தமிழகத்தின் புதிய ஆட்சி ஈழத்தமிழர் நீதிக்கான அமுக்கக் குழுவாக வேண்டும்

481 Views

தமிழகத் தேர்தல் களம் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை புதியவர்கள் பக்கம் மக்களின் நாட்டம் அதிகமாக இருந்தமையால், புதிதாகக் களமிறங்கியவர்களுக்கான வாக்குப்பலம் அதிகரித்திருப்பதாகவும், அது எவ்வாறு அமைகிறதோ அதற்கேற்பவே பெரிய கட்சிகளின் வெற்றி அமையும் என்பதும், எந்தக் கட்சி ஆட்சியானாலும் அது கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்தே அமையும் என்பதும் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இம்முறையும் தேர்தல் களத்தில் வழமை போலவே ஈழத்தமிழர் பிரச்சினைகள், தமிழ், தமிழர் என்னும் மொழி இன உணர்ச்சிகளைத் தேர்தல் நேரத்தில் தூண்டுவதற்கான பரப்புரைக் கருவிகளாகக் கையாளப்பட்டுள்ளன.

அதே வேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர்க்கு சிறீலங்காவின் மனித உரிமைகள் மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான செயல்கள் குறித்த விசாரணைகளை நடாத்தித் தகவல்களைச் சேகரித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்க அலுவலகம் ஒன்றை நிறுவவும், பணியாளர்களை நியமிக்கவும் 2.8 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டுடன் ஆணையளித்த, மனித உரிமைக் கவுன்சிலின் 2021ஆம் ஆண்டுத் தீர்மானத்தில் இந்தியா கலந்து கொள்ளாமையை ஈழத்தமிழர்களை இந்திய மத்திய அரசு கூட்டு மொத்தமாகக் காட்டிக் கொடுத்த செயலாக அறிவித்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் “தமிழக மக்கள் தங்கள் வாக்கினால் அவர்களைத் தண்டிக்க வேண்டும்” எனத் தேர்தல் வேண்டுகோளையும் விடுத்தார்.  அந்த வகையில் தமிழகத் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவரான திரு ப. சிதம்பரம் அவர்களால் இந்தியாவின் மனிதஉரிமை பேரவையின் செயற்பாட்டுக்கான தமிழக மக்களின் விருப்பை அறியும் அடையாளக் குடியொப்பமாகவே மாற்றப்பட்டு விட்டது.

சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எல்லாமே இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறீலங்கா குறித்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென ஒற்றுமையாக விடுத்த அழைப்பை இந்திய மத்திய அரசு அலட்சியப்படுத்திய செயல், தமிழக மக்களை அவமதித்து, பாரதிய சனதாவுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள அண்ணா தி.மு.க வின் விக்கெட்டை வீழ்த்த வீசப்பட்ட கிரிக்கெட் பந்து எனவே ஊடகங்கள் வர்ணித்தன.

இதனைச் சமாளிக்கச் சென்னை வந்த இந்தியப் பிரதமர் மாண்பமை நரேந்திரமோடி அவர்கள் சென்னையில் வைத்து ஈழத் தமிழர்களின் சமத்துவமும், கண்ணியமுமான வாழ்வை உறுதி செய்யத் தமது கட்சி சிறீலங்காவை வற்புறுத்தும் என உறுதியளித்து, இலங்கையில் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்குத் தாங்கள் செய்து வரும் திட்டங்கள், நிதியளிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஆயினும் ஈழத்தமிழர்களின் சமத்துவம், கண்ணியம் என இந்தியா எதனைக் கருதுகிறது என்ற விளக்கம் பாரதிய சனதாக் கட்சியிலிருந்து தெளிவான முறையில் இதுவரை எடுத்துரைக்கப்படவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் நல்வாழ்வு என்னும் தலைப்பில் இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. 13ஆம் பிரிவு, “இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலகநாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசைத் தி.மு. கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.” என அமைந்துள்ளது. 14ஆம் பிரிவு. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே ஐ.நா.சபையின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், சட்டப் பிரிவுகளை உருவாக்கவும், சிறீலங்கா அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தும் என எடுத்துரைக்கப்பட்டிருந்தது. கூடவே இந்தியாவில் அகதிகளாக வந்து வசிக்கும் 58,843 ஈழத்தமிழர்களுக்கும் அகதி முகாங்களில் 108 முகாங்களில் வாழும் 34,135 ஈழத்தமிழர்களுக்கும்  30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமையுடன் கூடிய இரட்டைக் குடியுரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தி.மு.க தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்துள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப்பேண வெளிநாடுவாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக எல்லாத் தமிழகக் கட்சிகளுமே ஈழத்தமிழர் பிரச்சினையில் தேர்தல் களத்தில் அக்கறை காட்டியள்ளனர். இந்நிலையில் எவர் சட்டசபையில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், அவர்கள் இனஅழிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான சிறந்த அமுக்கக் குழுவாகத் தமது இனத்துவக் கடமையைச் செய்ய வேண்டும்.  இந்தியா எக்காலமும் ஈழத்தமிழர் பிரச்சினையை ஈழத்தமிழர்களுக்கான நீதியுடன் தீர்ப்பதைத் தனது பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற வெளிவிகாரக் கொள்கையுடன் செயற்படுவதை மாற்றி உண்மையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வே இந்துமா கடலை அமைதிக் கடலாக வைப்பதற்கான சிறந்த நடைமுறை வழியாகவும், உலகத் தமிழினத்தை ஒன்றிணைத்து தமிழக மக்களையும், ஈழமக்களையும் இந்தியா எதிர்பார்ப்பதுபோல  ‘சமத்துவமான கண்ணியமான’ மக்களாக வாழவும், வளம் பெற வைக்கும் வழியாகவும் உள்ளது என்பதையும் மத்திய அரசுக்கு எடுத்து விளக்க வேண்டும். இவற்றை முன்னெடுக்கக் கூடிய வகையில், உலகத் தமிழர்கள் புதிதாகப் பதவி ஏற்கும் தமிழக அரசுடன் உறவாடவும், உரையாடவும் எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என்பதே ‘இலக்கின்’ எண்ணம்.

Leave a Reply