செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

மலையகத் தொழிற்சங்கங்கள் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கின. இம்மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கெடுத்த இத்தொழிற் சங்கங்கள், மலையக மக்களின் பாதுகாவலன் எனப் பெயரெடுத்திருந்தன. எனினும் சமகாலத்தில் மலையகத்தில் தொழிற்சங்கக் கலாசாரம் மெதுமெதுவாக வலுவிழந்து வருகின்ற ஒரு போக்கு காணப்படுகிறது. தொழிற் சங்கங்களின் பிழையான அணுகுமுறைகள் இதற்குக் காரணமாகி இருக்கின்றன. இந்நிலையில் எதிர் காலத்தில் தொழிற் சங்கக் கலாசாரம் கேள்விக் குறியாகும் அபாயகரமான நிலையே இப்போது மலையகத்தில் மேலெழுந்துள்ளது. எனவே தொழிற் சங்கங்கள் தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறவில்லையாயின், பின்விளைவுகள் பலவற்றையும் சந்திக்க வேண்டியேற்படும்.

தொழிற்சங்க வரலாறு

உலக தொழிற்சங்க வரலாறு மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. தொழிலாளர்கள் தமது பல்வேறு  உரிமைகளையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொழிற் சங்கங்களை ஆரம்பித்தபோதும், அது இலகுவான ஒரு காரியமாக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். சர்வதேச தொழிற்சங்க ஆரம்பத்தினைத் தொடர்ந்து இலங்கையிலும் தொழிற் சங்கக் கலாசாரம் வேரூன்ற ஆரம்பித்தது. இதனடிப்படையில் இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு ஏ.ஈ.குணசிங்க இலங்கை தொழிலாளர் சங்கம்  (Ceylon labour union) என்ற  தொழிற்சங்கம் ஒன்றினை ஆரம்பித்தார். துறைமுக ஊழியர்களை மையப்படுத்தியே இத்தொழிற் சங்கம் ஆரம்பிக்கப்பட்டமை தெரிந்த விடயமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கென்று அப்போது தொழிற்சங்கங்கள் காணப்படவில்லை. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் மிகவும் பின்தங்கிய வாழ்க்கை நிலைமைகளையும், அவர்களின் உரிமைகள் பலவும் மீறப்படுவதனையும் கண்டு நெஞ்சம் குமுறி முதன் முதலாக குரல் கொடுத்த பெருமை சேர். பொன்.அருணாசலம் அவர்களையே சாருகின்றது.

91741599 00009 செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் - துரைசாமி நடராஜா

1913 ஆம் ஆண்டு தொடக்கம் 1920 ஆம் ஆண்டு வரையில் அவர் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி சபையிலே ஓயாது வாதிட்டு, சட்ட நிரூபணம் பெற்று சாதனைகள் பலவற்றையும் நிலைநாட்டியுள்ளமை பலரும் அறியாத ஒரு விடயமாகும். தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்காக 1919 ஆம் ஆண்டில் தொழிலாளர் நலன் கழகத்தை அவர் ஆரம்பித்ததார் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. 1920ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம்  சேர்.பொன்.அருணாசலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. கோ.நடேசையர் மலையக தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய இடம்பெற்று விளங்குகின்றார். துன்பப்படும் மலையக மக்களுக்கு தோள் கொடுக்க நினைத்த இவர், 1927 இல் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தார். 1939 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸ் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அது பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பரிணமித்தது. இன்று பெருந்தோட்டத் துறையில் பல தொழிற் சங்கங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இ.தொ.கா தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் குறிப்பிட்டுக் கூறத் தக்கனவாக உள்ளன.

தோட்டப் புறங்களில் தொழிற் சங்கங்களின் உள்நுழைகை என்பது ஒரு இலகுவான பணியாக காணப்படவில்லை. தோட்ட நிர்வாகிகள் தொழிற்சங்கக் கலாசாரம் உள்நுழைந்தால் அது தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் கொண்டிருந்தனர். எனவே நகர்ப்புறங்களுக்கும், தோட்டப் புறங்களுக்கும் இடையிலான தொழிலாளர் தொடர்புகளை இவர்கள் கட்டுப்படுத்தியதோடு, நகர்ப்புற தொழிற்சங்க ஆதிக்கம் தோட்டத்தில் பரவவிடாது இவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். இதனை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது முன்னைய நூல் ஒன்றிலும் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றார். எவ்வாறெனினும் தொழிற் சங்கங்கள் தோட்டங்களில் காலூன்றியமை தொழிலாளர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும் அது உந்துசக்தியாக அமைந்ததெனலாம்.

தோட்டத் தொழிற்றுறையில் தொழிலாளர்கள் கிணற்றுத் தவளையாக இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த தொழிற்சங்கங்கள் பல்வேறு துறைகளிலும் அவர்கள் மேம்படுவதற்கு வழிகாட்டியாக இருந்தன. தொழிற் சங்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு நெருங்கிய, நீக்க முடியாத பிணைப்பு காணப்பட்டது. தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிணக்குகள், கல்வி அபிவிருத்தி, கலாசார அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி என்று பல மட்டங்களிலும் தொழிற் சங்கங்களின் சேவை வியாபித்துக் காணப்பட்டது. தொழிலாளர்களின்  தொழில் பிணக்குகள் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தல் போன்றவற்றிற்கு  பேச்சுவார்த்தைகள் மூலமும், பணிப் பகிஷ்கரிப்பு, மெதுவாக பணிபுரியும் நடவடிக்கைகள் போன்ற இன்னோரன்ன வழிகள் மூலமும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்களிடையே தொழிற்சங்கங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதையும் கூறியாதல் வேண்டும். எனினும் இந்த நிலைமை இப்போது மாறியுள்ள நிலையில் தொழிற் சங்கங்கள் இப்போது ஆட்டம் கண்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான உறவு இப்போது விரிசலடைந்துள்ள நிலையில் செல்லாக்காசாய் தொழிற்சங்கங்களின் நிலை மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது

