தனியார் ஊடகங்களை புறக்கணிக்கும் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுிற்கான விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கு வடக்கு ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிசேனவின் முல்லை. விஜயம் தொடர்பாகவும், 03 ஆம் திகதி அன்று தொடக்கம் 08ஆம் திகதி வரை நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம்” தொடர்பாகவும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் உட்பட முப்படையினர், கொவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா பேசும் போது, முல்லைத்தீவிற்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி, வெறுமனே இந்தத் திட்டங்களை மட்டுமன்றி, நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதன் போது வடமாகாண ஆளுநர் குறுக்கிட்டு, மன்னிக்க வேண்டும் நடைபெறவள்ள நிகழ்விற்கு உங்களின் பங்களிப்பு என்ன என்பது மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்த விடயங்கள் தொடர்பாக பேசுவதற்கு வேறு இடங்கள் உள்ளது என்று கூறினார்.  இதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஊடகவியலாளர்களின் கமராக்களை மறைத்து,  ஒளிப்பதிவு செய்வதை தடை செய்தார்.

இவ்வேளையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனியார் ஊடகங்கள் அனைத்தையும் வெளியே செல்லுமாறு பணித்துள்ளார். ஆனால் அரச ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்பில் ஈடுபடுத்தியிருந்தனர். அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராசா, ஜனாதிபதி பிரச்சினைகளை புரிந்து செயற்பட வேண்டும். விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.

சில ஊடகங்கள் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுவதாலேயே தனியார் ஊடகங்களை வெளியேற்றியிருக்கலாம் என்று  கூறினார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முல்லைத்தீவிற்கு செல்கின்ற நிகழ்வுகளுக்கு தனியார் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமை என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வொன்றாக அமைகின்றது.