சனாதனம் – ஓர் அலசல் – பேராசிரியர் மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.;டி.,டி.லிட்.

சனாதனத்திற்கு விளக்கம் அளிப்பவர்கள், சனாதனம் அழியாதது, சனாதனம் நிலையானது என்று  வாதிடுகின்றனர். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்பப்புரட்சி உலகெங்கும் பரவி இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், மாறுதல்களின் பயணம்தான்  இன்றைய உலகைக் கைப்பேசி வழியாக இணைத்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகின் மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தியாவின் மக்கள்தொகை 148 கோடியைக் கடந்துவிட்டது. சீனாவின் மக்கள்தொகை முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு 142 கோடியாக உள்ளது.

Majority Needed in Indian Parliament சனாதனம் - ஓர் அலசல் - பேராசிரியர் மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.;டி.,டி.லிட்.2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகை, வாழ்நிலை, இயற்கை சூழல், நிலம், காற்று, நீர் ஆகியவற்றின் தன்மைகள் முற்றிலுமாக  மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், தொழில் நுட்ப வளர்ச்சியாலும் மாறிக் கொண்டே வருகின்றன. எனவே, சனாதனம் நிலையானது என்பது வளர்ந்து வருகின்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

தமிழ்நாட்டில் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் புதிய தரவுகள் எவற்றிலும் கடவுள் சார்பு, மதச்சார்பு தன்மைகள் இல்லவே இல்லை என்பது உண்மையாகி விட்டது. கீழடி சான்றுகள்  தமிழர் நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு  முன்னது என்பதை மெய்ப்பிக்கின்றன.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்து தமிழ்ப் பண்பினுடைய ஒரு தொடர்ச்சியே என்பதையும் உறுதி செய்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபிறகுதான்  வேதங்களும், மனுசாத்திரங்களும்,  இதிகாசப் புராண கதைகளும் தமிழ் மண்ணில் திணிக்கப்பட்டன.

2000 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர்,

‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழர்கள் பின்பற்றிய அறத்தை வெளிப்படுத்தினார்.

திருக்குறளுக்கு   உரை எழுதிய நாவலர் நெடுஞ்செழியன் தனது முன்னுரையில், பரிமேலழகர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதிய திருக்குறள் உரையில் புகுத்தப்பட்ட ஆரியக் கருத்துகளை எடுத்து முன்வைத்துள்ளார். திருக்குறளின் உண்மைக் கூறுகள் மறைக்கப்பட்டுப் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட மனுக் கொள்கைகளை ஒட்டியே பரிமேலழகரின் உரை அமைந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகளையும் சுட்டியுள்ளார்.

“பிராமணன் முதல் வருணத்தால் ஆனதனாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான்”(மனு த.சா.அ.1.சு.100)

“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான  காலில் பிறந்தவன் ஆகையால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்.” (மனு த.சா.அ.8.சு.270).

“ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக்கொள்ளும் போதும், விதிப்படி சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்”

 

“அஜி கர்த்தர் என்னும் முனிவர் 100 பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து, தமது பசியைத் தீர்;த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை”(மனு த.சா.அ.10.சு.105).

“கொடிய குற்றம் செய்தாலும், பிராமணனைக் கொல்லாமலும் மற்ற எத்தகையத் துன்பத்திற்கு ஆளாக்காமலும்,  அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து, அயலூருக்கு அனுப்ப வேண்டும்” (மனு த.சா.அ.8.சு.380)

“அரசனானவன், எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது” (மனு த.சா.அ.8.சு.381).

ஆண்டவனே சாதிகளைப் படைத்தான், தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன்.

மேற்கூறிய  கருத்துகள் அடிப்படையில்தான்  சனாதனம் ஆதிக்க சமூகத்தினரால் உயர்ந்த கருத்து என்றும், மானுட நெறிகளைப் போற்றும் கருத்துகள் என்றும் சுட்டப்படுகிறது.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை – குறள் 1031

(உலகத்தார் பல தொழில்களைச் செய்தாலும், உணவின் காரணமாக, உழவுத் தொழிலையே தலையாய தொழிலாக ஏற்றுக்கொள்ள  வேண்டியவர்களாக இருக்கிறார்கள்)

2000 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சுட்டிய கருத்துகள் இன்றும் உலகில் நடைமுறையிலிருந்து வருகிறது. பொருளாதாரத்தில் தேசிய வருமானத்தைக் கணக்கிடுகிறபோது, வேளாண் தொழில் வருமானத்தை முதன்மைத் துறை என்றும், தொழில் துறையை இரண்டாம் நிலை என்றும் பணித்துறையை மூன்றாம் நிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

lka covid results 2 சனாதனம் - ஓர் அலசல் - பேராசிரியர் மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.;டி.,டி.லிட்.கொரானா காலத்தில் எல்லாத் துறைகளும் முடங்கிய போது, வேளாண் துறை மட்டும் உழவர்களின் வழியாக  உலகிற்கே உணவை அளித்தது. ஆனால், இப்படிப்பட்ட மனிதர்களுக்குத் தேவையான உணவை அளிக்கும் தொழிலைப் பற்றி சனாதனம் என்ன கூறுகிறது தெரியுமா?

