சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டுக் கூறு போடுகின்றது-தவராசா கலையரசன்

140 Views

திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய துாதுவருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா என்கின்ற நட்புறவோடு நீணட காலமாக இலங்கைக்குப் பல உதவிகளை வழங்கிய நாடாக அண்மையில் உள்ள நாடு என்ற அடிப்படையில் இந்தியா அமைந்துள்ளது.

இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய கலை கலாசார அம்சங்களோடு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம் ஆனால் திட்டமிட்டு எம்மினத்தின மீது சிங்களப் போனவாதம் திணிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலே திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் மூலம் எமது புனிதத்தலத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்குரிய நடடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்திய உயர்ஸ்தானிகரின் திருகோணமலை மாவட்ட வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

அது மாத்திரமல்லாமல் திரியாய் என்று சொல்லப்படுகின்ற கிராமத்தை மையமாக வைத்து தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன இலாகா போன்ற திணைக்களங்களுடாகத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது. மிக வேகமாக இந்த மாவட்டத்தைக் குறி வைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. இதனை இந்த நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து இந்த நாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

நாட்டின் புதிய ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்ட போதும் ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த சிங்கள அரச தீவிரவாத செயற்பாடு மிகவும் மோசமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் பதவிக்கு வந்தபோது இந்த நாட்டில் சமாதானம், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பேசியிருந்தாலும் அதற்கு மாறான செயற்பாடுகளே எமது தமிழர் பிரதேசத்திலே நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே இந்த நாட்டில் சமாதானம் சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் தமிழர் பிரதேசங்களிலே இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள், மத ரீதியான அடக்குமுறை என்பன நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply