ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ஸ

535 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸவை இலங்கை குடியுரிமை உள்ளவராக நீதிமன்றம் ஏற்றுக் கொள்வது குறித்த தீர்ப்பு வெளிவரவிருந்த நிலையில் இவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நோக்குடன், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் அந்த கூட்டமைப்பின் செயலாளர் சுமித் விஜேசிங்க, சமல் ராஜபக்ஸவிற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்ற சபாநாயகராக கடமையாற்றிய அவர், தற்போது அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவராக விளங்குகின்ற அவர், தற்போது நாட்டில் காணப்படுகின்ற பரபரப்பு சூழ்நிலைக்கு மத்தியில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஒருவேளை கோத்தபயா ராஜபக்ஸவின் நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமையா விட்டால், மகிந்த குடும்ப உறுப்பினர்கள் சார்பில் இவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்திருக்கலாம். அல்லது கோத்தபயா ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்தால், இவர் வெற்றியடையக்கூடும் எனவும் நினைத்திருக்கலாம். ஆனால் கோத்தபயா ராஜபக்ஸவின் நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவே அமைந்து விட்டது

Leave a Reply