சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. பதினைந்து வருடங்களாகத் தொடரும் இந் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு ஆற்றிய உரை வருமாறு:
சிறிலங்கா அரசினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் நடத்தப்பட்டு வருகின்றன.
குருந்தூர் மலையிலுள் தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் நீதி மன்ற உத்தரவையும் மீறி பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது, இதுபோன்று சிங்கள மக்கள் வசிக்காத தமிழர் தாயகப்பகுதிகளான நாயாறு, தையீட்டி, நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமனலங்குளம், கன்னியா வென்னீருற்று போன்ற இடங்களிலும் பௌத்த ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சட்டவிரோதமாக ஆலயங்கள் கட்டப்படும் சில இடங்களில் அரச அனுசரணையுடனான சிங்கள் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில், மயிலந்தமடு, மாதவனை பகுதிகளில் மூன்று லட்சம் கால்நடைகள் பயன்பெறக்கூடிய மேச்சல் நிலங்களில் வசித்தவந்த தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டு, நீதிமன்ற உதரவினைமீறி அவ்விடங்களில் சட்டவிரோதமான முறையில் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களான சிங்கள இனத்தவர் குடியேற்றப்படுகின்றனர். மாதுரு ஓயா வலது கரை மேம்பாட்டு திட்டத்தினைப் பயன்படுத்தி இனப்பரம்பலை மாற்றும் விதத்தில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு அவ்விடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.
அரசின் மேற்படி இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கமானது இச்சட்டத்தினை நீக்குவதாக ஐநா மனிதவுரிமைச் சபைக்கு உறுதியளித்திருந்தது, எனது சகாவான திரு. செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதுடன், அவர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதனை இங்கு சுட்டிக்காட்டலாம்.
தலைவர் அவர்களே, 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதிலும், சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதுவித மாற்றமுமின்றித் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. பதினைந்து வருடங்களாகத் தொடரும் இந் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும்.