நிகழ்வினைக் குலைத்துப் பார்வையாளர்களைக் கலைக்கமுனைந்து முயன்று கொண்டிருப்பதனை நாம் அவதானிக்க முற்பட்டோம்!
ஒரு பொலிஸ் லாரி நிரம்பிய 40இற்கும் மேற்பட்ட ‘கலவர எதிர்ப்பணியினரை’ ஏற்றியவாறு மாநாட்டுத்தலத்திற்குள் அன்றைய யாழ்ப்பாண துணைப்பொலிஸ் மாஅதிபர் சந்திரசேகர அவர்களும் அவரது படையினரும் அத்துமீறி நுழைந்ததன் பிரதிபலிப்பாகவே விழாக்கோலம் பூண்டிருந்த அந்தப் ‘புனித இடம்’ இனவெறிப் படையணியின் சனவிரோதக் களமாக மாறியுள்ளது என்ற உண்மையை நாம் ஊகித்துப் புரிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை! போர்க்களத்திலோ அல்லேல் ஒரு கலவரம் நிகழ்ந்த தலத்திலோ எவ்வாறு இப்படையணியினர் நடந்து கொள்வார்களோ அவ்வாறே இவர்கள் அவ்வேளையும் நடந்துகொணடதை எம்மால் உணரமுடிந்தது! எதிரிகளைச் சுற்றி வளைப்பது போன்ற இவர்களது அத்துமீறிய அட்டகாசமான இப்பிரவேசம் மக்களைப் பயத்திலும் பீதியிலும் அச்சத்தின் பிடியிலும் பிணைத்துப் பின்னியது! ‘சிரசுப் பாதுகாப்புக் கவசம்’ அணிந்த படையணியினர் மக்களை அணுகியவாறு மந்தைக்கூட்டத்தைத் துரத்துவதுபோல தமக்கு வழிவிடுமாறும் அவ்விடத்தைவிட்டு நகருமாறும் அங்கிருந்து அகலுமாறும் கட்ளையிட்டுக் கொண்டிருந்தனர்!
அன்பினையும் அறத்தினையும் அகிலத்தையணைத்திருக்கும் பண்பினையும் ஈதலையும் இசைபடவாழ்தலையும் கொண்டாடிக் குதூகலித்த ஒரு மக்கள் எடுத்த பெருவிழாவினை பேதலிப்பின் பாதிப்பாக மாற்றியது சிறீமாவோ அம்மையார் ஏவிவிட்ட ‘ஏவற்’படையணி!
குடிமக்களின் மொழி கலை இலக்கியம் பண்பாடு வராலாறு சார்ந்த மகிழ்ச்சிப் பேரலையை நெகிழ்ச்சி நிகழ்வலையை ஆட்சியாளரின் ஆதிக்க அடக்குமுறைக்கான ஓர் ‘ஆடுகளமாக’ மாற்றிக்காட்டியது சிறீமாவோ அம்மையாரின் சிங்களப் பௌத்த பெரும்பான்மை அரசு என்றால் அது மிகையாகாது! (ஆட்சிக்கு வரும்போது ‘கையில் விரலைவைத்தாற் கடிப்பாரோ?’ என்று கேட்கத்தக்க அளவிலான அரசியல் அனுபவம் கொண்டிருந்த அம்மையாரின ஆட்சிக்காலம் ஈழத்தமிழர் தேசிய எழுச்சிக்கு உரமிட்ட’ காலம் என்று கூறுவதில் எதுவித தவறும் இருக்காதென நினைக்கிறேன்!)
ஒருசில நிமிடத்துளிகளில் கண்ணீர்ப்புகை துப்பாக்கி மற்றும் குண்டாந்தடி ஏந்திய படையினர் தமது பாதையின் திசையில் நின்ற அப்பாவி மக்களைத் தாக்கியவாறே துரத்தத் தொடங்கினர் ‘கலவரத்தைத் தூண்ட வந்த’ சிறீலங்காவின் ‘கலவர எதிர்ப்பணியினர்’!
இவ்வேளை திடீரெனத் துப்பாக்கிச் சூடுகள் வானோக்கி எழுந்தன! மின்சாரக்கம்பிகளை நோக்கியும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்ததைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது!
அக்கூட்டத்தில் நானும் ஒருவன்! அடிக்க அடிக்க உதைக்க உதைக்க ஓடிய தமிழர்களுள் வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்! சனநாயகத்தையும் அறத்தையும் அன்பையும் நீதியையும் சட்டத்ததையும் சமாதானத்தையும் எல்வாவற்றிற்கும் மேலாக சத்தியத்தையும் தர்மத்தையும் உறுதியாக நம்பியவர்களுள் ஒருவனாக வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்! என்றோ ஒருநாள்… சிங்களப்பெரும்பான்மை இனத்திலும் நல்ல தiலைமைகள் உருவாகும் என நம்பி வாழ்ந்து பழகிய நானும் ஒருவன்!
