- எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய ஜனாதிபதியும் – பிரதமரும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டின் ஐந்து ஆண்டுகள் நாசகார ஆட்சிக்கு முடிவு கிடைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்று முறைமையை நீக்க ஜனாதிபதியும் -பிரதமரும் கூடி ஆராய்ந்து கொண்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் புதிதாக சமஷ்டி ஒன்று வர வேண்டும் என்ற தேவை இல்லை. பிரிவினைவாதிகளுக்கு எதிர் பார்த்த அனைத்தும் கிடைத்ததற்கு சமமானது. கடந்த காலங்களில் சகல தேர்தல்களையும் இல்லாது செய்தனர். இப்போது ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இல்லாது செய்யவே ஜனாதிபதியும் பிரத மரும் முயற்சிக்கின்றனர்.
நாம் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தை வெளிப்படுத்தினோம். யுத்தம் இடம்பெற்ற வடக்கில் தேர்தலை நடத்தினால் தோல்வி எமக்கு உறுதி என்பதைத் தெரிந்தும் நாம் அம்மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தேர்தலை நடத்தினோம். ஆனால் ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு தேர்தலையும் நடத்தாது ஜனநாயக உரிமையை பறித்துள்ளனர்.
இப்போது ஜனாதிபதித் தேர்தலையும் நடத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி ஜனாதிபதி முறைமையை நீக்கும் சூழ்ச்சியைச் செய்து வருகின்றனர்.
தனது பதவி முறைமை பறிபோகும் கவலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தனது அதிகாரம் பறிபோகும் என்ற கவலையில் பிரதமரும் தமது நோக்கங்களை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். தூக்கத்தை தொலைத்துக்கொண்டு இருவரும் அரசியல் அமைப்பு விளையாட்டுகளைச் செய்து வருகின்றனர், எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு தேர்தலை நிறுத்த சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் அமைப் புடன் விளையாட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.