ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுடன் செய்து கொண்ட நிபந்தனை அடிப்படையிலான ஒப்பந்தத்தினை பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கேட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆணையை தம்மால் பெற முடியாது என்பதை அறிந்தே ஐக்கிய தேசியக் கட்சி இன்று பல முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. எந்த சூழ்ச்சிகளை முன்னெடுத்தாலும் பொதுஜன பெரமுனவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் மேற்குலக நாடுகள் ஆகியன இணைந்து முன்னெடுத்த அரசியல் சூழ்ச்சிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் தேவைகளை நிறைவேற்றிய அரசாங்கம் வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வை முன்வைக்கவில்லை.
எதிர்வரும் 16ஆம் திகதி பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கும் அளவுக்கு அங்கு எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முழுமைப்படுத்தப்படவில்லை. அத்துடன் சர்வதேச விமான நிலையத்திற்கான சான்றிதழையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான குறைபாடுகளின் மத்தியில் தேர்தல் வெற்றியை கருத்திற் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்கள். தாமரை கோபுரம் பிரமாண்டமாக திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு அனுமதிக்காமல் உள்ளதை போன்றே பலாலி விமான நிலையமும் பயனற்றதாக காணப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை. ஆகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடம் கிடையாது என்று ஆரம்பத்தில் அழுத்தமாக கருத்துரைத்த கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை கருத்திற் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஐக்கிய தேசி யக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிந்துள்ளார்.