கடந்தவாரம் சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேர்மனிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், எங்களை இரண்டாம் தரமாகப் பார்க்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி பெரும் கோபத்தைக் கொட்டித்தீர்த்தார்.
அதாவது சிறீலங்காவானது உன்னதமான அரசியல், பொருளாதார, கலாசார விழுமியங்களைக் கொண்டதொரு நாடு. அப்படியொரு நாட்டினை மேற்குசார்ந்த மேட்டிமைத்தனத்தோடு நின்று கொண்டு, எப்படி தரக்குறைவாகக் கேள்வி கேட்கலாம் என்பதுதான் அவரின் கோபத்துக்குக் காரணம். குறித்த நேர்காணலைச் செய்தவர் கேட்ட கேள்வியோ, ஈஸ்டர் தாக்குதல், சனல் 4 வீடியோ, அதற்கான சர்வதேச விசாரணை என்பதாக இருந்தது. எனவே அதற்குப் பதில் சொல்லமுடியாத ரணில் விக்கிரமசிங்க, கோபத்தைக் கொட்டித்தீர்த்த அதேவேளை, சிங்கள மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் ரணில் என்றால் மேற்கு சார்புடையவர் என்கிற பிம்பத்தைத் தகர்க்கவும் பயன்படுத்திக்கொண்டார்.
அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படப்போகும் இந்த சம்பவத்தை ரணில் தன் பக்கம் லாவகமாகத் திருப்பிக்கொண்டார். அந்த நேர்காணல் வெளியானதிலிருந்து சிங்கள சமூகவலைதளங்களிலும், இனவாத ஊடகங்களில் ரணில் ஒரு தேசிய வீரனாக புகழப்படுகின்றமை இதற்குத் தகுந்த எடுத்துக்காட்டு.
சர்வதேச ஊடகமொன்றில் வெளியான இந்த நேர்காணலானது, உள்நாட்டு அரசியலில் இப்படியாக வடிவமெடுத்துக்கொண்டிருக்க, இங்கு ஆராயப்படவேண்டிய விடயம் ரணில் விக்கிரமசிங்க கோபப்பட்டதில் ஏதாவது நியாயுமுள்ளதா என்பதே ஆகும். இந்நாட்டின் போக்கு ரணில் கேட்டதன்படியே இரண்டாம் தரத்திலாவது இருக்கிறதா என்பதை கண்டடைதலே ஆகும்.
நாடொன்றின் ஒழுக்கம் அதன் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபட்டது. அந்தவகையில் சிறீலங்கா எனும் சிங்கள பெரும்பான்மைவாத மனோநிலை கொண்ட தேசத்தின் இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து நாற்பத்து ஆராயிரம் பேர். இதில் மூன்று நபர்களுக்கு ஒரு இராணுவத்தினன் எனும் கணக்கில் இராணுவத்தினர் வடக்கு, கிழக்கு பாகங்களில் குவிக்கப்பட்டுள்ளனர.
உலகளவில் பதினெட்டாவது இடத்தில் இராணுவத்தொகையைக் கொண்டிருக்கும் இந்நாட்டின் இராணுவம், உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி மிகவும் ஒழுக்கக்கேடான – தமிழ் இனப்படுகொலையில் – தமிழ் இனவழிப்பில் ஈடுபடுகின்ற தரப்பினராக ஆதாரத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் வேளைகளில் சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்றது, அப்பாவிகளைக் கடத்தியது, கடத்திக் காணாமலாக்கியமை, தமிழ் மக்களின் வளங்களை சூறையாடியமை, நில அபகரிப்புக்களில் ஈடுபடுகின்றமை, போதைப்பொருள் கடத்துகின்றமை, பொதுமக்களின் பொருட்களைத் திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றமை, பௌத்த மேலாதிக்கத்திற்கான மறைமுக வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றமை என உள்நாட்டுக்குள் மிகவும் கேவலமான வேலைகளில் ஈடுபடும் இராணுவத்தை இந்நாடு கொண்டிருக்கின்றது.
அதேபோல ஐ.நா பாதுகாப்பு இராணுவத்தில் இணைக்கப்பட்ட சிறீலங்கா இராணுவம்கூட பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் நாடுகளில் வாழும் பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தியதாக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடொன்றில் தரத்தை நிர்ணயிப்பத்தில் அந்நாட்டினை ஆட்சி செய்த – ஆட்சி செய்கின்ற தலைவர்களினது பங்கும் கணிசமானது. சிறீலங்கா தேசத்தை பிரிட்டிஸ்காரர்களிடமிருந்து வலிந்து பெற்றுக்கொண்ட சிங்களத் தலைவர்களின் முதல் அரசியல் முதலீடே தமிழர் விரோதப் போக்கே காணப்பட்டது. கண்மூடித்தனமாக தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை விதைத்தனர்.
1947 ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்கா தொடங்கி, 1956 இல் பண்டாராநாயக்கா வரை இந்த இனவாத அரசியலின் அடித்தளத்தைப் பலமாக இட்டனர். அதன்பிறகு அந்த இனவாதச் சக்கரம் தமிழர்களின் தலைகளில் ஏறி இலகுவாகப் பயணித்தது. இடையில் எந்த சிங்கள அரசியல்வாதியும் அதனைத் தடுத்துநிறுத்தவில்லை. அதற்கு முயற்சிக்கவுமில்லை. தமிழர்களைக் கொல்வது, தமிழர்களின் வளங்களை சூறையாடுவது, தமிழர்கள் தேடிவைத்திருக்கும் சொத்துக்களை கொள்ளையடிப்பது, தமிழர்களைக் கடத்தி கப்பம் கோருவது என்பவைகளை இந்த அரசியல்வாதிகளின் தேர்தல்கால வாக்குறுதிகளாக இருந்தன.
