சுமந்திரனின் ஐக்கியத்திற்கான அழைப்பும் அவரது அரசியல் எதிர்காலமும்” – அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் திடீரென தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்றும் கூட்டமைப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் யாழில் வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனினால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் ஒருங்கிணைக்கப்பட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது சிறு பிள்ளையும் அறியும்.

அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த கூட்டமைப்பினை ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சார்க்கரையாக கட்சிக்குள் நுழைந்த சுமந்திரன் ‘தமிழரசுக் கட்சியை பலமுள்ளதாக்குகின்றேன்’ என்று அக் கட்சியின் தலைமைக்கு கூறி வந்தார்.

ஆனால், தமிழரசு பலமடையவுமில்லை, கூட்டமைப்பு வலுவடையவுமில்லை. உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் பலம் அம்பலப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதன் கணக்கு தவறாகிவிட்டது.

இப்போது, தமிழரசும் சரி, கூட்டமைப்பும் சரி அடுத்தகட்டம் என்ன செய்வதென்று உறைந்துபோயிருக்கின்ற தருணமாக இருக்கின்றது. மக்களுக்கு எவ்வாறு பொறுப்புக் கூறுவதென்று விழிபிதுங்கி நிற்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

சரியான நேரங்களில் தனி நபரால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் தமிழரசு தரமிழந்து, தகுதியிழந்து, தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசியப் பரப்பில் கொள்கைப்பற்றுதியுடனான மாற்றுக் கூட்டணி உதயமாவதும், தேர்தல் களம் காண்பதும் உறுதியாகிவிட்டது.

மாற்றுக்கூட்டணி களமிறங்கினால் தமிழரசினதும், கூட்டமைப்பினதும் மார்பு தட்டும் ஏகப்பிரதிநிதித்துவ அந்தஸ்து இல்லாது போய்விடும் என்ற அரசியல் இருப்பு அச்சத்தால், கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மறைப்பதற்காக ஆணை வழங்கிய தமிழ் மக்களையும் ஆணையையும் மறந்திருந்த சுமந்திரன் தற்போது அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம், ஒற்றுமை என்று வெள்ளையடிக்கும் விநோத சொற்பிரயோகங்களை தமிழ் மக்கள் மத்தியில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பதே யதார்த்தமாகும்.

ஐக்கியத்திற்கான அழைப்பின் பின்னணி இவ்வாறிருக்க, சம்பந்தன் சுமந்திரன், கூட்டமைப்பு கூட்டு பின்வரும் வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதிலளிப்பார்களா?

•தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரனினால் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கூட்டல்ல என்று அரச தொலைக்காட்சிக்கு உரைத்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அதனை பகிரங்கமாக வாபஸ்பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளாரா?

•சம்பந்தனின் கூட்டமைப்பு உருவாக்க கருத்தினை பகிரங்கமாக எதிர்ப்பதற்கோ அல்லது உண்மையை அவ்வாறே பொதுவெளியில் கூறுவதற்கு கூட்டமைப்பின் பங்காளிகள் தயாராக உள்ளார்களா?

•தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன நோக்கத்திற்காக அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கினார்களோ அந்த நோக்கத்தின் ஒரு துளியளவும் பின்பற்றப்படவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கொள்கைகளை பற்றுறுதியுடன் பின்பற்றுவதற்கு தயாராக உள்ளார்களா?

•தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு கூட்டமைப்பினை ஒரு அரசியல் அந்தஸ்துடைய கட்சியாக பதிவு செய்யவதற்கு மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை முன்னிலையில் மேற்கொண்ட முயற்சிகளை திட்டமிட்டு குழப்பினோம் என்பதை சம்பந்தன்,சுமந்திரன் பொதுவெளியில் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக உள்ளார்களா?

•தற்போது சூழலில் குறைந்த பட்சம் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து ஒரு பொதுச் சின்னத்திலாவது போட்டியிடத்தயார் என்று அறிவிப்பதற்கு திராணி இருக்கின்றதா?

•கூட்டமைப்பு கடந்த நான்கு பாராளுமன்ற தேர்தல்,மாகாணசபை,உள்ளுராட்சி மன்றம் ஆகிய அத்தனை தேர்தல்களில் மக்கள் முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களை நடைமுறைச்சாத்தியமாக்குதற்கு தென்னிலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கு அளுத்தம் கொடுக்கவில்லை என்பதை ஆணை வழங்கிய மக்கள் மத்தியில் எடுத்துரைக்க தயாரா?

•ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டிலிருந்து மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்திற்கு கால அவகாசங்களை வழங்கி பாதுகாத்ததோடு மனித அவலத்தினை அரங்கேற்றியவர்களையும், போர்க்குற்றவாளிகளையும் தப்பிபிழைக்க வைத்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

•தமது அன்புக்குரியவர்களை தேடும் உறவுகள் போராட்டத்தில் இருக்க, விடுதலைக்காக போராடியவர்கள் சிறையில் இருக்க, அவர்களின் உறவுகள் பரிதவிக்க அவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாது சில்லறை விடயங்களாக கருதி அரசுக்கு முண்டு கொடுத்தோம். அதனால் சுயலாபத்தினை ஈட்டினோம் என்பதை ஏற்றுக்கொள்வார்களா?

•புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வு வரவில்லை என்றால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியமை வெறும் கவர்ச்சியான உணர்ச்சி அரசியலுக்காகவே என்பதை பொதுமக்களுக்கு பகிரங்கமாக பகிர்வதற்கு தயாராக உள்ளாரா?

•மைத்திரி ரணில் ஆட்சியில் நானே அனைத்தையும் செய்தேன், செய்வித்தேன் என்று மார்பு தட்டிய சுமந்திரன் கூட்டமைப்பு தவற விட்ட இராஜதந்திர தோல்விகளை ஏற்றுக் கொண்டு மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கேருவதற்கு தயாராக இருக்கின்றாரா?

•மாவீரர்களின் மார்புகளில் ஏறிநின்று ஆணைபெற்ற கூட்டமைப்பு அதனை மறந்து ரணில் அரசு சார்ந்து சுமந்திரன் தன் பூரண விசுவாத்தினை காட்டியதை ஏற்றுக்கொண்டு அதன்பால் செயற்பட்டதும், ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையின்றி சரணாகதியடைந்து முண்டு கொடுத்ததும் தமிழினத்தினை கையறு நிலைக்கு கொண்டு செல்ல வித்திட்டது என்பது ஏற்றுக்கொள்வார்களா?

•இத்தனை தவறுகளையும் தமிழரசுக்கட்சியும், சம்பந்தன்-சுமந்திரன் கூட்டும் கூட்டமைப்பின் பெயரால் இழைத்துக்கொண்டிருக்க பங்காளிகள் என்று தலைநிமிர்ந்து நிற்க முயலும் செல்வமும்,சித்தார்த்தனும் கைகட்டி,வாய்பொத்தி வேடிக்கை பார்த்தே நின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

ஆக, இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்கள் கிடைக்குமாயின் தற்போதைய சூழலில் விடுக்கப்பட்ட ஐக்கியத்திற்கான அழைப்புக்களை ஏனைய தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் சீர்தூக்கி பார்க்க முடியும்.

அவ்வாறில்லாது,ஒரு சிலரின் அரசியல் இருப்பினை தக்க வைப்பதற்கும், ஒரு கட்சியை வளப்பதற்கும், தன்னிச்சையாக, வெளிப்படைத்தன்மையில்லாமல் முடிவெடுப்பதற்கும், பணம், பதவி, சுயலாப அரசியல் செய்வதற்கும் ஆயிரக்கணக்கான மாவீரர்களதும்,பொதுமக்களின் உயிர்தியாகமும், இரத்தம்,கண்ணீரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பெயரால் ஐக்கியம் என்ற போர்வையில் தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற இடமளிக்க முடியாது.

தமிழ் மக்களுக்கான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஐக்கியம் என்பது முக்கியம். அந்த ஐக்கியம் தமிழ் மக்களின் நலன்களில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை உணர்ந்தும், நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டுமே ஒளிய அரசியல் அச்சத்தினை போக்கும் காழ்புணர்ச்சிக் கூட்டை உருவாக்கமுடியாது.

சம்பந்தன் தலைமையிலான கூட்டு சுமார் பதினெட்டு வருடங்களாக தமிழ் மக்கள் மத்தியில் அரைத்தமாவையே அரைத்துக்கொண்டு எந்தவொரு விடயத்தினையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கமலே இருந்து வந்துள்ளது.அவர்களின் தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றுறுதி நீங்கியதோடு, இராஜதந்திர நகர்வுகளும் தோல்வி அடைந்துவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உட்பட வேறு சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆகவே அத்தகைய தரப்பினரால் இனி தமிழ் மக்களின் நலனுக்காக எதனை செய்ய முடியும் என்ற கேள்வி எழுகின்றது. ஆகவே தோல்வியுற்ற அரசியல் சித்தாந்தத்தில் கூட்டமைப்பு உள்ளது என்பதே தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துள்ள படிப்பினையாகும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது யதார்த்தமே. அதற்காக தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஒரேவழி தமிழ்த் தேசியப் பரப்பில் கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுப்பதேயாகும்.

இதில் சிவில் அமைப்புக்கள் மதத்தலைவர்கள்,புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள் முன்வந்து இதயசுத்தியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்து வலுவான தமிழ்த் தேசிய பற்றுறுதி மிக்க கூட்டை உருவாக்கி விழுந்து கிடக்கும் எம்மினத்தை தூக்கி நிறுத்த வேண்டும்.

தன்னினம் தலைநிமிர்ந்து வாழ்ந்திட தயாகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைவோம். அதற்காய் உழைப்போம். செயல்வடிவம் கொடுப்போம். இன்றே சபதம் எடுப்போம் நாளைய விடுதலைக்காய்…!