சர்வதேச விசாரணையின் மூலமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் – பி.மாணிக்கவாசகம்

அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அரசியலில் குப்பைகள் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அதனால் அது குப்பையாக இருக்கின்றது. அரசியலில் நல்லவைகளும் இல்லாமல் இல்லை. ஆயினும் நல்லவை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

குப்பை நிறைந்த சாக்கடை மட்டுமல்ல. அரசியல் தில்லுமுல்லுகளும் நிறைந்திருக்கும். தில்லுமுல்லு இல்லையேல் அரசியலே இல்லை என்னும் அளவில் பொதுவில் அரசியல் நிலைமைகள் காணப்படுகின்றன. ஆனால் சிறீலங்காவைப் பொறுத்த மட்டில் தில்லுமுல்லுகளே அரசியலாகக் காணப்படுகின்றது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தமது சுய அரசியல் நலன்களுக்காக எத்தகைய தில்லுமுல்லுகளையும் செய்யத் தயாராகி விடுவார்கள். அதேபோன்று அதிகாரத்தில் உள்ளவர்களைக் கீழிறக்கிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எதிரணியினர் எத்தகைய தில்லுமுல்லுகளையும் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். இத்தகைய தில்லுமுல்லு போக்கின் காரணமாகவே சிறீலங்கா முன்னேற்றமடையாத ஒரு நாடாகக் காணப்படுகின்றது. அரசியலிலும்சரி, அபிவிருத்தியிலும்சரி மிகவும் பின்தங்கிய நாடாக – ஒரு தோல்வியுற்ற நாடு என்ற நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ள கோத்தாபாய ராஜபக்ச சீனச்சார்பு கொள்கையைக் கடைப்பிடித்தவராக, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளைப் புறந்தள்ளிச் செயற்படுவதில் அதி தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார். இந்த சீனச்சார்பு கொள்கையானது, ராஜபக்சக்களின் குடும்ப வம்ச ஆட்சியைத் தொடர்ந்து பேணுவதற்காகவே கைக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தாங்களே நிறைவேற்ற திகாரங்கள் அனைத்தையும் கொண்ட ராஜ வம்சத்தினராக அதிகாரத்தில் நீடித்திருப்பதற்கும் இந்த அரசியல் உத்தியை அவர்கள் பின்பற்றியுள்ளார்கள்.

சீனாவின் ஆதரவுடன் அதிகாரத்தில் எஞ்சியிருப்பதற்கு முற்பட்டுள்ள அவர்கள், பிரதியுபகாரமாக சீனா, சிறீலங்காவில் உரித்து கொண்ட பங்காளராக மிளிர்வதற்கான வழி வகைகளையும் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் பொருளாதாரத்தில் மிக மோசமாகப் பின்தங்கியுள்ள நாட்டை முன்னேற்றுவதாகப் போக்குக் காட்டி கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்தத் துறைமுக நகரத்தை உலக நாடுகளினதும், வல்லரசுகளினதும் பொருளாதார கேந்திர நிலையமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உலகமே இன்று கோவிட் 19 என்ற கொடிய வைரஸின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் கோர உயிர்கொல்லி அரக்கனின் ஆதிக்கத்தினால் நாடுகள் பொருளாதார, அரசியல், இராணுவ துறைகளில் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. கோவிட் 19 தாண்டவமாடும் நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் பொருளாதாரப் பின்னடைவும் தலையெடுத்திருக்கின்றன.

கோவிட் 19 சீனாவின் வூகான் பிரதேசத்திலேயே உற்பத்தியாகி (உற்பத்தி செய்யப்பட்டு…?) உலக நாடுகளில் பரவச் செய்யப்பட்டதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனாவே கோவிட் 19 இனால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாகத் திகழ்ந்தது. ஆயினும் அந்த நாடே கோவிட் 19 இன் கோரப் பிடியில் இருந்து விரைவாக மீண்டெழுந்து உலக பொருளாதாரத்தில் முன்னணியில் திகழும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது.

large fZ0kBwBvYcGUNWDdNyFx cS9RH2tnGbrxleTDv6vC7w சர்வதேச விசாரணையின் மூலமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் - பி.மாணிக்கவாசகம்

இந்தப் பின்புலத்தில் சீனாவின் பொருளாதார பலத்தைப் பிரயோகித்து, கொழும்புத் துறைமுக நகரத்தை நிறுவி சிறீலங்காவின் பொருளாதாரத்தை விருத்தி செய்யப் போகின்றோம் என்பதே கோத்தாபாய அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது.

