சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன் – நேரு குணரட்னம்

440 Views

சிறீலங்காவில் 8ஆவது சனாதிபதித் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. 1978 இல் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமைக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், கடந்த 2015 தேர்தல் 18ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட அனுமதிக்கும் தேர்தலாக மாற்றம் கண்டு நடைபெற்றது. ஆனால் அவையனைத்திலும் இருந்து வேறுபட்டு, இம்முறை நடைபெறும் தேர்தல் 19ஆவது திருத்தச்சட்டம் மூலம், சனாதிபதி அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சனாதிபதிக்கான தேர்தலாகவும், ஜந்து வருட பதவிக்காலம் கொண்ட தேர்தலாகவும் அரங்கேறுகிறது. ஆனால் தேர்தல்க் களத்தில் ஏனோ இன்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கான தேர்தல் போன்றே வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவது தான் விந்தை. தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக முடிவடைந்துஇ தேர்தல் வாக்களிப்பை நோக்கி நகரும் இன்றைய நிலையில், தரவுகளுடன் தேர்தல் முடிவுகளை நோக்கியும், சாத்தியமான நிலைகள் சார்ந்தும் நோக்குவோம்.

மொத்த வாக்காளர்கள்:

இம்முறை தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளோர் 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேர். இது கடந்த 2015 தேர்தலிலான 1 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 ஜவிட 9 லட்சத்து 47 ஆயிரத்து 606 பேர் அதிகமாகும்.

வாக்களிப்பு வீதம்:
2015 சனாதிபதித்தேர்தலில் 81.52 சதவீத வாக்களிப்பு. அதில் 1.15 சதவீத வாக்குகள் நிகாரிப்பு. ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகள் 1 கோடியே 21 இலட்சத்து 23 ஆயிரத்து 452
2010 தேர்தலில் 74.50 சதவீத வாக்களிப்பு, 0.72 சதவீதம் நிகாரிப்பு, ஏற்பு 1 கோடியே 4 இலட்சத்து 95 ஆயிரத்து 451.
2005இல் 73.73 சதவீத வாக்குப்பதிவும், 1999இல் 73.31 சதவீத வாக்குப்பதிவும் சனாதிபதித் தேர்தல்களில் இருந்துள்ளன. இருக்க 1999 இல் இருந்தான கடந்த 20 ஆண்டுகளில், நடைபெற்றுள்ள 4 சனாதிபதித் தேர்தல்கள் (1999, 2005, 2010, 2015) 5 பாராளுமன்றத் தேர்தல்களில் (2000, 2001, 2004, 2010, 2015) அதாவது 9 தேர்தல்களிலான சராசரி வாக்களிப்பு 74.32 சதவீதமேயாகும். கடந்த சனாதிபதித் தேர்தலே எட்டப்பட்ட அதியுயர் நிலையாகும். அதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமைந்தன.

அதில் ராஜபக்சவை அகற்றியே ஆக வேண்டும் என்ற தமிழ், முஸ்லீம் மக்களின் வேட்கை மற்றும் சிங்கள் மக்களின் ஒரு பகுதியில் அது குறித்து எழுந்த எழுச்சி எனப் அதற்கான காரணங்கள் ஆகின. ஆனால் இம்முறை அதே பார்வை இருந்தாலும், கடந்த ஜந்து வருட ஆட்சியில் ஏற்ப்பட்டுள்ள அதிருப்தி அவ்வாறான முழுமையான சூழலை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவே என் கணிப்பின்படி இம்முறை கடந்தமுறை போலல்லாது வாக்களிப்புவீதம் சற்று குறைவடையலாம்.

batti ele சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் - ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன் - நேரு குணரட்னம்ஆனால் கடந்த 20 ஆண்டுகளிலான ஏனைய மூன்று தேர்தல்களை விட அதிகரித்து இருக்கும். இம்முறை மொத்த வாக்குப்பதிவு 1 கோடியே 25 லட்சத்திற்கு உட்பட்டே இருக்கும் என்பதே என் கணிப்பு. அவ்வாறாயின் 62.5 இலட்சத்திற்கு அதிகம் வாக்குகளைப் பெறும் வாய்ப்புள்ள ஒருவர் வெற்றி முதல் வாக்கிலேயே உறுதி என்ற நிலையிலேயே இத்தேர்தல் எதிர் கொள்ளப்படுகிறது.