‘பயிர்த்தொழில் நல்ல தொழில் என்று  நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்’ (மனு த.சா.அ.10.சு.84)

மனிதனையும், மனிதனுக்கு உணவைத்தரும் முதன்மைத் தொழிலான வேளாண் தொழிலை இழிவுபடுத்துவதுதான் என்றும் நிலையான கருத்தாக சனாதனம் முன்னிறுத்துகிறது.

தமிழ் மண்ணில் சார்வகம், பௌத்தம், சமணம் போன்ற மார்க்கங்கள் செழித்திருந்தன. அவை கடவுள், மறுபிறப்பு போன்ற வேத இதிகாச அடிப்படையில் அமைந்த சனாதனக் கருத்துகளை முழுமையாக எதிர்த்தன.

தமிழ் மண்ணில் சைவமும்,வைணவமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போற்றப்பட்டாலும், அவ்வப்போது இக்கருத்தியலில் காணப்பட்ட, தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்ட, தமிழ் மரபிற்கு எதிராகப் புனையப்பட்ட, புகுத்தப்பட்ட கருத்துகளைச் சித்தர்கள் பலர் எதிர்த்தவண்ணமே இருந்தனர்.

“இட்ட குண்டம் ஏதடா?

இருக்கு வேதம் ஏதடா” (சிவவாக்கியர் 13)

என்று பல நூறாண்டுகளுக்கு முன்பே சிவவாக்கியர் என்ற சித்தர் குரலெழுப்பினார்.

“நூறு கோடி ஆகமங்கள், நூறு கோடி மந்திரங்கள்,

நூறு கோடி நாள் ஓதினால் அதுஎன்பயன்”; (அது எந்தப் பலனையும் தராது)  (சிவவாக்கியர் 140)

“ஓதி வைத்த நூலிலே மயங்குகிறீர். மனு எரிக்க  நாளு நாடுவீர்” (சிவவாக்கியர் 462)

“சாதியாவது ஏதடா? சாதி பேதம் பேசும் தன்மை என்ன தன்மையோ?” (சிவவாக்கியர் 46)

“பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?

இறைச்சித்தோல் எலும்பினும் இலக்கிட்டு இருக்குதோ

பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரும் உம்முள்ளே

(சிவவாக்கியர் 38)

 

“நட்டகல்லைத் தெய்வம் என்றே நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டக் கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”

(சிவவாக்கியர் 494)

மேலும்,  சிவவாக்கியர் 508 பாடலில் “கட்டை, கல், மட்டை, மஞ்சள், சட்டை, சாடி இவைகளில் பரம்பொருள் இல்லை, வெட்டவெளியதன்றி மற்றுவேறு தெய்வமில்லை” என்று உரைக்கிறார்.

ஆடுபாம்பு சித்தர் –

“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம், புராணங்களைச் சாற்றும் ஆகமம்

விதவிதமான வேறு நூல்களும்

வீணான நூல்கள் என்று ஆடுபாம்பே”

“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்” (123)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு – குறள் 80

(அன்புடையவர்களே உயிருடையவர்களாகக் கருதப்படுவார்கள். அன்பில்லாதவர்கள் இறந்த பிணம் போன்று எண்ணப்படுபவர்கள்- நாவலர் உரை)

அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினைவுடைமை, அடக்கமுடைமை,  ஊக்கமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை போன்ற  பல அதிகாரங்களில்  மானுடத்தை உயர்த்தும் பண்புகளும், மனித வாழ்வியலில் கடைப்பிடிக்க வேண்டிய  உயர் நெறிகளும், ஏற்றத்தாழ்வுகளை  நீ;க்கும் முறைகளும் திருக்குறளில் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், என்றும் நிலையானது, அழியாதது என்று கூறப்படும் கருத்துகள், இன்றைய அறிவியலுக்கு முற்றும் பொருந்தாத, மனிதனை மனிதனே தாழ்த்தும் பிற்போக்குத்தனமான கூறுகளைச் சனாதனம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்.

காலந்தோறும் தமிழக மண்ணில் வள்ளுவர், சித்தர்கள் தொடங்கி வள்ளலார் வரை வேத, ஆகம கருத்துகளை முழுமையாக எதிர்த்துள்ளனர்.  தமிழ் இலக்கியங்களில், காப்பியங்களில் சனாதனம் என்ற சொல் காணப்படவில்லை.

