தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

தமிழனின் பண்பாட்டின், வரலாற்றின் தொடர்ச்சி என்பது மிக நீளமானது.  நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை தவறவிட்டுள்ளோம்.தமிழர்களின் பழைமையான நாடுகளான கீழடி என்னும் பாண்டிய நாடு மற்றும்  பூம்புகார் எனப்படும் சோழ நாடு மற்றும் கொடுமணல் எனப்படும் சேரநாட்டு செய்திகளை இங்கே பார்க்கலாம்.

இந்த மூன்று நாடுகளுடனும் ஓர் வணிக தொடர்பு உள்ளது. கொடுமணலுக்கான ஆராய்ச்சி 1985இலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொடுமணல் என்பது உலகத்திற்குத் தேவையான உருக்கு உலோகத்தை உருவாக்கக்கூடிய ஒரு இடமாக இருந்தது. சேர நாட்டின் துறைமுகம் முசிறி, அதன் தலைநகரம் கரூர். முசிறி என்பது கேரளாவில் காணப்படும் பட்டணம் என்ற ஊர் ஆகும். இது உலக வணிகத் துறைமுகமாக விளங்கியது.

இது சேர நாட்டின் துறைமுகமாகும். சேரநாட்டின் துறைமுகத்திற்கும், தலைநகரமான கரூரிற்கும் இடையில் இருந்தமையால் கொடுமணல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட உருக்கு உட்பட ஏனைய தொழிற்சாலைப் பொருட்களை முசிறிக்கே எடுத்தச் சென்றுள்ளனர்.

1948இல் வார்மிங்க்டன் (E.H. Warmington) என்பர்  ‘the commerce between the roman empire and india’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். கொடுமணலிலும், கரூரிலும் றோமர் பயன்படுத்திய நாணயங்கள் கிடைத்ததே இந்த வணிகத் தொடர்பின் முக்கிய செய்தியாகும். றோமபுரியுடனான வணிகம் இங்கு செழிப்பாக இருந்துள்ளது. அத்துடன் இங்கு கிடைக்கப் பெற்ற எலும்புக்கூடுகள்கூட பல நாட்டவர்களின் மரபணு கொண்டதாக இருந்துள்ளது.TH18 KODUMANAL தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

கிரேக்க நாட்டவர்களின் மிகப் பழைமையான 2000 ஆம் ஆண்டிற்கு முந்தைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட  புத்தகம்  Pheriplus of Erythryean Sea . இதை யார் எழுதினார்கள் என்றுகூட தெரியாது. 1905இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. தமிழ்ல் செங்கடல் செலவு என வெளிவந்தது. இந்தப் புத்தகத்தில்கூட சேர நாட்டின் முசிறி வழியாக எரித்திரியன் கடல் வழியாக ரோமபுரி நாட்டிற்கும், கிரேக்க நாட்டிற்கும் வணிகம் நடந்தது என்றும், என்ன பொருட்கள் வந்தது என்று  அதில் எழுதப்பட்டுள்ளது.

1985இல் இது தொடர்பாக அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற போதும் இன்னும் முழுமையான தகவல்கள்  கிடைக்கவில்லை.

அடுத்து சோழ நாடு இது தமிழனின் மிகப் பெரிய வணிக இடமாகும். இது துறைமுகப் போக்குவரத்தில் மிகப் பழைமையான இடமாகும். 2002இல் இந்தியக் கடலாராச்சித் துறை ஒரு ஆய்வை மேற்கொண்டது. நிதி இன்மையால் இது நிறுத்தப்பட்டது. அப்போது கிரகாம் ஆன்குக் (Graham Hancook) என்ற இங்கிலாந்து கடலாராச்சியாளர் வருகின்றார். 2002 துவரகா கடற்பகுதியை ஆராய்ச்சி செய்தார். பின்னர் பெங்களுரில் உள்ள   இந்திய கடலியல் ஆராய்ச்சி நிறுவனன் இல் பூம்புகார் மகாபலிபுரம் பற்றி அறிந்து கொண்டு பூம்புகார் பகுதிக்கு வந்தார். அவர் அங்கு வந்த போது முழுமையாக ஆய்வு செய்வதற்கான நிதி அவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் அவர் “சனல் 4” என்னும் இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் நிதி பெற்று பூம்புகார் கடலினுள் முடிந்தளவு சென்றார். அவர் சென்ற இடத்தை கடந்தும் பூம்புகார் இருந்தது. இருந்தும் அவர் சென்ற இடத்திலேயே பல செய்திகள் கிடைத்ததாக அவர் கூறினார். வணிக போக்குவரத்திற்கான அதிநவீன துறைமுக கட்டடங்கள் இருந்ததாக கூறினார்.