அதுவும் குறிப்பாக இலங்கையின் சுதந்திர தினத்தினையொட்டிய தேசிய கீதத்தினைத் தமிழில் யாத்தவர் எனது தந்தையார் முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்கள் பலருமறிந்த என்பது ஓh வரலாற்று உண்மை! எனது தந்தையார் காலத்திலே இலங்கைத் தேசியம் என்ற பதம் ஒன்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் நம்பப்பட்டும் வந்துள்ளதென்பதை நாமெல்லோரும் கற்றும் கேட்டும் அறிந்தும் வந்திருக்கிறோம்! ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றதாக எண்ணிக்கொணடு ‘கறுப்புத் தோல்நிறக்’ கறுவாத்தோட்ட வெள்ளைக்காரர்களால் ஆளப்பட்ட ஒரு வரலாற்றில் ‘ஈரினங்கள் கொண்ட ஒரு தேசம்’ என்ற அரசியற் சித்தாந்தம் மேலோங்கி நின்ற காலத்தின் எச்சங்களின் எச்சங்களாகவே நம்முட்பலரும் இருந்திருக்கிறோமென்பதில் எதுவித மறுப்பும் கூறுவதற்கில்லை!
எனவே அன்று உயிரைப்பாதுகாக்க ஓடிய கூட்டத்தில் எல்லாவகைத் தமிழரும் இருந்தனர்! ஈழத்தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்திற் தமது தமிழ்த் தேச தேசிய தன்னாட்சி இறைமைகளோடு வரலாற்று வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களோடு வாழும் உரிமைகளுக்காக அறவழியிலும் அன்புவழியிலும் ஏன் மறவழியிலும் கூடப் போராடவேண்டும் என நம்பியவர்களும் அன்று ஓடிய கூட்டத்தில் இருந்திருக்கக்கூடுமென நான் எண்ணுகின்றேன்!
எனது பக்கத்தில் ஓடியவர்களுள் எமது தாயகத்தின் நாயன வாத்திய மேதைகளுள் ஒருவரான பத்மநாதன் அவர்களும் ஒருவராவார்!(1976ஆம் ஆண்டு அல்லது 1977ஆம் என எண்ணுகின்றேன்! இம்மேதையை Indian YMCA இல்நிகழ்ந்த ஒருவிழாவிற்கு அழைத்து அவரைக் கௌரவித்து அவரது இசைமழையில் நனைந்த அனுபவம் நினைவிற்கு வருகின்றது! அப்போது ‘அமைச்சூர்த் தமிழ்க் கலைஞர் குழு’ எனும் ஓர் அமைப்பினை எனது நண்பர்கள் ஒரு சிலருடன் நடாத்தி வந்த இனிய நாட்களவை! அவரை அறிமுகம் செய்யும் போது அவரும் நானும் மாநாட்டிலிருந்து துரத்தப்பட்டு பக்கத்தில் ஓடிய அனுபவத்தினை ஞாபகப்படுத்தியபோது அவரும் அதனை நினைவுபடுத்திக்கொண்டதை அவதானித்தேன்!)
உயிரைப்பாதுகாக்க ஓடிய மக்கள் கூட்டத்தில் எமது அன்றைய தமிழர்கூட்டணியின் ஒரு மிகமுக்கிய பாராளுமன்ற அங்கத்தவரையும் நான் ஒரு கட்டடத்தினுட் கண்டேன்! தமிழரின் தலைவிதியை எண்ணிப் பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்!
மேலும் எம்மைப் பொறுப்புணர்வோடு ‘காக்கவேண்டியவர்களின்’ கொடிய தாக்குதல்களுக்குத் தப்பி எமது உயிருக்குப் பாதுகாப்புத்தேடி நம்முட்பலர் யாழ்ப்பாண வைத்தியசாலையை நோக்கி ஓடினோம்!
அங்கே வைத்தியசாலை வாசலில் நின்றுகொணடிருந்த மருத்துவமனையின் பிரதம வைத்திய அதிகாரி எமக்குத் தஞ்சமளித்தார்!
அப்போதுதான் அந்த மிகவும் நெஞ்சை உலுக்கும் செய்தி எம்மை வந்து எட்டியது! மாநாட்டில் எமது உறவுகள் உயிரிழந்த செய்தியை அறிந்து எனது விழிகளிலிருந்து நீர்கொட்டியது!
மின்சாரக்கம்பியின் தாக்குதலால் இவர்கள் உயிரிழந்தார்களென்ற செய்தியும் எமக்குக்கிட்டியது!
ஓரிரு மணித்துணிகளுக்குள் மாநாட்டிற் படையினராற் படுகொலை செய்யப்பட்ட தமிழுறவுகளின் சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன!
அச்சடலங்களை யார் யாரென இனங்காணுமாறு வைத்தியசாலையின் முன்கூடத்தில் நின்று கொண்டிருந்த எம்மை அழைத்தனர் மருத்துவமனையின் பணியாளர்கள் சிலர்! அவர்களை இனங்காணச் சென்றவர்களுள் நானும் ஒருவன்! இருபத்து நான்கு அகவைகொண்ட இளைஞனாகவும் ஓர் வீறுகொணட் இளங்கவிஞனாகவும் வீச்சுள்ள அரங்கப் பேச்சாளனாகவும் கூத்து நாடக வில்லுப்பாட்டு ஆகிய கிராமியக் கலைகளின் ஆற்றுகையாளனாகவும் வளரத்துடித்த நானும் அன்று அந்தச் சடலங்களை இனங்காணச் சென்றேன்! அப்போது எனக்கிருந்த உணர்வுகளை விபரிக்க இப்போதும் என்னிடம் வார்த்தைகளில்லை!
இவ்வாறான உணர்ச்சிப்பிளம்பின் உச்சியில் நான் இன்னும் பலரோடு மருத்துவமனையின் முன்கூடத்தில் நின்று கொண்டிருந்தேன்!
எனது தலையெழுத்தைப் பிரமதேவன் மீளாய்வு செய்துகொண்டிருந்தான்!
தொடரும்….