இருக்க மைத்திரிபால சிறீசேனாவிற்கு கடந்தமுறை மொத்தமாக விழுந்த வாக்குகள் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162. அதாவது 51.28 சதவீதம். மகிந்தா ராஜபக்சவிற்கு 57 இலட்சத்து 68 ஆயிரத்து 090. அதாவது 47.58 சதவீதம். இருவருக்குமிடையிலான வித்தியாசம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 072. இருக்க 1 இலட்சத்து 38 ஆயிரத்து 200 வாக்குகள் வேறு நிராகரிக்கப்பட்டன. அதாவது 1.15 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இம்முறை இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் என வாக்குகள் முதன்மைப்படுத்தப் படுவதால் அதற்கு முழுமையாக பரிச்சியப்படுத்தப் படாத மக்கள் அதில் குளப்பத்தை எதிர்கொள்ளும் நிலையும், அதனால் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அது முதல் வாக்கிலேயே ஒருவர் வெற்றி பெறவில்லையென்றால், அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களும் உண்டு. இது எவ்வாறு அமையப்போகிறது என்பது தேர்தல் முடிவுகளில் கூர்ந்து கவனிக்கப்படப்போகும் ஒரு முக்கிய விடயமாகும்.

கடந்த 2015 தேர்தலில், மகிந்தா வடக்குக் கிழக்கு ஆறு மாவட்டங்களில் பெற்ற மொத்த வாக்குகள், 3 இலட்சத்து 23 ஆயிரத்து 600. வடக்குக் கிழக்கிற்கு வெளியே, 16 மாவட்டங்களில் பெற்ற வாக்குகள், 54 இலட்சத்து 44 ஆயிரத்து 490. அதேவேளை மைத்திரி வடக்குக் கிழக்கில் பெற்ற மொத்த வாக்குகள், 9 இலட்சத்து 78 ஆயிரத்து 111. வெளியே உள்ள 16 மாவட்டங்களில் பெற்ற வாக்குகள், 52 இலட்சத்து 39 ஆயிரத்து 051. ஆகவே மைத்திரிக்கு வடக்குக் கிழக்கிற்கு வெளியே, 2 இலட்சத்து 5 ஆயிரத்து 439 வாக்குகள் மகிந்தாவை விடக் குறைவாகவே விழுந்தன. ஆனால் வடக்குக் கிழக்கில் மகிந்தாவை விட, 6 இலட்சத்து 54 ஆயிரத்து 511 மேலதிக வாக்குகள் விழுந்தன. அதுவே மைத்திரியின் வெற்றியை உறுதி செய்தது அல்லது மகிந்தாவை அரியணையில் இருந்து அகற்றியது.

ஆனால் வடக்குக் கிழக்கு உட்பட உள்ள சிங்கள மக்கள் மத்தியில், 58 சதவீத வாக்களிப்பை மகிந்தா பெற்றார் என்பதுவும், கவனத்தில் கொள்ளத்தக்கது. அதேவேளை மகிந்தாவை அகற்ற 84 சதவீத தமிழ், முஸ்லீம் வாக்குகள் மைத்திரியை சென்றடைந்தன. அதேவேளை யாரெருவர் சிங்கள மக்களின் 60 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று, அதில் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றால், அவர் வெற்றி வாய்ப்பை தமிழ், முஸ்லீம் வாக்குகளை மட்டும் கொண்டு தடுத்துவிடுவது, முடியாது போய்விடும் என்பதுவும் உண்மை. இதைக் கருத்தில் கொண்டே ராஜபக்ச தரப்பு, தமது வியூகத்தை கட்டியெழுப்பி வருகின்றது. அதில் அவர்களால் வெற்றி பெற முடியுமா? என்பது தேர்தல் முடிவுகளில் கூர்ந்து கவனிக்கப்படும் மேலும் ஒரு விடயம்.

அதேவேளை கடந்த தேர்தலில், 22 மாவட்டங்களில், 12 மாவட்டங்களில் மைத்திரி முன்னிலை பெற, மகிந்தா 10 மாவட்டங்களிலேயே முன்னிலை பெற்றார். அதன் விபரம் வருமாறு..

