சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்?

51
73 Views

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை ‘அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள் நினைவுபடுத்தியதன் காரணத்தினாலேயே அவ்வாறு சுவிஸ் மக்கள் அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டார்கள்.

கல்வி கற்ற ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் சுவிஸ் மக்கள் கிட்டத்தட்ட பழங்குடி மக்களைப் போல் வாழ்ந்ததாகவே அவர்கள் கருதினார்கள். சுவிஸ் நாட்டவர்களோ, தங்களைப் பற்றிய இந்த உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டார்கள்.

இன்று உணவுப் பொருட்களுக்கான விளம்பரமோ அல்லது உல்லாசப் பயணத்துறைக்கான பரப்புரையோ எதுவாக இருந்தாலும் சுவிஸ் மக்களை ‘அல்ப்’ மலையிலுள்ள ‘உன்னத காட்டுமிராண்டிகள்’ (noble savages) என்று சித்தரிப்பதை அவதானிக்கலாம். ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு காலனீய நாடாக சுவிற்சர்லாந்து மாற்றமடையக்கூடிய ஒரு ஆபத்து இருக்கிறது’ போன்ற சுலோகங்களை அரசியல்வாதிகளும் காலத்துக்கு காலம் தங்களது சொற்பொழிவுகளில் பயன்படுத்துவது தற்போது வழமையாகி விட்டது.

நவீன வரலாற்றை உற்றுநோக்கும் போது, சுவிஸ் நாடு, காலனீயத்துக்கு உள்ளானவர்களின் பக்கத்தை விடுத்து காலனீயத்தை முன்னெடுப்போர் பக்கமே எப்போதும் நின்றிருக்கின்றது. ‘ஒரு நாடிய அரசு’ (nation-state) என்ற வகையில் சுவிற்சர்லாந்து ஏகாதிபத்திய செயற்பாடுகளை மேற்கொள்ளவுமில்லை. எந்தவொரு நாட்டையும் காலனீயப்படுத்தவும் இல்லை. ‘கிழக்கிந்தியக் கம்பனி’ போன்ற பாரிய பொருண்மிய ஏகாதிபத்தியங்களை உருவாக்கும் அவர்களது முயற்சிகள் கூட வெற்றியைத் தரவில்லை.

வெள்ளை ஐரோப்பியர்களுடன் ஒப்பிடும் போது, காலனீயத்துக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், தரம் தாழ்ந்தவர்கள் என்ற பார்வை காலனீயத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒரு விடயமாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் இதே போன்ற விதமாத உலகைப் பார்ப்பது சுவிஸைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

‘அரையறிவு படைத்த நீக்ரோக்கள்’ பற்றிய கதைகள், ‘அறிவும் அனுபவமும் இன்றி சிறுபிள்ளைகள் போலவும் காட்டுமிராண்டிகள் போலவும் வாழும் மக்கள்’ பற்றிய பயணக் குறிப்புகள் என்பவை பல தலைமுறைகளாக நீடித்த, கல்வியூட்டலின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. அத்துடன் காலனீய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கான விளம்பரங்களில் அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் ஒரு பின்னணி அலங்காரப் பொருட்களாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தனைப்போக்கு சுவிஸ் நாட்டில் இன்றும் வியாபித்திருப்பதைக் காணலாம்.

காலனீய நாடுகளில் பணிபுரிந்த சுவிஸ் போர் வீரர்கள்

காலனீயத்துக்கு சுவிற்சர்லாந்தின் வரலாற்று ரீதியிலான பங்களிப்பு, தனியே மக்களை இழிவுபடுத்துகின்ற பெயர்களையோ அன்றேல் சிலைகளையோ பயன்படுத்துவதோடு மட்டுப்படுத்தப்படவில்லை. சில சமயங்களில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் போர்வீரர்களாகவே நின்று போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹிஸ்பானியோலாத் தீவில் (Hispaniola)  தற்போது ஹயிற்றி (haiti)  என்ற பெயரில் அழைக்கப்படும் நாட்டில், கறுப்பினத்தைச் சார்ந்த அடிமைகள் தங்கள் பிரெஞ்சு காலனீய எசமானர்களை எதிர்த்துப் போராடிய பொழுது, அப்போராட்டத்தை அடக்கும் நோக்குடன் 600 சுவிஸ் துருப்புகளை நெப்போலியன் அந்த நாட்டுக்கு அப்போது அனுப்பி வைத்தான்.

ஹெல்வெற்றிக் குடியரசுடன் (Helvetic Republique) மேற்கொண்டிருந்த ஒரு ஒப்பந்தம் காரணமாக இக்கூலிப்படையை பிரான்சு நாட்டினால் பயன்படுத்த முடிந்தது. இது எந்தவிதத்திலும் ஒரு விதிவிலக்காக இருக்கவில்லை. நவீன சமஷ்டிக் குடியரசு, 1848 இல் ஏற்படுத்தப்பட்ட பொழுது, காலனீய சக்திகளுக்குக் கூலிப்படையாகப் போர் புரிவதற்காகச் சட்டத்தையும் மீற அவர்கள் தயாராக இருந்தார்கள். உலர்வலய நோய்களினால் அவர்கள் இறக்காத வரைக்கும் கணிசமான வருமானத்தை இது சுவிசுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அடிமை வணிகத்தில் ஈடுபட்ட சுவிஸ்

ஒல்லாந்து நாட்டின் அல்லது பிரான்சு நாட்டின் படைகளோடு இணைந்து போராடுவதை ஒரு சாகசம் நிறைந்த அனுபவமாகக் கருதிய, மிகவும் வறிய குடும்பங்களில் இருந்து வந்த இந்த கூலிப்படையினரை, இவ்வாறு கிடைத்த பாரிய வருமானங்கள் போய்ச் சேரவில்லை. பொருட்களையோ அல்லது காலனீய நாடுகளிலிருந்து மனிதர்களையோ வாங்கும் வணிகத்துக்கே இவ்வாறு கிடைத்த வருமானம் பயன்படுத்தப்பட்டது.

காலனீயம் தொடர்பான செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், அடிமை வணிகமே சுவிஸ் நாடு மேற்கொண்ட மிக மோசமான செயற்பாடு ஆகும். அடிமை வேட்டைகளில் ஈடுபட்டும்,  மனிதர்களை அடிமைகளாக வாங்கியும் விற்றும் தாம் பெருமையுடன் ‘காலனீயங்கள்’ என்று அழைத்த பெருந்தோட்டங்களைப் பாரிய அளவில் நிர்வகித்தும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தனிநபர்களும் நிறுவனங்களும், முதலீட்டாளர்களாகவும் வணிகர்களாகவும் அடிமைத்தனத்தைப் பயன்படுத்திப் பணத்தை ஈட்டினார்கள்.

இதன் விளைவாக, சுவிஸ் நாட்டில் இதுவரை நல்லவர்களாகக் கணிக்கப்பட்டுப் பிரபலமாக இருந்த சில தனிநபர்களில் சிலர், இன்று தவறிழைத்தவர்களாகவே நோக்கப்படுகிறார்கள். அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, ஒரு பெருந்தோட்டத்தை நடத்தினார்கள் என்று தெரிய வந்த போது, நவீன சுவிற்சர்லாந்து நாட்டின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த புகழ்பெற்ற அல்பிரெட் எஷரின் குடும்பத்தின் (family of Alfred Escher) மீதிருந்த நற்பெயருக்குத் தற்போது களங்கம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் கலிபோர்ணியாவின், சாக்கிரமென்ரோ (Sacramento) நகரில், ஜெனரல் ஜோண் சட்டர் (General John Sutter) என்பவரது சிலை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கீழே வீழ்த்தப்பட்டிருக்கிறது. சுவிற்சர்லாந்து நாட்டின் பாசல் (Basel) நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, ‘முரட்டு மேற்கின் வீரன்’ என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட ஜோண் சட்டர், சிறுவர் அடிமைத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற உண்மையை வரலாற்றாசிரியர்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை விட அதிகமாக பருத்தியை சுவிற்சர்லாந்தே இறக்குமதி செய்தது என்று, எழுத்தாளரான ஹான்ஸ் பாஸ்ளர் (Hans Fassler) தெரிவித்திருக்கிறார். பல பொருட்களை உற்பத்தி செய்வதைச் சாத்தியமாக்கிய அடிமை வணிகம் ஒரு முக்கிய தொழிலாகவே இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்பட்டமாகச் சொல்வதானால், பருத்தியைப் பொறுக்கி எடுக்கும் அடிமைகள் இருந்திருக்காவிட்டால், சுவிஸ் நாட்டின் ஆடைத் தொழிலே இருந்திருக்காது.

