தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்

ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும் சிங்களவர் வாழும் நிலப்பரப்புக்கும் இடையே பெரும் காட்டுப் பிரதேசம் எல்லையாக இருந்தது.

கி.பி. 1500ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் தாயகப் பகுதிகள் ஈழத்தமிழர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிங்களவர் பகுதிகள் சிங்களவர்களால் ஆளுகை செய்யப்பட்டது. கி.பி.1796ஆம் ஆண்டில் இலங்கைத் தீவை ஆக்கிரமித்த பிரித்தானியர்கள், தமது ஆளுகை வசதிக்காக 1832ஆம் ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகளையும் சிங்களவர் தாயகப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றையாட்சி முறைக்கு கீழ் கொண்டு வந்து ஆளுகை செய்தனர். இந்த நிலை 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது வரை தொடர்ந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, தமிழர் தாயகப் பகுதிகள் சிங்கள அரசின் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, இலங்கையை ஆண்ட சிங்கள பௌத்த இனவாத அரசுகள், தமிழர் தாயகத்தைச் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எணணக்கருவைச் சிதைக்கும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களைப் பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ் மொழியை அழித்து, தமிழர் வரலாற்றைத் திரித்து கலை பண்பாட்டைச் சீரழித்து, தமிழர் தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் இறையாண்மையையும் மறுக்கும் நிலையை உருவாக்கச் சிங்கள அரசுகள் முற்பட்டுள்ளன. இதை அடைவதற்கு சிங்கள அரசுகள் பல்வேறுபட்ட சூழ்ச்சிச் செயற்றிட்டங்களை  நிறைவேற்றி வந்துள்ளன. அத்துடன் நிறைவேற்றியும் வருகின்றன. இந்த வழியில் ஈழத்தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீர்குலைத்து அரசியல் உரிமையைக் கேள்விக்குறியாக்கிப் பலவீனப்படுத்தச் சிங்கள அரசுகள் திட்டமிட்டுள்ளன.

  • தமிழர் தாயக எல்லைகளை கைப்பற்றும் திட்டங்கள்
  • தமிழர் தாயகப் பகுதிகளைத் துண்டாடும் திட்டங்கள்
  • தமிழர் தாயத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயப்படுத்தும் திட்டங்கள்
  • ஈழத்தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்தும் திட்டங்கள்
  • தமிழர் தேசியத்தைச் சிதைத்து, அரசியல் உரிமையை மறுக்கும் திட்டங்கள் எனப்

பல்வேறு செயற்றிட்டங்களைச் சிங்கள அரசுகள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களைச் சுலபமாக நிறைவேற்றும் வகையில் வாய்ப்பான சூழ்நிலைகளும் உருவாக்கப்பட்டன.

eelam map002 தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்

*தமிழர் தாயகத்தை இராணுவமயப்படுத்தல்

*தமிழர் தாயக மாவட்டத்தின் பொறுப்பாக சிங்கள அரச அதிகாரிகளையும் இராணுவ அதிகாரிகளையும் நியமித்தல்

*தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள பௌத்த விகாரைகளை உருவாக்குதல்

*தமிழர் தாயகப் பகுதிகளுடன் சிங்களப் பகுதிகளை இணைத்தல்

*தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து சிங்களவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளாகச் செல்லும் நிலையை ஏற்படுத்துதல் என்ற அடிப்படையில் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துதல்

*இந்த நிலைமைகள் யாவும் ஈழத்தமிழினத்தின் வாழ்வு நிலைகளையும் வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தன. ஈழத்தமிழினத்தின் எழுச்சியையும் அரசியல் உரிமையையும் பலவீனப்படுத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு மாற்றங்களைத் தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தியுள்ளன.

*ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழரின் இனவிகிதாசாரம் குறைந்து சிங்களவரின் இனவிகிதாசாரம் அதிகரித்துள்ளது.

*தமிழர் தாயகப் பகுதிகளில் விகிதாசாரத் தேர்தல் முறைகள் மூலம் தமிழர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்து, சிங்களவர் பிரதிநிதித்துவமும் சிங்களக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*ஈழத்தமிழினத்தின் பொருளாதார வாழ்வு தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

*தமிழர் தாயகத்தின் பகுதிகளில் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

*தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மாவட்டங்களும் சிங்களப் பிரதேசச் செயற்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

*தமிழர் தாயகத்தின் மொத்த நிலப்பரப்பில் 40 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்பு முற்றுமுழுதாகச் சிங்களமயப்படுத்தப்பட்டுள்ளது.

*ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவின் உள்ளகத்தினுள்ளும்  புலம்பெயர்ந்து வெளியகத்தில் சர்வதேசத்திலும் வாழ்ந்து வந்தாலும், ஒரே சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இந்தச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை சிறீலங்கா அரசு அழிக்க நினைக்கிறது. ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து, தனது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைப் பலப்படுத்த வேண்டும். இதற்கான செயற்பாடுகளை ஈழத்தமிழினம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இதற்காக

*ஈழத்தமிழினம் ஒன்றிணைந்து தம்மைப் பலப்படுத்த வேண்டும்

*ஈழத்தமிழர்கள் தமது சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும்

*தமிழர் தாயகப் பகுதிகளையும் எல்லைகளையும் காக்கும் செற்றிட்ட வடிவங்களை உருவாக்கி அவற்றை மேற்கொள்ள வேண்டும்

*ஈழத்தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, எதிர்காலச் சந்ததியினர் அவற்றை அறியும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

*இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.

*ஈழத்தமிழர்கள் தமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தி தமிழர் தாயகத்தின் கிராமங்களில் அமைப்புக்களைக் கட்டமைத்துப் பலப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

*ஈழத்தமிழர்களின் அரசியல் அமைப்புகள் யாவும் ஒன்றிணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

*கடந்த காலங்களில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைகளையும், தமிழினத்தின் அவலங்களையும் தமிழர் தொன்மை, உரிமை என்பவை பற்றி பன்னாட்டு அரங்கில் தொடர்ச்சியான பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்..

*தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் நிறுவனமயப்படுத்தலுக்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*சர்வதேச ரீதியாக ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எடுத்துரைத்து, தமிழர்களின் அரசியல் உரிமையையும், இறையாண்மையையும் நிலைநாட்டிடவேண்டும்.