தனது மரணச் சடங்கு ஏற்பாடுகளை தானே செய்த பாலித தேவப்பெரும

Palitha தனது மரணச் சடங்கு ஏற்பாடுகளை தானே செய்த பாலித தேவப்பெருமமூவினமக்களினாலும் மிகவும் ஆழமாக நேசிக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி.யான பாலித தெவரப்பெரும, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் தனது மரணத்ழத முன் கூட்டியே உணர்ந்து தனது இறுதிக்கிரியைகள் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தனது இளைய மகனிடம் கூறியுள்ளமை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாலித தெவரப்பெரும, தான் இறப்பதற்கு முன்னர் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.அந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

குறித்த நேர்காணலில் அவர் தனது மரண சடங்கு தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

“நான் எனது இறுதி பயணத்தை தயார்படுத்தியே வைத்துள்ளேன். அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காது அந்தப் பயணத்தை செய்யும் வகையில் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்துள்ளேன். எனது உடலை கொண்டு செல்வதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்து பிரேதப் பெட்டியை செய்யவில்லை. எனது மரணம் நிகழ்ந்தால் அதற்கான பெரிய செலவுகள் எதனையும் செய்யக் கூடாது என இளைய மகனிடம் கூறியுள்ளேன்.

பிரேதப் பெட்டிக்கு சிறிய தொகையை செலுத்திவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு வரும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன். எனது வழக்கமான பாதையில் செல்வேன். எனது சுமைகளை எனது இளைய மகனுக்கும் கொடுக்க மாட்டேன். ஏற்கனவே எனது மூத்த மகன் இறந்து விட்டார். அவர் எனது தனிமைக்கு துணையாக இருப்பார். என்னை சுமந்து செல்லும் போது என் பின்னால் பலர் வருவார்கள். ஆனால் நான் அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால் அவர்கள் என் பின்னால் வருவார்களா என்று தெரியாது. இதனால் என்னை சுமந்து செல்ல நான்கு பேருக்கு ஏற்கனவே சம்பளத்தை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறியும் வைத்துள்ளேன்.

நான் மற்றவா்களைப் போன்று அரசியலில் சொத்துக்களை சேர்க்கவில்லை. மக்கள் அன்பையே சம்பாதித்துள்ளேன். எவருக்கும் சுமையில்லாத மனிதராக நான் சமூகத்தில் இருப்பேன் என நம்புகின்றேன்” என்று அவா் தெரிவித்துள்ளாா்.