இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது (20) தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ் விழிப்புணர்வு செயலமர்வானது பாடசாலை மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிவில் விமான போக்குவரத்து துறையில் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான செயற்திட்டமாக இத்திட்டம் அமைந்திருந்தது.
உலகிலுள்ள நூறாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளில், விமானப் போக்குவரத்து என்பது தனித்துவமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாகும்.
விமானத்துறையில் ஆர்வமிக்க மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் காணப்படும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடுகள், தேவையான அடிப்படை தகைமைகள் குறித்தும், தொழில்நுட்ப முறைமைகள் மற்றும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பல விடயங்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டது. ஆங்கில புலமை என்பது இத்துறைக்கு மிகவும் இன்றியமையாதது என இதன் போது எடுத்துறைக்கப்பட்டது.
இதன்போது பாடசாலை மாணவ மாணவிகளிடம் விமான சேவை சம்பந்தமான கேள்விகள் துறைசார் அதிகாரிகளினால் கேட்கப்பட்டதுடன், மிகவும் சரியான விடைகளை கூறிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திப் பிரிவின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், திருகோணமலை மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தின் தலைவர்கள், அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.