இங்கிலாந்தின் டர்காம் (Durham) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கிளென் மில்னே (Glenn Milne) என்ற ஆராய்ச்சியாளருடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சிகளை வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். பும்புகாரில் இதுவரை கிடைத்த ஆராய்ச்சி தகவல்களின்படி கி.மு 5000 ஆண்டு அதாவது இன்றிலிருந்து 7500 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். ஆனால் 2002இற்கு பின்னர் இந்த ஆராய்ச்சிகள் தொடரப்படவில்லை.

2000ஆம் ஆண்டிற்கு முன்னர் எழுதப்பட்ட பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியம் பும்புகாரைப் பற்றி கூறுகின்றது. அதில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பாடலில் ஈழம் உட்பட பல நாடுகளிலிருந்து பும்புகார் நகரத்திற்கு வணிகப் பொருட்கள் வந்ததாக கூறப்படுகின்றது.poompukaar தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

அதேவேளை இன்னொரு பாடலில் சோழ நாட்டிற்கு ஒரு துறைமுகச் சாவடிஇருந்ததாகவும், அங்கு புலிக்கொடி பதித்தே உள்ளே பொருட்கள் நுழைவதும்,வெளியே பொருட்கள் போவதும் நடைமுறையில் இருந்துள்ளது என்று கூறுகின்றது.

அடுத்து பாண்டிய நாடு பற்றியது அதாவது ஆதிச்சநல்லூர். பாண்டிய நாட்டிற்கு மிக அருகிலுள்ள துறைமுகம் கொற்கை. அதிக மக்கள் வாழ்ந்த நகரமாக ஆதிச்சநல்லூர் காணப்படுகின்றது. 1876இல் டாக்டர் ஜாகர் என்பவர்  என்பவர் ஆராய்ச்சி செய்தார். அதன் தரவுகள், முடிவுகள், கிடைக்கப்பெற்ற பொருட்கள் பேர்லின் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கூறுகின்றார்கள். ஜேர்மனி பெர்லினில் 90 அருங்காட்சியகங்கள் உள்ளன. 120 ஆண்டுகளாகி விட்டன. எந்த அருங்காட்சியகத்தில் எந்தப் பொருட்கள் இருக்கின்றன என்பது தெரியாதுள்ளது.

1986இற்கு பின்னர் 1904இல் அலெக்ஸான்டர் றீயா (Alexander Rea) என்ற வெள்ளைக்காரர் ஆராய்ச்சி செய்தார். 160 இடங்களில் புதைபொருட்கள் கண்டு பிடிக்கின்றார். பண்டைய மக்கள் பாவித்த பானைகள் பலநூறை அவர் கண்டுபிடித்துள்ளார். 1904இற்கு பின்னர் 2004 இல் தான் நூறு ஆண்டுகள் கழித்தே இந்த அகழ்வாராய்ச்சி தொல்லியல்துறையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற தமிழரால் நடந்தது. இங்கு குறைவான இடங்களிலேயே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கும் றோமன் நாணயங்கள் கிடைக்கப் பெற்றன. அத்துடன் ஆதிச்சநல்லூருக்கும் சிந்து சமவெளியையும் தொடர்புபடுத்தக்கூடிய சில நடனமாடும் பெண்களின் உருவ சிலைகளும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த பானை ஓட்டு கீறல்களும், சிந்துவெளியில் கிடைத்த பானை ஓட்டு கீறல்களும் ஒத்துப் போகின்றன. இது பாண்டிய நாட்டின் கடைசி நிலப்பகுதியையும் வட நாட்டின் சிந்துசமவெளிக்கும் இது ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிந்து சமவெளியில் கிடைத்துள்ள உருக்கிலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள உருக்கிலும் ஒரே அளவான துத்த நாகம் காணப்படுகின்றது. இது 6வீதமாகும். இந்தியாவில் வேறு எங்கு கிடைத்த உலோகத்திலும் 6வீத துத்தநாகம் காணப்படவில்லை. இது இரு நாகரீகங்களையும் மிக நெருக்கமாக தொடர்புபடுத்துகின்றது.Fea04 தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புகளில் ஆஸ்ரேலியட்,  மொங்கலைட் போன்ற இனத்தவர்களின் தன்மைகள் உள்ளன. இவர்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். அல்லது வணிகம் செய்ய வந்துள்ளனர். இதேபோல் கொடுமணலில் றோமபுரி நாட்டு மக்களின் எலும்புகள், எச்சங்கள்  இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் துறைமுகங்கள், தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் பலநாட்டவர்களின் வணிகத் தொடர்பு, போக்குவரத்து இருந்துள்ளது. ஒருவேளை அவர்கள் இங்கு வசித்திருக்கலாம். அல்லது உறவாடியிருக்கலாம். இதிலிருந்து தமிழ்ச் சமூகம் ஒரு சர்வதேச சமூகம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பானை ஓட்டுக் கீறல்களில் பழைய எழுத்துருக்கள் எனப்படும் தமிழி எனப்படும் எழுத்துருக்கள் காணப்பட்டுள்ளது. ஒரு முக்கிய விடயம் என்னவெனில் ஸ்பானிஷ் நாட்டு பேராசிரியர் ஹென்றி ஹிராஸ் பம்பாயில் பேராசிரியராக பணிபுரிந்தவர். அவர் சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். அவர் தமிழ்நாட்டு தமிழ் பாரம்பரியங்களை அறிந்தவர். சிந்துவெளி எழுத்துக்களுடன்  தமிழ் நாட்டு எழுத்துக்களையும் ஒப்பிடுட்டு அதை மெசகொடமிய நாகரீகத்துடன் தொடர்புடையது என கூறினார். வணிகத் தொடர்புகள் மூலம் இந்த எழுத்துருக்கள் பயணிக்கப்பட்டிருக்கலாம்.  இதை அவர் 60 ஆண்டுகளுக்கு முன்  Studies on Proto-Indo Mediterranean Culture என்னும் புத்தகத்தில் இதுபற்றி எழுதியிருக்கின்றார்.Adichanallur2000BC தமிழர்களின் உலகளாவிய வணிகத் தொடர்புகள்- முனைவர் விஜய் அசோகன்

