ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் போராட்டம்

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த ஞானசார தேரரும் அவரது குழுவினரும் முல்லைத்தீவு குருகந்த ரஜமகா விகாரையின் தேரரின் சடலத்தை தகனம் செய்தமைக்காக கைது செய்ய வலியுறுத்தி இன்று யாழ்.நகரில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் நிறைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஞானசார தேரர் காவியைக் கழற்றி விட்டு சண்டித்தனத்தைக் காட்டினால்,  நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என சவால் விடுத்துள்ளார்.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் அனைவரும் அநாதரவாக நிற்பார்கள் என சிங்கள பௌத்த பிக்குகள் எண்ணுவது போல் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் அகிம்சைப் போராட்டம் என்பது தமிழ் மக்கள் இலங்கைக்குச் சொல்லித் தந்த வரலாறு அல்ல. ஆயுதப் போராட்டத்தின் மூலம் எமது மக்கள் தென்னிலங்கையை வாய்திறக்காத வண்ணம் வைத்திருந்தார்கள் எனத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் எம்மைப் பொறுத்தவரை காவி உடை புனிதமானது. காவி உடையைக் கழற்றிவிட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும்.

எமது சைவ சித்தாந்தத்தின்படி காவி உடை அணிவது புனிதமானது. ஒரு சில பௌத்த மதகுருமார் காவி உடை அணிந்து தமிழ் இனத்தை மிக மோசமாக நடாத்த எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் கோபத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று இவ்வளவு ஏற்பாட்டையும் செய்தவர்கள், அன்று அந்தச் சம்பவம் நடைபெற்ற போது காணாமல் போய்விட்டார்கள். அன்று அந்த இடத்தில் அவர்கள் வந்து இவ்வளவு ஏற்பாட்டையும் செய்திருந்தால், ஒருவேளை பிக்குவின் சடலம் எரிக்கப்படாமல் அங்கு நடைபெற்ற அசம்பாவிதங்களை தவிர்த்து, அப்பாவி சட்டத்தரணிகளும் அடிவாங்கியிருக்க மாட்டார்கள். அப்போது காணாமல் போனவர்கள், இவ்வளவு காலம் கழித்து இப்போது அமர்க்களம் பண்ணுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. இது வெறும் கண்துடைப்பே என்பது மக்களின் கருத்தாகும்.