இலங்கையின் தேர்தல் முறை திருத்த யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இத்திருத்த யோசனை தொடர்பில் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன.இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நிராகரிப்பதாக சிறுபான்மை சிறிய கட்சிகள் பிரதமரிடம் அறிவித்துள்ளன.மலையக கட்சிகளும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சமகாலத்தில் நடைமுறையில் உள்ளது.ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்துவ) தேர்தல் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் அல்லது பல வேட்பாளரை உள்ளடக்கிய ஒரு குழுவுக்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களை ஒதுக்கும் சில வகையான உபாயங்களை உள்ளடக்கிய ஒரு வாக்களிப்பு முறையே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை எனப்படுகின்றது.
ஒரு உண்மையான ஜனநாயகத்தில் எல்லா விதமான அபிப்பிராயங்களும் அவை நாட்டில் பெற்றிருக்கும் ஆதரவுக்கு விகிதாசாரமாக சட்டசபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதே இம்முறைக்கு பின்னணியாகவுள்ள தத்துவமாகும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.இத்தேர்தல் முறையிலுள்ள தனிமாற்று வாக்குமுறையை சி.சி.ஜி.அந்திரே மற்றும் தோமஸ்காரே ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.எனினும் இந்த முறை பிரபல்யமடைவதற்கு பிரித்தானிய அரசியல் மேதை யோன் ஸ்ரூவோட்மில் காரணமாக இருந்துள்ளார்.
இலங்கையில்1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு வரை தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் இருந்தது.எனினும் இத்தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு முரணானதாக கருதப்பட்ட நிலையில் பல்வேறு குறைபாடுகளையும் இத்தேர்தல் முறை கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப, பாராளுமன்றத்தில் அவை பெறும் ஆசனங்களுக்கிடையே முரண்பாட்டுத் தன்மையை அவதானிக்க முடிந்தது.அதாவது விகிதாசாரம் பேணுவதாக அமைந்திருக்கவில்லை.
ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பாலான வாக்காளர்கள் விரும்பாத போதும் உறுப்பினராக ஒருவரை தெரிவுசெய்யும் நிலை காணப்பட்டது.மேலும் இத்தேர்தல் முறையில் வாக்காளர்களின் தெரிவுகளுக்கிடையே ஒரு சமத்துவமற்ற தன்மை காணப்பட்டது. இவ்வாறாக பல்வேறு குறைபாடுகளை தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டிருந்த நிலையில் அதனால் ஏற்பட்ட அதிருப்தி நிலையானது விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமைந்தது.
அத்தோடு திறந்த பொருளாதார முறைக்கு சார்பாக உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு அடிக்கடி மாற்றப்படுவதை தடைசெய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு சார்பான வகையிலேயே விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி இருந்தது என்பதும் உண்மையாகும்.
புஸ்வாணமாகிய கோரிக்கைகள்
விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை பல்வேறு சாதக விளைவுகளுக்கும் வித்திடுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதனடிப்படையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் அவற்றுக்கு கிடைக்கும் ஆசனங்களுக்குமிடையே விகிதாசாரத்தை பேணுவதாக அமைதல். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோர் ஆட்சி என்ற தத்துவத்தை இயலச்செய்தல்.நாட்டின் சகலவிதமான அரசியல் அபிப்பிராயங்களும் ஆட்சி அமைப்புக்களில் பிரதிநிதித்துவம் பெறுவதை இயலச் செய்வதாக அமைந்திருத்தல்.
பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்கும் நிலை ஏற்படுதல். தொகுதிவாரியாக செறிவாக இல்லாத இனங்கள் மாவட்ட ரீதியில் கணிசமான அளவு இருப்பின் தங்களுடைய பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வாய்ப்பு ஏற்படுதல் போன்ற பலவும் இத்தேர்தல் முறையினால் கிடைக்கின்றது.மேலும் இம்முறையின் மூலம் இடைத்தேர்தல் இல்லாததால் இடைத் தேர்தலுக்காக செலவிடப்படும் பணம் மீதமாகின்றது என்றெல்லாம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு சாதகமான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனடிப்படையில் முன்வைக்கப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சமகாலத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ளது.எனினும் இத்தேர்தல் முறை எதிர்பார்ப்புகளை மழுங்கடித்து நாட்டின் அபிவிருத்திக்கும் ஐக்கியத்திற்கும் குந்தகமாக இருந்து வருகின்ற விடயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனடிப்படையில் விகிதாசார தேர்தல் முறையின் பாதக விளைவுகள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டுள்ளன.இத்தேர்தல் முறையை விளங்கிக் கொண்டு உரியவாறு வாக்களிப்பதில் வாக்காளர்கள் இடர்படுகின்றனர்.இதனால் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இம்முறையின் மூலம் இடைத்தேர்தல்கள் நடாத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லாததால், இடைக்காலங்களில் அரசாங்கக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி குறித்த. மக்களின் நிலைப்பாட்டை அறியமுடியாதுள்ளது.தேர்தலுக்கான செலவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
உட்கட்சிக்குள்ளேயே அல்லது உட்கட்சி வேட்பாளர்களுக்கிடையிலேயே பிரிவினைகள் அல்லது பிளவுகள் ஏற்படுவதற்கு இத்தேர்தல் முறை வலுசேர்க்கின்றது.தேர்தல் மாவட்டமாக அல்லது பல் அங்கத்துவ தேர்தல் தொகுதியாக தேர்தல் தொகுதிகள் அமைந்திருப்பதனால் பிரதிநிதிகளின் கண்காணிப்பு எல்லை அதிகமாக உள்ளது.இதனால் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
பிரதிநித்துவ முறையின் கீழ் வேட்பாளர்கள் நியமனப் பட்டியல் அடிப்படையில் இடம்பெறுவதால் வேட்பாளர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது.விருப்பு வாக்கு முறை ஒரே கட்சியின் வேட்பாளர் மத்தியில் பிளவுகளுக்கு வலுசேர்க்கின்றது.
