சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலைமையை இல்லாமல் செய்யவே 15 ஆம் திருத்தச் சட்டம்

பெரும்பான்மை சிங்களவர்களாக உள்ள இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் அரசாங்கம் அமைப்பதற்கு சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலைமையை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தனிநபர் பிரேரணை அரச வர்த்தமானியில் பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில், ஒரு தொகுதிக்கான வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது. எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான எம். எச்.எம். அஷ்ரப்பின் வேண்டுகோளின் பேரில்  இந்த வரம்பு மட்டம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சியும் கூட அதிகாரத்தை பிடிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப்பெற முடியாமல் போனது. எனவே பிரதான அரசியல் கடசிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிறுபான்மை கட்சிகள் கேட்கும் வகையில் பிரதான கட்சிகள் ஆட்டம் போட வேண்டியுள்ளது.

இந்த நிலைமையினால்,  அரசாங்கம் பலமிழப்பதாகவும், சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடவுமே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தனது தனிநபர் பிரேரணை முன்வைப்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.