சிறிலங்கா அரசிற்கு ஆயுதம் வாங்க இந்திய மத்திய அரசு உதவக் கூடாது இராமதாஸ்

422 Views

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்துமாறு பாமக தலைவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஸ – பிரதமர் மோடி சந்தித்த போது இரு நாட்டு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது பல்வேறு தீர்மானங்கள் இரு நாடுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்திற்கு தளபாடங்கள் வாங்க இந்தியா 50 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு பாமக தலைவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சிறிலங்கா இராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரான செயலாகும். இந்த நிதியை ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள அரசு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. ஈழத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவிற்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர் படுகொலை குறித்த போர்க் குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை. இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஈழத் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி, தண்டிக்கப்பட வேண்டிய நாடு. அத்தகைய நாட்டிற்கு இந்தியா 50 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவது போர்க் குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது” என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.

Leave a Reply