இன்றைக்கு ஆதிக்கச் சக்தியினரின் கைகளில் ஆட்சியியலும், ஊடகங்களும், பெரு முதலாளிகளும் சிக்கியிருப்பதால் அறிவியலுக்குப் புறம்பான, பகுத்தறிவிற்கு எதிரான, வருணாசிரமம் என்னும் அடுக்குமுறை சாதியத்தை வலியுறுத்தும் கருத்தைச் சனாதனம் என்ற போர்வையில் வலியுறுத்துகின்றனர். இதை 19ஆம் நூற்றாண்டிலேயே உணர்ந்த வள்ளலார் முதன் முதலாக  ஆறாம் திருமுறையில் சனாதனம் என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். அதனுடைய தீய விளைவுகளையும் கடுமையான கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதித்த  சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

(ஆறாம் திருமுறை – 4503)

குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

(ஆறாம் திருமுறை – 4504)

பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது

பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது

(ஆறாம் திருமுறை – 5170)

இதன்; காரணமாகத்தான் கேரளாவின் நாராயண குரு ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகக் களம் அமைத்துப் போராடினார். இது ஒரு சனாதன எதிர்ப்பு போராட்டமாகவே கருதப்படுகிறது.

தமிழ் நாட்டில்  தந்தை பெரியார் 60 ஆண்டுகாலப் பொது வாழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகளில் மனு சாத்திரம், வேதம், இதிகாசம், புராணம், பகவத்கீதை உட்படப் பல நூல்களில்  சாதிப் பிளவை ஊக்குவிப்பதையே முதன்மையான கருத்தியலாகப் புகுத்தப்பட்டுள்ளது. இதைத்தான் தந்தை பெரியார் சனாதனக் கொடுமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் அண்ணா “சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம் அல்லது  சந்திரமோகன்” என்ற நாடக நூலில் பல வெற்றிகளைப் பெற்ற மாவீரன் சிவாஜிக்கு மராட்டியப் பார்ப்பனர்கள் மகுடம் சூட்ட மறுக்கிறார்கள். சிவாஜி என்ற மாவீரனைச் சூத்திரன் என்று அழைத்து இழிவுபடுத்தினார்கள். பட்டம் சூட்டுவதற்குப் பல இலட்சம் மதிப்புள்ள செல்வத்தைப் பெற்றுக்கொண்டு கங்கையிலிருந்து வந்த காகபட்டர் என்கிற பார்ப்பனர், சிவாஜியைச் சத்திரியன் என்று அழைத்துப் பட்டம் சூட்டுகிறார். இந்த ஆதிக்கச் சமுதாயத்தினர் நினைத்தால் யாரையும் எப்படியும் நிறம் மாற்றலாம் என்ற  ஒரு ஆதிக்க மனப்பான்மை இன்றும் தொடர்வது மானுடக் குலத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

இதனால்தான் அண்ணல் அம்பேத்கர், இந்து மதவாதமும், சனாதனமும் இந்தியாவில் ஜனநாயகக் கூறுகளைச் சிதைத்துவிடும் என்று எச்சரிக்கை செய்தார். இதற்கு மணிப்பூரில் தொடரும் கலவரங்களே நிகழ்கால சான்றுகளாக அமைகின்றன.

‘இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை? இதற்கான பதில் எளிது. இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தைச் சாதி வர்ணங்கள் அடிப்படையில் பிளவைக் கற்பிக்கிறது. வகுப்புணர்வைத் தனியாக நிலைபெறச் செய்கிறது. இத்தகைய அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடமில்லை. இந்தச் சமூக அமைப்பு விபத்தின் காரணமாக ஜனநாயகத்தை இழக்கவில்லை. ஜனநாயகம் இருக்கக்கூடாது என்பதற்காக வடிவமைக்கப்பட்டது” (Why did democracy not grow in India? The answer is simple. The Hindu religion does not teach fraternity. Instead, it teaches the division of society into classes or varnas and the maintenance of separate class consciousness. In such a system where is the room for democracy? The Hindu social system is undemocratic not by accident it is designed to be undemocratic. “Riddles in Hinduism – Dr Babasaheb Ambedkar – Writings and Speeches, Vol, IVp.285 )

சனாதனம் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் ஒரு பழமைவாத, பிற்போக்குத்தனமான கருத்தியல். இன்று இந்தியாவில் காணப்படும் பெருகி வரும் வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, கல்வியின்மை, குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலை ஆகிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை உலகளவிலும், இந்திய அளவிலும் பல ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இவற்றை மறைப்பதற்காக சனாதனத்தை ஒரு கேடயமாக ஆதிக்கச் சக்தியினர் பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை.