சமூக ஊடகங்களை சி.ஐ.டி. கண்காணிக்கும்! விஷேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது

இலங்கையில் சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான போலியான செய்திகளைப் பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான செய்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று, தடுப்பூசித் திட்டம் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் பாதித்துள்ளன எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

“போலிச் செய்திகளும் தவறான தகவல்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு இது போன்ற செய்திகளைக் கண்டுபிடித்து அதனைப் பதிவிடுபவர்கள் மற்றும் பகிர்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்” எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.