இம்முறையில் காணப்படும் போனஸ் உறுப்பினர் முறையானது உண்மையான விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு தடையாகவுள்ளது.அரசியல் கட்சிகளின் தலைமைத்துவத்தின் ஆதிக்கம் அதிகமாகும்.கட்சிப் பட்டியலில் யார் யார் இடம்பெற வேண்டுமென தலைமையே தீர்மானிப்பதாலும் தேசியப் பட்டியலில் முன்னுரிமை ஒழுங்கினை தலைமை தீர்மானிப்பதாலும் இந்நிலை ஏற்படுகின்றது என்றெல்லாம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச்சாட்டுக்களில் நியாயத்தன்மை இருப்பதையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் குறைபாடுகளை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் முறையொன்றினை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எதிரொலித்து வருகின்றது.புதிய அரசியலமைப்பு குறித்த முன்னெடுப்புக்கள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவினரிடமும் பொதுமக்களும், அமைப்புக்களும் புதிய தேர்தல் முறையின் அவசியம் தொடர்பில் கருத்துக்கள் பலவற்றையும் முன்வைத்திருந்தமையும் தெரிந்ததாகும்.
எனினும் புதிய அரசியலமைப்பு சாத்தியமாகாத நிலையில் கோரிக்கைகள் புஸ்வாணமாகி இருந்தன.இதனிடையே தொகுதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் இரண்டும் கலந்த கலப்புத் தேர்தல் முறை ஒன்றினை நாட்டில் அறிமுகப்படுத்துவது குறித்து ஆழமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றிருந்தன.எனினும் இது நிறைவேறவில்லை.
எவ்வாறெனினும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறுபான்மையினர் சாதக விளைவுகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ள அடித்தளமாக அமைந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.எனவேதான் சிறுபான்மையினர் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பாதுகாப்பான முறை என்று விகிதாசார தேர்தல் முறை வர்ணிக்கப்படுகின்றது.
மலையக மக்களை பொறுத்தவரையில் அவர்கள் சுமார் நாற்பது வருட காலமாக பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத ஒரு சமூகமாக இருந்தனர்.இவ்வுரிமைகளை பறித்தெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் தனது பாவத்துக்கு பிராயச்சித்தமாக மீண்டும் இவ்வுரிமைகளை வழங்கிய நிலையில் படிப்படியாக மலையக மக்களின் அரசியல் ஆதிக்கம் வேரூன்றத் தொடங்கியது.உள்ளூராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்றம் போன்றவற்றில் மலையக மக்களின் பிரதிநிதிகள் கால்பதிக்கத் தொடங்கினர்.
இதனால் அபிவிருத்திக்கு வலுசேர்க்கப்பட்ட நிலையில் ஏனைய இனங்களுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலும் உருவானது.இந்நிலைக்கு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் கை கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.இந்நிலையில் தொகுதிவாரி தேர்தல் முறையோ அல்லது கலப்புத் தேர்தல் முறையோ இத்தனை சாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சிறுபான்மையினர் ஆதரவு
இதனிடையே தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் இப்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது.தேர்தல் முறை திருத்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.இதனிடையே நடைமுறையிலுள்ள தேர்தல் முறை சட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.ஊழல் நிர்வாகத்துக்கும், அரசியல் கட்டமைப்பின் பலவீனத்திற்கும் தேர்தல் முறைமையே காரணமாகுமென்று குற்றம் சாட்டப்படுகின்றது.
மக்கள் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கோருகின்றனர்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.சிறந்த அரச நிர்வாகத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் முறைமை சட்டத் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.
இதேவேளை சிறுபான்மை கட்சிகள் சமகாலத்தில் நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நிராகரிப்பதாக தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளன.மேலும் பாராளுமன்ற தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கு முன்பதாக தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்றும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறெனினும் ஒரு சமூகத்தின் அபிவிருத்தியிலும் சரி நாட்டின் அபிவிருத்தியிலும் சரி தேர்தல் முறைமை காத்திரமான பங்காற்றுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.இந்நிலையில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இன்னும் பல்வேறு வெற்றி இலக்குகளையும் அடைய வேண்டிய நிலையில் பொருத்தமான தேர்தல் முறையினை அறிமுகம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.புதிய தேர்தல் முறையானது சகல இனங்களினதும் உரிமைகளுக்கும் உத்தரவாதமளிக்க வேண்டும்.