சுமந்திரனுக்கு கொரோனா தொற்று இல்லை – ஆனால் அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாண வதிவிடத்துக்கும் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நாடாளுமன்ற “லொபி”யில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் உரையாடியபடி சுமந்திரன் கஞ்சி அருந்தியுள்ளார். ரவூப் ஹக்கீமுக்கு கொரோனாத் தொற்று உண்டென நேற்று தெரியப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவருடன் நெருங்கிப் பழகிய 15 எம்.பிக்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சுமந்திரனுக்கு நேற்று மேற்படி விடயம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நேற்றுக் காலை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாரால் சுமந்திரனின் யாழ். வதிவிடத்துக்கு தனிமைப்படுத்தல் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு அருகிலுள்ள வீடும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.