இந்தத் தொழிலின் ஒரு பகுதி அடிமை வணிகத்திலிருந்து நேரடியாக இலாபமடைந்திருக்கிறது. ‘இந்திய’ புடவைகள் என்று அழைக்கப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலே அதுவாகும். இவை ஐரோப்பிய சந்தைக்காகவே உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் முவ்வழி வணிகத்துக்குரிய பண்டமாற்றுப் பொருளாக இது பயன்படுத்தப்பட்டது. ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்காக, அடிமைகளை விற்பனை செய்த அடிமை வியாபாரிகளைக் கவரக்கூடிய விதத்தில் வடிவங்கள் வடிவமைக்கப்பட்டன.

“இந்திய புடவைகள், கைக்குட்டைகள் போன்ற கறுப்பினத்தவருடன் பண்டமாற்று வணிகத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் மிகத் துரிதமாக இயங்கும் ‘பாவ்ர பெத்திபியேர் மற்றும் நிறுவனத்தின்’ (Favre Petipierre & Company) வேலைத்தளங்கள் உற்பத்தி செய்கின்றன என்பதை ஆண்களுக்கான ஆடைகளை விற்கும் அனைத்துக் கடைகளுக்கும் தெரியப்படுத்துகிறோம்” என்ற விளம்பரத்தை 1815ஆம் ஆண்டில் ஒரு சுவிஸ் ஆடை நிறுவனம் கொண்டிருந்தது.

அடிமைத்தளை அகற்றப்பட்டதன் பின்னரான காலனீயம்

அமெரிக்காவில் அடிமை வணிகம் சட்டம் மூலம் தடைசெய்யப்பட்ட போது, உலகம் பூராவும் மேற்கொள்ளப்பட்ட ஆடைத்தொழிலுக்கு வேண்டிய மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது. அவ்வேளையில் இந்தியாவின் பருத்திச் சந்தை கவர்ச்சிக்குரியதொன்றாக மாறியது. பருத்தியை மூலப்பொருளாக (raw cotton) விற்பனை செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்த இந்தியாவிலிருந்து, 1851ம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த சுவிஸ் நிறுவனமான வோல்காட் (Volkart)  இந்த வாய்ப்பை தமது சுரண்டலுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

பருத்தி உற்பத்தியைப் பிரித்தானியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். உணவுப் பொருட்களுக்குப் பதிலாக பருத்தியைச் சாகுபடி செய்யும்படி இந்தியப் பாமர மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பிரித்தானியர்களுடன் மிக நெருக்கமாக இருந்ததன் காரணத்தினால், ஐரோப்பிய ஆடைத்தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இந்திய பருத்தி உற்பத்திப் பொருட்களின் பத்திலொரு பாகத்தை இவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.

அடிமை வணிகம் தடை செய்யப்பட்டதன் காரணத்தினால் ஏற்பட்ட இந்த நெருக்கடியை வெற்றி கொண்ட இன்னொரு நிறுவனமாக, பாசல் நகரத்திலுள்ள புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த பாரிய மறைப்பணி அமைப்பான ‘பாசல் மறைப்பணி’ (Basel Mission) விளங்கியது.

முன்னர் அடிமை வணிகத்தில் முதலீடு செய்திருந்த அதே பாசல் குடும்பங்களின் ஆதரவைப் பெற்றிருந்த இந்த மறைப்பணி அமைப்பு, ஒரு புதிய வணிக மாதிரியை வடிவமைத்திருந்தது. இந்தியாவிலிருந்த ‘அஞ்ஞானிகளை’ அவர்கள் கிறித்தவ சமயத்துக்கு மதம் மாற்றினார்கள். இப்படி மதம் மாறிய மக்களை அங்கேயுள்ள சமூகங்கள் தூர விலக்கி வைத்ததனால், அவர்களை தங்களை ஆடைத் தொழிலகங்களில் இந்த மறைப்பணி நிலையங்கள் பயன்படுத்தின. இந்த ‘மாதிரி’ 1860 இல் எப்படித் தொழிற்பட்டது என்று ஒரு மறைப்பணியாளர் பின்வருமாறு விபரித்தார்.

‘அஞ்ஞானத்தை விட்டு கிறித்துவுக்கு மக்கள் மதம் மாறிய போது’ மறைப்பணிக் குடியேற்றத்தில் நாங்கள் அவர்களுக்கான வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அவர்கள் தங்கள் நாளாந்த உணவைத் தேடுவதற்காக விவசாயத்தையோ அல்லது வேறு ஏதாவது ஒரு தொழிலையோ நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறோம். இது காலனீயம் என்று அழைக்கப்படுகிறது.

காலனீயவாதிகளுக்குச் சாதகத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய விதமாக, சமச்சீரற்ற அதிகார உறவுகளைப் பயன்படுத்திச் சுரண்டுவது காலனீயத்தின் இன்னொரு பகுதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவிஸ் குடியரசு, காலனீயங்களில் இலாபத்தைத் தேடுவதை முழுமையாக நிறுத்தி, தனியார் முயற்சிகளில் கவனஞ் செலுத்தத் தொடங்கியது,

வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து காலனிகளைத் தோற்றுவிப்பதற்கான அதிகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையைக் கொடுப்பதற்காக சமஷ்டி அரசுக்கு, நாடாளுமன்றினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தோற்கடிக்கப்பட்டன. சமஷ்டி அரசின் பார்வை பின்வருமாறு அமைந்திருந்தது.

முதலாவதாக, முற்றிலும் தரையாற் சூழப்பட்ட ஒரு நாடு காலனீயத்தை மேற்கொள்ள முடியாது. இரண்டாவதாக, தன்னால் நிறைவேற்ற முடியாத ஒரு பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்வதற்கு இது சமனாகிவிடும். சமூக சீர்திருத்தங்களுக்காகப் போராடி, தாபனத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பலம் வாய்ந்த, நேரடி சனநாயகப் பொறிமுறைகள் உருவாக்கப்படுவதற்காக உழைத்த, அடிப்படை சனநாயகவாதிகளிடமிருந்து 1860 இல் இம்முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது சுவாரஷ்யமான விடயமாகும்.

சுவிற்சர்லாந்தில் அப்போது நிலவிய ஏழ்மையிலிருந்தும் பசியிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வேறு நாடுகளுக்குக் குடியேற விரும்புவர்களின் பக்கம் தாங்கள் நிற்பதாக இக்காலனீய ஆதரவாளர்கள் தம்மைக் கருதிக் கொண்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே சுவிற்சர்லாந்து நாட்டின் குடியகல்வுக் கொள்கை உருவாகியது. தாயகத்தில் வாழ்வதற்கு வசதியற்றவர்கள் செல்வதற்கு ஏற்ற ஒரு இடமாகவே நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் காலனிகள் நோக்கப்பட்டன. காலஞ் செல்லச்செல்ல, புதிய பூகோள வலைப்பின்னலுக்கான அடித்தளமாக அவை பார்க்கப்பட்டன. இளைய தொழில் முனைவோருக்கு காலனிகள் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருந்தன.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டவர்கள் ஐரோப்பிய காலனீய அதிகார சக்திகளின் பிரசைகளுக்குரிய அதே சலுகைகளை அனுபவித்தார்கள். தமக்கென்று சொந்தமாக ஒரு ஏகாதிபத்தியத்தைக் கொண்டிராத காலனீயவாதிகளாக அவர்கள் திகழ்ந்தார்கள்.

ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பொருண்மிய நிபுணரான ஆர்வெட் எம்மிங்காவுஸ் (Arwed Emminghaus)  ‘தூரதேச வணிக உறவுகள்’ என அழைக்கப்பட்ட சுவிற்சர்லாந்து நாட்டின் இந்தத் தந்திரோபாயத்தைப் பாராட்டினார். காலனீய சக்திகளின் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் இன்னொரு வகையாக இதனை அவர் பார்த்தார். ‘விலையுயர்ந்த கப்பல்கள் தேவையில்லை. விலையுயர்ந்த அதிகாரப்படிமுறைகள் தேவையில்லை. போர் புரிந்து வெற்றியடைய வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ‘மிகவும் அமைதியான முறையிலும்  எளிமையான வழியிலும் உலகத்தின் மீது ஆதிக்கத்தைச் செலுத்தலாம்.

– தமிழில் ஜெயந்திரன்

நன்றி: சுவிஸ் இன்போ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here