தமது பூர்வீக நிலங்களை பெற்றுத் தருமாறு வசாவிளான் மக்கள் கோரிக்கை

பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு  டக்ளஸ் தேவானந்தாவிடம் வயாவிளான் பிரதேச மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்   டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த  போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் எடுத்த கடும் முயற்சி காரணமாக வலி.வடக்கின் கணிசமான  காணி நிலங்கள் மீள எமது மக்களுகு பெற்றுத்தரப்பட்டிருந்தன. ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது மந்தகதியானது.

அதிகாரத்தை தாங்கள் கைப்பற்றுவதற்காக கடந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல்வேறு கோசங்களை முன்வைத்து அனைத்தையும் பெற்றுத்தருவோம் எனக் கூறி வாக்குகளை பெற்று இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு ஒத்தாசை கொடுத்து ஆட்சியை தாங்கிப்பிடித்தனர். ஆனால் அவர்கள் வழமை போன்றே எம்மை ஏமாற்றிவிட்டனர்.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சொந்த பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறி பிற பிரதேசங்களில் வாழ்ந்துவரும் நாம் தற்போது எமது பூர்வீக நிலங்களுக்கு மீளச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் எமது பிரதேச காணி நிலங்கள் இன்னமும் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாது தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயநலத்திற்காக பலாலி விமான நிலைய நுழைவாயிலையும் மாற்றியமைத்துள்ளனர். இது எமது இயல்பு நிலையை மட்டுமல்லாது எதிர்காலத்தில் எமது காணிநிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் அமையக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நிறுத்தி ஏற்கனவே இருந்த நுழைவாயிலை புனரமைக்கப்படும் பலாலி விமான நிலையத்தின் நுழைவாயிலாக புனரமைக்க வழிவகை செய்யவேண்டும்  என தெரிவித்தனர்.