தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி

சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இம்முறை ஐ.நா. தீர்மானங்கள் வெளிவந்ததின் பின்னர் சிறீலங்கா அரச அதிபர் செய்துள்ள சில வேலைகளையும், எடுத்துள்ள முடிவுகளையும் எடுத்து நோக்குவது; அடுத்து எதனைச் செய்து, எப்படிச் செய்து  ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம் என்பதில் தெளிவு பெற உதவும்.

சிறீலங்காவின் அரச அதிபர் வெளிப்படையாகவே மீண்டும் தன்னுடைய உயிரைவிடத் தன்னைத் தெரிவுசெய்தவர்களின் நோக்கை அதாவது பெரும்பான்மையினரின் விருப்புக்களை நிறைவேற்றுவதே தன் கடமையென பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். இதுவே தனது அரசாங்கத்தின் கொள்கை எனவும் இதனை இலங்கைத் தமிழர்களையும், தமிழ்மொழி பேசும் முஸ்லீம் மக்களையும், மலையகத் தமிழர்களையும், படைபலம் கொண்டு ஏற்க வைப்பதே தனது அரசாங்க நிர்வாகம் எனவும் அவர் மீளவும் மீளவும் அனைத்துலக சட்டங்களுக்கோ முறைமைகளுக்கோ எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றார். இதன்வழி சிறீலங்காவின் அரச கொள்கையாகவே ஈழத்தமிழினத்தின் மேலான இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்ற மூன்றுமே என்றும் தொடரும் என்பதும்,  தமிழ்மொழி பேசும் அனைவரது மனித உரிமைகளையும் வன்முறைப்படுத்தல் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஒருமைப்பாடு என முன்னெடுக்கப்படும் என்பதும் மீண்டும் உலகுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்மொழி பேசும் முஸ்லீம் சகோதர்களுக்கு எதிரான எல்லா விதமான குற்றப் பத்திரிகைகளும் புனையப்பட்டு அவர்களைப் பயங்கரவாதக் குற்றச் செயல்களைச் செய்யும் இனமாகப் பரப்புரைகள் செய்யப்படுவது இவ் அரசின் தந்திரோபாயமாகத் தொடர்கிறது.  அதே நேரத்தில், ஈழத்தமிழர்களும், தமிழ்பேசும் மக்களும் ஒருங்கிணைந்து அரசியல் எதிர்ப்பை சனநாயக வழிகளில் உருவாக்குவதைத் தடுக்க இனத்தின் மதத்தின் பேரால் அரசியல் கட்சிகளைப் பதிய முடியாது என்கிற சட்டத்தையும் சிறீலங்கா உருவாக்கி வருகிறது.

ஆயினும் சிறீலங்காவை எந்த அளவுக்கு உலகம் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டது என்பதற்கு உதாரணமாக யேர்மனிய பிபிசி ஊடகவியலாளர் டிம் செபஸ்ரியன் அவர்களின் சிறீலங்கா வெளிவிவகாரச் செயலாளர் உடனான செவ்வி அமைந்துள்ளது.  சிறுவர்களைக் கொன்றழிக்கும் மாபாதகச் செயலுக்குக் கூட மன்னிப்பு அளித்து சீர்செய்யும் அரச அதிபராக உலகில் சிறீலங்கா அரச அதிபர் விளங்குகிறார் என டிம் செபஸ்ரியன் அவர்கள், அச்செவ்வியில் குற்றம்சுமத்திய பொழுது சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலர் பதில் கூற முடியாது திணறினார். கூடவே மேலும் பல கேள்விகள் மூலம் சிறீலங்காவின் மனித உரிமைகள் வன்முறையை அச்செவ்வி உலகத்தவர்க்குத் தோலுரித்துக் காட்டியது. சிறீலங்கா சட்டத்தின் ஆட்சியை, நீதியை, ஈழத்தமிழர்களுக்கு மறுப்பதையும், அனைத்துலகச் சட்டங்களை வன்முறைப்படுத்துவதையும் இனியும் உலகம் ஏற்றுக்கொள்ளாது என்பதை நேரடியாகவே சிறீலங்காவுக்கு எந்தவித ஒளிவுமறைவுமின்றி  அச்செவ்வி விளக்கியுள்ளது. அத்துடன் தனிப்பட்ட நாடுகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு பயணத்தடைகளை, பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்பதையும் விளக்கி அச்செவ்வி சிறீலங்காவை எச்சரித்துள்ளது.

இந்த உலக எதார்த்தம் சிறீலங்காவின் அரச அதிபருக்கு நன்கு தெரிந்துவிட்டதாலேயே மனிதாயத்திற்கு எதிரான குற்றங்களை, யுத்தக்குற்றங்களை, மனிதஉரிமைகளை வன்முறைப்படுத்திய குற்றங்களைத் தனது ஆணையின் கீழ் தனது வழிகாட்டலில் செய்த தனது சிறீலங்காப் படையினரை அனைத்துலகச் சட்டங்கள், அனைத்துலக நீதி முறைமைகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பதற்காகச் சிறீலங்காவின் அரசியலமைப்பில் படையினருக்கும் தண்டனை விலக்குரிமை அளிக்கும் விதிகளைப் புகுத்தி,  மனித உரிமைகளை வன்முறைப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டவாக்கத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்.  இதனைச், சிறீலங்காவின் உயர்கல்வித்துறை அமைச்சர்; சட்டத்துறைப் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்காவின் பௌத்த தேரர்கள் பன்னிருவர் இந்தியாவின் 13ஆவது அரசியலமைப்பு விதியை நடைமுறைப்படுத்தி ‘தமிழர்களுக்கான மரியாதைக்குரிய வாழ்வை’ உறுதி செய்யுங்கள் என்ற நெறிப்படுத்தலை எதிர்த்து இந்தக் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கலைக் கூட ஏற்கக்கூடாதெனத் தங்கள் வார்த்தையைக் கடவுளின் வார்த்தையாகக் கருதி நடைமுறைப்படுத்தும் தங்களின் அரச அதிபருக்குக் கண்டனக் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

இவ்வாறான இன்றைய கள  எதார்த்தத்தின்படி அனைத்துலக சட்டங்களும், முறைமைகளும் ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி முறைமையைப் பெற்றுக் கொடுப்பதில் தொடர்ந்து தோல்வி கண்டு கொண்டே வருகின்றன என்பது உறுதியாகிறது. இதனாலேயே சிறீலங்காவினால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் உலகின் கண் முன்னாலேயே தொடர்ந்து இனஅழிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு அனைத்துலக நாடுகளும், அமைப்புக்களும், காலந்தாழ்த்தாது ஈழத்தமிழரின் வெளியக தன்னாட்சி உரிமையை ஏற்று அங்கீகரிப்பதே ஒரே வழியாக உள்ளது. இதுவே அனைத்துலக சட்டங்களுக்கு அமைவான ஈழத்தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வாக அமைந்து அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை அளிக்கும். எனவே ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளும், உலகத்தமிழர்களும் காலந்தாழ்த்தாது தமது அரசியல் கொள்கையாக ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சிக்கான அங்கீகாரத்தை ஒன்றிணைந்து கோரவேண்டும் அதனை அடைவதற்கு ஒன்றிப்புடன் உழைத்து உலக மக்களதும், நாடுகளதும் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்பதே ‘இலக்கின்’ தெளிவான வேண்டுதலாக உள்ளது.