மைத்திரி முன்னிலை பெற்ற 12 மாவட்டங்கள்:
யாழ்ப்பாணம் – மைத்திரி முன்னிலை: 1,79,120 வாக்குகள் (மைத்திரி: 2,53,574 மகிந்தா: 74,454 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 3,40,571) வாக்களிப்புவீதம்: 66.28
மட்டக்களப்பு – முன்னிலை: 1,67,791 (மைத்திரி: 2,09,422 மகிந்தா: 41,631 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 2,56,586) வாக்களிப்பு வீதம்: 70.97
கொழும்பு – முன்னிலை: 1,62,459
நுவரெலியா – முன்னிலை: 1,27,266
அம்பாறை – முன்னிலை: 1,12,333 (மைத்திரி: 2,33,360 மகிந்தா: 1,21,027 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 3,57,817) வாக்களிப்பு வீதம்: 77.39
வன்;னி – முன்னிலை: 1,07,040 (மைத்திரி: 1,41,417 மகிந்தா: 34,377 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 1,80,225) வாக்களிப்புவீதம்: 72.57
கண்டி – முன்னிலை: 88,409
திருகோணமலை – முன்னிலை: 88,227 (மைத்திரி: 1,40,338 மகிந்தா: 52,111 அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள்: 1,95,356) வாக்களிப்புவீதம்: 76.76
பொலநறுவை – முன்னிலை: 42,334
கம்பகா – முன்னிலை: 4,660
புத்தளம் – முன்னிலை: 4,622
பதுளை – முன்னிலை: 281

இதில் ஒன்றை நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். மைத்திரிக்கு வெற்றியை நோக்கி நகர்த்திய முதல் இரண்டு மாவட்டங்களாக இருப்பவை யாழ்ப்பாணமும், மட்டக்களப்புமே. குறைந்த வாக்கு வங்கியைக் கொண்டுள்ள இம்மாவட்டங்கவே அதிகரித்த வித்தியாசத்திலான வாக்குகளை வழங்கியவை. இந்த வரிசையில் தமிழர் அதிகம் வாழும் நுவரேலியா 4ஆம் இடத்திலும், 5ஆம் இடத்தில் அம்பாறை, 6ஆம் இடத்தில் வன்னி, 8ஆம் இடத்தில் திருமலை இருப்பதைக் காணலாம். அதேவேளை ரணில் ஜயாவின் கோட்டை, கொழும்பே அதிகரித்த வாக்குவங்கியைக் கொண்ட மாவட்டம் ஆனாலும், மூன்றாம் இடத்திலும், மைத்திரியின் கோட்டை பொலநறுவை 9ஆம் இடத்திலும், அம்மையார் சந்திரிக்காவின் கம்பகா அதிகரித்த வாக்குவங்கியைக் கொண்ட இரண்டாம் மாவட்டம் ஆனாலும், வெறும் 4,622 வாக்குகள் வித்தியாசத்தில் 11 இடத்திலேயே உள்ளதையும் காணலாம்.

அதேவேளை மகிந்தா முன்னிலை பெற்ற 10 மாவட்டங்களின் விபரம் வருமாறு:
கம்பாந்தோட்டை – மகிந்தா முன்னிலை: 1,04,587 வாக்குகள்
இரத்தினபுரி – முன்னிலை: 86,539
மாத்தறை – முன்னிலை: 85,388
காலி – முன்னிலை: 83,132
குருநாகலை – முன்னிலை: 80,266
மொனாராகலை – முன்னிலை: 67,469
களுத்துறை – முன்னிலை: 46,486
அநுராதபுரம் – முன்னிலை: 42,754
கேகாலை – முன்னிவை: 25,597
மாத்தளை – முன்னிலை: 12,952

கடந்தமுறை மகிந்தா எட்டிய கீழ்நிலையில் இருந்து இம்முறை தேர்தலில் மாற்றங்கள் உண்டு. மேற்கண்ட மாவட்டங்களில் கைமாறும் மாவட்டங்களும் உண்டு. முன்னிலை வாக்குகளிலும் மாற்றங்கள் உண்டு. அவை எங்கெல்லாம் சாத்தியம், ஜே.வி.பி தனித்து போட்டியிடுவதன் தாக்கம், இரண்டாம் தெரிவு வாக்கின் தாக்கம், ஈழத்தமிழரும் சிறீலங்கா சனாதிபதித் தேர்தல்களும், தேர்தலைக் கடந்தான ஈழத்தமிழரின் சவால்கள் போன்றவற்றை அடுத்த பதிவில்ப் பார்ப்போம்.. ஏனென்றால் இன்னும் ஜந்து மாதங்களுக்குள் பாராளுமன்றத்தேர்தல் ஆம் முன்கூட்டியேதான்..

Leave a Reply