ஒரு நாட்டின் சக மக்களின் இனவாதத்தைக் கக்கி, அதனையே தம் அரசியல் இருப்புக்கான ஆயுமாக கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வரும் அரசியல்வாதிகளை உலக வரைபடத்தில் சிறீலங்காவைத் தவிர வேறெங்கும் பார்க்கமுடியுமா? இதற்கு விதிவிலக்கானவராக ரணில் விக்கிரமசிங்கவால் மனமுவந்து சொல்லத்தான் முடியுமா?
உலகளவில் அதிக ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்கா 36 ஆவது இடத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஊழலின் தாயகமாக மாறிவிட்ட இந்தியாவை விட சிறீலங்கா நான்கு இடங்கள் முன்னிலை வகிக்கின்ற அளவில் ஊழல் நிலமைகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு, பொலிஸாருக்கு, நிர்வாக அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்தால் இங்கு எந்த காரியங்களையும் சாதித்துக்கொள்ள முடியும்.
சாதாரணமாக ஓர் அரச அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்கள் தொடக்கம், உயரதிகாரி வரைக்கும் கையூட்டுப் பெறும் படிநிலை இயல்பான போக்கில் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கையூட்டு வாங்காமல் ஒரு காரியத்தை நிறைவேற்றுவது தவறானது என்கிற முறைமைக்கு பொதுமக்களும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.
இவ்வளவு நிதி நெருக்கடி நிலையிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக ஊழலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கியமாக வலியுறுத்தப்ப்ட்டபோதிலும், இதுவரையில் அதற்கான எந்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. ராஜபக்ச குடு;ம்பத்தினர் நாட்டைக் கொள்ளையடித்துவிட்டனர் எனக் கோரி, தான் வந்து அதனை மீட்பேன் என பின்கதவால் ஆட்சியைப் பிடித்த ரணிலால், ராஜபக்சக்கள் திருடிய ஒரு சதத்தைக் கூட மீட்க முடியவில்லை.
இடியப்ப சிக்கலைப் போல இயங்கும் சீறீலங்கா எனும் ஊழல் சாம்ராஜ்யத்தை ரணிலால் மட்டுமல்ல, எவராலும் கட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பதே யதார்த்தமாகியிருக்கின்ற நிலையில், இந்நாட்டினை எப்படி இரண்டாம் தர நாடாகப் பிரகடனம் செய்ய முடியும்?
ஒரு நாட்டை நிர்வகிக்கும் அனைத்துத் தரப்பினரும், தவறான பாதையில் சென்றாலும், அவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தி, தண்டனை வழங்கி, மீளவும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவரலாம் என்பதே ஜனநாயகத்தின் இறுதி நம்பிக்கை.
ஆனால் சிறீலங்காவின் நிலமையோ, சரியான நீதியை வழங்கப் பாடுபடும் நீதிபதிகளே அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறும் கட்டாயம் எழுந்திருக்கின்றது. பௌத்த பிக்குகள் எழுதிக்கொடுப்பதையும், அரசியல்வாதிகள் தொலைபேசியில் சொல்வதையும் தீர்ப்பாக எழுதும் நீதித்துறைதான் இங்கு காணப்படுகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்தவாரத்தில் கூட இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. சமநேரத்தில் சாட்சி சொல்ல நீதிமன்றில் முன்னிலையாகுபவர்கள், சாட்சி சொல்லிவிட்டு நீதிமன்ற வாசலுக்கு வரும்போதே சுட்டுக்கொல்லப்படும் பயங்கரவாத நிலை இந்நாட்டில் காணப்படுகின்றது. பாரியளவு படையப் பெருக்கத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்காவில், ஆயுததாரிகளும், பாதாள உலகக் கோஸ்ரியினரும், ஆட்கடத்தல்காரர்களும், போதைப்பொருள் கடத்தல் காரர்களும் மிகச் சாதாரணமாக இயங்கும் நிலைதான் காணப்படுகின்றது. எனவே பொதுமக்களின் இறுதி நம்பிக்கையான நீதித்துறையையும், பொதுமக்களையும் காப்பாற்ற முடியாது நாடொன்று என்ன இலட்சணத்தில் தன்னை இரண்டாம் தர நாடாகவாவது எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கோபப்படமுடியும்?
இப்படியாக இந்நாடு மூன்றாந்தர நிலைiயில் இருக்கக்கூட பொருத்தமற்ற அனைத்துத்தளங்களிலும் புறையோடிப்போயிருக்கின்றன. இந்தப் பத்தியின் படியே சிந்த்தித்தால் சிறீலங்காவின் தொட்டவைகள் அனைத்துமே 15 ஆம் நூற்றாண்டு மனிதர்கள் பயன்படுத்தக்கூடத் தகுதியற்றவை என்ற முடிவுக்கு வரமுடியும். இப்படியானதொரு மோசமான நாடு தன்னை எப்படி மேற்கு நாடுகளுடன் அல்லது வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட முடியும்? இவ்வளவு குற்றங்களையும், சீர்கேடுகளையும் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இறுகப் பற்றிக்கொண்டு, தன்னை இரண்டாம் தரமாகப் பார்த்துவிட்டீர்களே என எப்படி கோபப்பட முடியும்?