இறுதியாக இதிலிருந்து புரிவது என்னவெனில், உலக வணிக துறைமுகங்கள், வணிக போக்குவரத்துக்கள், வணிக தொடர்பு என்பது தமிழ்நாட்டினுடைய மையத்தை அது சேர நாடாகவோ, சோழ நாடாகவோ பாண்டிய நாடாகவோ இருக்கலாம். பலநாட்டு வணிகத் தொடர்பை சர்வதேச வணிகத் தொடர்பை கொண்டதாக தமிழ்நாடு விளங்கியது.

மற்றும் சர்வதேசத்தை தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தும் 2 கல்வெட்டுக்கள் உள்ளன. ஹே ஜோங் என்ற சீன நாட்டு வணிகர்  1400ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். வணிகர்கள் வணிக விஜயங்களை மேற்கொள்ளும் போது இறைவனை வேண்டி கல்வெட்டு அமைப்பது வழக்கம். அதேபோல் இவர் 3 கல்வெட்டை எழுதுகின்றார். ஒன்று தமிழில் உள்ள கல்வெட்டு. இதில் நாயனார் என்ற தெய்வத்தை வணங்கும் கல்வெட்டு. மற்றையது பெர்ஷிய மொழியில் இருக்கின்றது. மற்றையது சீன மொழி. இந்த மூன்று மொழிகளிலும் தான் அந்த கல்வெட்டு உள்ளது.

மேலும் 1000 வருடங்களுக்கு முன்னர் கொங்ஸோ என்னுமிடத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது சீன வணிகர்கள் கடவுளை வழிபட்ட ஒரு கல்வெட்டு. அந்தக் கல்வெட்டில் தமிழும் சீன மொழி மட்டுமே உள்ளது. தமிழனுக்கு  சீனாவுடன், கிரேக்கத்துடன், சுமேரியாவுடன் தொடர்பு உள்ளது. எரித்திரிய கடல் வழியாக போக்குவரத்து உள்ளது. எல்லாமே தமிழர்களின் மொழியையும், தமிழர்களின் நிலத்தையும் தொடர்புபடுத்துகின்றது.

உலகெங்கும் நமக்கு கிளை இருக்கின்றது. நமக்கு பண்பாட்டு தொடர்பு இருக்கின்றது.வணிகத் தொடர்பு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டினுடைய வணிகத் தொடர்பையும், சர்வதேச மையப்படுத்திய சிந்தனையையும் வைத்துக் கொண்டு நாம் அடுத்த கட்டமாக  எம்முடைய இனத்தை நாம் எடுத்துச் செல்வது என்பதை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.