ஓரம் கட்டப்படுதல்

105350015 23 01 2019 colomboprotest 10 செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்கள் - துரைசாமி நடராஜா

1948 இல் இந்திய வம்சாவளி மக்களின்  பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை இனவாத ஐக்கிய தேசியக் கட்சி பறித்தெடுத்த நிலையில் இவற்றை மீளவும் 1988 இலேயே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டிருந்த மலையக அரசியல் பிரதிநிதித்துவம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. இந்நிலையில் தொழிற்சங்கவாதிகள் பலரும் தொழிற்சங்கத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசியலில் காலூன்ற ஆரம்பித்தனர். மலையக அரசியல்வாதிகள் எவரும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. இந்த நிலை தொழிற் சங்கத்தின் இயல்பான சேவைக்கு ஆப்பு வைப்பதாக அமைந்தது.

மலையக தொழிற் சங்கவாதிகள் அரசியல்வாதிகளாக மாறி பெரும்பாலும் சுயநலவாத காய் நகர்த்தலையே மேற்கொண்டனர். தான் வாழ தன் குடும்பம் வாழ இவர்கள் ஈடுபட்டுழைத்த அளவிற்கு சமூகம் வாழ அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்களா? என்று பலரும் இப்போது கேள்வியெழுப்பிக் கொண்டிருப்பதில் ஒரு நியாயத் தன்மையையும் காணக் கூடியதாக உள்ளது. தனக்குப் பின்னால் எவ்வாறாயினும் தனது வாரிசினை அரசியலில் உள் நுழைத்து விட வேண்டும். தான் பதவியில் இருக்கின்ற போதே முடிந்தளவு உச்ச கட்ட வருவாயைக் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையிலேயே பல அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள். சமூக நலன் கருதிய சேவையென்பது இவர்களுக்கு இரண்டாம் பட்சமேயாகும். பல அரசியல்வாதிகளை நாம் இந்தப் பட்டியலில் உள்ளடக்கலாம். உண்மைகள் கசப்பானவை என்றபோதும் இதனை கூறியதாகவே வேண்டும். அப்பாவி மக்களின் சந்தாப்  பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களின் நலன்களில் கவனம் செலுத்தாது அவர்களை புறந்தள்ளிவிட்டு செயற்படுபவர்களின் உண்மை முகத்தை இன்னும் பல மலையக மக்கள் தெரிந்து கொள்ளாதிருப்பது விசனத்திற்குரிய விடயமேயாகும்.

தொழிற்சங்கவாதிகள் அரசியல்வாதிகளாக தலையெடுத்துள்ள நிலையில் மக்களிடையே பிரித்தாளும் கலாசாரத்தை விதைத்து தனது அரசியல் இருப்பினை எவ்வாறாயினும் உறுதிப் படுத்திக் கொள்வதற்கே இவர்கள் முற்படுகின்றார்கள். இதனால் அப்பாவித் தொழிலாளர்கள் சந்தாவைக் கொடுத்து விட்டு சங்கடங்களையும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. தொழிலாளராகளின் மத்தியில் இன்று அநேகமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்வி, தொழில், வீடமைப்பு, மருத்துவம், சுகாதாரம், பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. எனினும் இவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசியல் தொழிற்சங்க வாதிகளின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானதாகக் காணப்படுகின்றதா? என்ற கேள்விக்கு பதில் திருப்திகரமானதாக இல்லை என்றே கூறலாம். ஆண்டாண்டு காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் மக்களின் பிணியைத் தீர்க்கவில்லை.

தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளைத் தீர்ந்து வைப்பதிலும் இன்று தொழிற்சங்கங்கள் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. தொழிற் சங்கங்களிடையே காணப்படும் பிளவுகள், ஐக்கியமற்ற போக்குகள் என்பன தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்துசக்தியாகி வருகின்றன. சில பொதுவான விடயங்களில் கூட இவர்கள் ஒன்றுபட்டு செயற்பட தயக்கம் காட்டுவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எல்லா அரசியல் தொழிற் சங்கவாதிகளும் மக்களின் நலன்களுக்காகவே பாடுபடுவதாக தெரிவித்து வருகின்றனர். அப்படியானால் மக்களின் நலன்கருதி இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதிலே என்ன தவறு அல்லது தடைகள் இருக்க முடியும்? இந்நிலையில் உற்று நோக்கினால் தலைமைத்துவப் போட்டி, வருவாய் பிரச்சினை, சுய நலவாதம் போன்றனவே இவர்கள் ஒன்றிணைவதற்கு தடையாக இருப்பதனைக் காணலாம்.

மலையக தொழிற் சங்கங்களின் பிற்போக்கான செயற்பாடுகள் பலவும் இன்று அத்தொழிற் சங்கங்களை அதளபாதாளத்தில் தள்ளி வருகின்றன. தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான உறவில் இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே தொழிற்சங்கங்கள் தனது தவறை உணர்ந்து தொழிலாளர்களின் நலன் கருதியு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அம்மக்கள் அரை வயிறும்  கால் வயிறுமாக  உணவருந்தி, பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில்  தொழிற் சங்கங்களுக்கு உழைத்துக்  கொடுக்கும் சந்தாப் பணத்திற்கு உரிய சேவையினை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் மலையகத்தில் தொழிற்சங்கக் கலாசாரம் வலுவிழப்பதனை ஒரு போதும் தவிர்க்க முடியாது என்பதே உண்மையாகும்.

Leave a Reply