தலைநகர் கொழும்புத் துறைமுகத்தை அண்டிய ஆழ்கடல் பிரதேசத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மண்ணை நிரப்பி உருவாக்கப்பட்ட தரைப்பிரதேசத்தில் இந்தத் துறைமுக நகரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது முழுக்க முழுக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தரைப்பிரதேசமாகும். இந்தத் தரைப் பிரதேசத்தை சிறீலங்கா அரசு சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றது என்பது எத்ர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் சிறீலங்கா அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள பௌத்த மத பீடாதிபதிகளும்கூட இந்தத் துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர்.

சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் துறைமுக நகரத் திட்டமானது முழுக்க முழுக்க சீனாவுக்கே வழங்கப்பட்டு விட்டதாகவும், இதன் மூலம் ‘சீன ஈழம்’ அங்கு உருவாக்கப்படுவதாகவும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் வர்ணித்துள்ளனர்.

சிறீலங்காவின் பழங்குடி மக்களாகிய தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமாகிய வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நாட்டின் பேரின மக்களாகிய சிங்கள மக்களுக்கு சமமாக தனித்துவமான ஆட்சி உரிமையைக் கொண்டிருப்பதற்கு இடமளிக்காத சிறீலங்கா அரசாங்கமே தலைநகரில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் சீனாவின் ஆதிக்கத்திற்கு வழியேற்படுத்தி உள்ளது.

இந்த நாட்டின் சக குடிமக்களாகிய தமிழ் மக்கள் தங்களது வாழ்வுரிமையாகிய தனித்துவமான அரசியல் உரிமைகளுடன் வாழ்வதற்கு இடமளிக்காத பேரின ஆட்சியாளர்களே சீனாவின் ஆதிக்கத்திற்கு வழிசமைத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் அனைத்து உரித்துகளையும் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கான தாயகப் பிரதேசத்தை – அங்கு அவர்களின் இறைமையை அங்கீகரிக்க மறுத்துள்ள பேரின ஆட்சியாளர்களே தமது சுய அரசியல் நலனுக்காக முழு நாட்டினதும் இறைமையை சீனாவுக்குத் தலைவார்த்துக் கொடுக்கத் துணிந்திருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையை தில்லுமுல்லு நடவடிக்கை என்றுதானே குறிப்பிட வேண்டும்?

இந்தத் துறைமுக நகரப் பிரதேசத்தில் சீனாவின் முழு ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காகவே அதன் நிர்வாகப் பொறுப்பை கொழும்புத் துறைமுக நகர ஆணையகம் என்ற ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி அதனிடம் முழுமையாக ஒப்படைப்பதற்கு கோத்தாபாய ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான அரசியல் சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட வரைபு உருவாக்கப்பட்டு, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக அரசு சமர்ப்பித்துள்ளது. இந்தச் சட்ட உருவாக்கம் குறித்து அரச வர்த்தமானியில் அறிவித்தல் செய்த அரசு, அதனை ஆட்சேபிப்பதற்கான கால அவகாசத்தையும் நரித்தந்திர முறையில் வழங்கி இருந்தது.

சித்திரைப் புத்தாண்டு தருணத்தில் பொதுவிடுமுறை தினங்கள் அதிகமாகக் காணப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, அதற்கான ஆட்சேபனைகளுக்காக நீதிமன்றத்தை நாடுவதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பொதுவாக ஒரு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படும்போது முழுமையான வேலைநாட்களைக் கொண்ட ஒரு வார கால அவகாசம் ஆட்சேபனை களுக்காக வழங்கப்படுவது உண்டு.

