சிறிலங்காவிடமிருந்து நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது – ஈழத் தமிழர் மக்களவை

341 Views

“சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு. அத்துடன் நீதியை வழங்குவதற்கான விருப்பத்தையோ இயலுமையையோ கொண்டிராத ஒரு நாடு. குற்றவாளிகளான சிறிலங்கா தொடர்ச்சியாக தமது குற்றங்களை மறுத்துவரும் நிலையில் சிறிலங்காவிடமிருந்து தமிழர்கள் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.”

இவ்வாறு தெரிவித்திருக்கின்றது அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

“முள்ளிவாய்க்காலில் 70,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்து சென்றுவிட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அன்று முதல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. களநிலைமைகளைப் பொறுத்தவரையிலும் சிறிலங்காவின் 16 படைப் பிரிவுகளில் 13 படைப்பிரிவுகளின் ஆக்கிரமிப்புக்குள்ளேயே தமிழ் மக்கள் இருப்பதால் அவர்களுடைய நிலைமையும் மிகவும் மோசமானதாகவே இருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றங்கள் குறித்தும், தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறப்படாமை, நீதி வழங்கப்படாமை குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பல கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. இந்தப் பின்னணியில் இணைத் தலைமை நாடுகளினால் வெளியிடப்பட்டுள்ள பிரேரணையின் நகல், எந்தவகையிலும் ஆணையாளரின் அறிக்கையுடன் உடன்பாடானதாக இருக்கவில்லை. நீதியை எதிர்பார்த்துள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இணைத் தலைமை நாடுகளின் இந்த நகல் பிரேரணை உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுத்தது.

புலம்பெயர்ந்த தமிழர்களுடைய அமைப்புக்கள் பலவும் இணைந்து அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை என்ற அமைப்பை International Council of Eelam Tamils (ICET) உருவாக்கியுள்ளன. சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த அமைப்பின் மூலமாக உலகளாவிய ரீதியில் பேரணிகள் நடத்தப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்களை சுழற்சி முறையில் மேற்கொண்டிருந்தார்கள். கடந்த நான்கு வருட காலமாக இவர்கள் வீதியோரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களுக்கு இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை.

தற்போது இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல பேரணிகளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் சைக்கிள், கார் பேரணிகள் உட்பட உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் பலவும் நடத்தப்பட்டன. தமிழ் மக்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்தும் அவரது கோரிக்கைகளை ஆதரித்து கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம். இந்தப் போராட்டங்களின் போது முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தையும் ஈழத் தமிழர் மக்களவை ஆதரிக்கின்றது.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உறுதியான பரிந்துரைகளைத் தெரிவித்திருந்த போதிலும், பேரவையின் அங்கத்துவ நாடுகள் தமிழ் மக்களுக்கு நீதிவழங்குவதைத் தொடர்ந்தும் மறுத்துவருவதையிட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர்ந்த 15 இலட்சம் தமிழ் மக்களும் திகைத்துப்போயுள்ளார்கள். சிறிலங்கா அரசாங்கம் தமது தமிழினப் படுகொலைலைத் தடையின்றித் தொடர்வதற்கு “இறைமை” என்பதை ஒரு கவசமாகப் பயன்படுத்துகின்றது. தமிழ் மக்களுடைய வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமும் எங்கே உள்ளது? பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியின் நிலை என்ன? சிறிலங்கா இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது?

மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பிரகடனத்தை நாடுகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடாகும். இரண்டாவது உலகப் போரின் இறுதியில் அவ்வாறான ஒரு யுத்தம் மீண்டும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கத்துடனேயே இது உருவாக்கப்பட்டது. இருந்தாலும், தமிழனப் படுகொலை தொடர்ந்தும் இடம்பெறுவதை “மீண்டும் இடம்பெறக்கூடாது” என்ற இந்தக் கருத்து தடுத்து நிறுத்தவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்வதற்காக சர்வதேச – சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என அனைத்து நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு. அத்துடன் நீதியை வழங்குவதற்கான விருப்பத்தையோ இயலுமையையோ கொண்டிராத ஒரு நாடு. குற்றவாளிகளான சிறிலங்கா தொடர்ச்சியாக தமது குற்றங்களை மறுத்துவரும் நிலையில் சிறிலங்காவிடமிருந்து தமிழர்கள் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி.”

இவ்வாறு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Leave a Reply