ஆனால் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ள கொழும்புத் துறைமுக நகருக்கான ஆணைக்குழு நியமனம் தொடர்பிலான நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக ஒரேயொரு வேலை நாளைக் கொண்ட ஒரு வார கால அவகாசமே வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த நெருக்கடியான கால கட்டத்திலும் அரசாங்கத்தின் இந்தத் தில்லுமுல்லு முயற்சிக்கு ஆப்பு வைப்பதற்காக பல்வேறு தரப்பினரும்  19 தனித்தனி ஆட்சேபனை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆட்சேபனை மனுக்களுக்கு ஆதரவாக இரண்டு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேவேளை, இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக பத்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஜனாதிபதியின் செயலாளர் ஜயசுந்தர சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதிடுகையில், முக்கியமான ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுவே அந்த நகரின் சகல நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கும் என்றும், அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதியே தன்னிச்சையாக நியமனம் செய்வார் என்றும், அவ்வாறு நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் சீனர்களாக இருக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டு, அத்தகைய நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நியமனம் கொழும்புத் துறைமுக நகரத்தை முழுமையாக சீனாவுக்கே உரித்தாக்குவதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது குறித்து ஜனாதிபதியின் செயலாளருடைய மனு தொடர்பில் நீதிமன்றத்தில் வாதம் செய்த சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா, சிறீலங்காவின் பிரதம நீதியரசராக உள்நாட்டவர் ஒருவரை மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று நாட்டின் அரசியலமைப்பில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை இந்த நாட்டின் பிரதம நீதியரசராக நியமிக்க முடியும் என குறிப்பிட்டார்.

அத்துடன் அத்தகைய ஒரு நிலையில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியினால் யாரையும் நியமிக்க முடியும் என சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா சுட்டிக்காட்டினார். ஆகவே, கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பிலோ அல்லது அதன் செயற்பாடுகள் குறித்தோ எவரும் ஆட்சேபனை செய்வதை ஏற்க முடியாது என்ற தொனியில் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

உண்மையில் சிறீலங்காவின் யுத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறலில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டவாதிகளையும் உள்ளடக்கி ஒரு கலப்பு நீதிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்களப் பேரினவாதிகள் உள்ளிட்ட பலரும் எதிர்த்திருந்தனர். அத்துடன் பொறுப்பு கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டவர்களை நியமனம் செய்வதென்பது நாட்டின் இறைமையை மீறுகின்ற செயல் என்றும், நாட்டின் அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்றும் உறுதியாக வாதிட்டிருந்தனர். அந்தப் பொறிமுறை உருவாக்கத்திற்குப் பரவலாக எதிர்ப் பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்தனர். இத்தகைய பின்புலத்திலேயே அந்நியர் ஒருவரை சிறீலங்காவின் பிரதம நீதியரசராகக் கூட நியமனம் செய்ய முடியும் என்றும் அந்த வகையில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அந்நியர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்வதில் தவறில்லை. சட்டப்பிரச்சினை எழ முடியாது என்ற வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா வாதம் செய்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதைப் போன்று அரச தரப்பில் இருந்து எவருமே ஆட்சேபனை  எதனையும் தெரிவிக்கவில்லை. அவருடைய கருத்து சரியானது என்பதை ஏற்றுக் கொள்வதைப் போன்று மௌனம் சாதித்து வருகின்றனர்.

சிறீலங்காவின் நீதித்துறை சார்ந்த விடயத்தில் இத்தகைய முரண்பாடான நிலைப்பாடு நிலவுவது என்பது சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானபோது ஒரு செயற்பாட்டையும், அதேபோன்று ஆளும் தரப்பினருக்குத் தேவையான போது மாறுபட்ட செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைப்பாடானது முழுக்க முழுக்க சிறீலங்காவின் ஆளுந்தரப்பினரின் அடாவடியான செயற்பாடாகவும் தில்லுமுல்லு நடவடிக்கையாகவுமே வெளிப்பட் டிருக்கின்றது. இத்தகைய தன்னலம் மிக்க அரசியல் செயற்பாட்டைக் கொண்டுள்ள சிறீலங்கா ஆட்சியாளர்களிடம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம், நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீண் முயற்சியாகவே அமையும். அத்துடன் இத்தகைய ஒரு சூழலில் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் விசாரணையின் ஊடாகவே நீதியை நிலைநாட்ட முடியும். நியாயத்தைப் பெற முடியும் என்பது உறுதியாக்கப் பட்டிருக்கின்றது.