சந்திரிகாவின் மீள்வருகைகள நிலையை மாற்றுமா? – பூமிகன்

395 Views

சிறீலங்காவின் சனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருவரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில் தேர்தல் களம் கடுமையாகச் சூடு பிடித்திருக்கிறது. அரசியலில் புதிய சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களும் தீவிரமாகியிருக்கின்றது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளார்கள். குழப்பத்திலிருந்த தமிழ்க் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் பின்னணியில், சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும் தானே தொடர்ந்தும் பிரதமராக இருப்பேன் என ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பு, முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அதிரடியான நாடு திரும்பி, சஜித்துக்கு ஆதரவைத்

தெரிவித்திருப்பதுடன், சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சி என்பன இந்த வார தென்னிலங்கை அரசியலின் தலைப்புச் செய்திகள்.

புதன்கிழமை அலரி மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  “சஜித் சனாதிபதியானால், பிரதமர் பதவியில் நான் தொடர்ந்தும் இருப்பேன்” என்பதுதான் அவரின் அந்த அறிவிப்பு. அரசாங்கத்தின் கடந்த நான்கரை வருடகால அபிவிருத்திகள் தொடர்பிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. கடந்த கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடரும் என்பதைக் குறிப்பிட்டபோதே, “சஜித் சனாதிபதியானால் நானே பிரதமர்” என்ற அறிவிப்பை ரணில் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு சர்ச்சையை உருவாக்கியதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஐ.தே.க.வின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, சஜித்துக்கு விட்டுக் கொடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ரணில் தரப்பு ஒரு நிபந்தனையாக இதனை முன்வைத்தது. அதாவது, பிரதமராக ரணில் தொடவேண்டும் என்பது அந்த நிபந்தனை. ஆனால், இதனை ஏற்றுக்கொள்வதற்கு சஜித் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எந்த நிபந்தனையையும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் அறிவித்தார்.

இறுதியில் நிபந்தனைகள் இன்றியே சஜித் சனாதிபதி வேட்பாளர் ஆனார். மங்கள சமரவீரவை பிரதமராக நியமிக்கும் ஐடியாவுடனேயே சஜித் செயற்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. சஜித்தை சனாதிபதி வேட்பாளராக்க வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்தவர்களில் மங்கள முக்கியமானவர். அதற்காக அவர் ரணிலுடனும் முரண்பட்டார். பிரதமர் பதவியில் கண் வைத்துக்கொண்டே இந்த நகர்வை அவர் முன்னெடுத்தாகவும் ஒரு தகவல் உள்ளது.

இது தொடர்பில் வெவ்வேறு விதமான கதைகள் உலாவ விடப்பட்டிருப்பதன் பின்னணியிலேயே ரணிலின் அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கின்றது. இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற இரகசியக் கூட்டம் ஒன்றில் சம்பிக்க ரணவக்கவைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை சஜித்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

ஜாதிக ஹெல உறுமயவின தலைவரான அவரை பிரதமராக நியமிப்பதன் மூலம், பொதுத் தேர்தலில் ராஜபக்‌சக்களுடன் போட்டியிட்டு அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றக் கூடியதாக இருக்கும் என்பது இவர்களுடைய கருத்து. இனவாதிகளின் வாக்குகளைக் கவரக்கூடிய ஒருவர் அவர் என்பதே இதற்குக் காரணம்.

அதனைவிட மலையகத்தில் சஜித்துக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நவீன் திசாநாயக்க மற்றொரு தகவலை வெளியிட்டார். சஜித் வெற்றி பெற்றால், மலையகத்தைச் சார்ந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்பதே அவர் வெளியிட்ட கருத்து. 1994 இல் ஐ.தே.க.வின்சனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட காமினி திசாநாயக்கவின் மகன்தான் நவீன். சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளைத் திருமணம் செய்தவர். சஜித்துக்கு ஆதரவளிக்கும் நவீன், பிரதமர் பதவியில் கண்வைத்துச் செயற்படுகின்றார் என்பதும் தெரிகின்றது.

இந்த இரு தகவல்களும் வெளிவந்திருக்கும் பின்னணியில்தான் திடுதிடுப்பென விழித்துக் கொண்ட ரணில், “சஜித் சனாதிபதியானாலும் பிரதமர் பதவியில் நான் தொடர்வேன்” என

அறிவித்தார். “எமது ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் சஜித் சனாதிபதியான பின்னரும் தடங்கலின்றித் தொடரும். அதனை நான் முன்னெடுப்பேன். சஜித் சனாதிபதியானாலும் பிரதமராக நானே தொடர்ந்திருப்பேன்” என்பதுதான் அவர் வெளியிட்ட அறிவிப்பு.

சஜித் பிரேமதாச இதற்கு நேரடியாகப் பதிலளிக்காவிட்டாலும், மறைமுகமாகப் பதிலளித்திருக்கின்றார். ஐ.தே.க.வுக்குள் புகைந்துகொண்டிருக்கும் முண்பாடுகளை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. புதன்கிழமை மாலை குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சஜித் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சனாதிபதியாகிய பின்னர் நான் அமைக்கப்போகும் அமைச்சரவையில், ஊழல் பேர்வழிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை. சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்பதை மட்டுமே நான் இதுவரையில் உறுதியாகக் கூறியிருக்கின்றேன். அதனைவிட எனது அமைச்சரவையில் வேறு யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எந்த முடிவையும் நான் இதுவரையில் எடுக்கவில்லை” என்பதுதான் சஜித்தின் உரையின் சாராம்சம். மற்றொரு கூட்டத்தில் உரையாற்றியபோது, “பிரதமராக யாரை நியமிப்பது என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை” என அவர் கூறினார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ரணிலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகவே இவை உள்ளன. சஜித் சனாதிபதியாகத் தெரிவானாலும், தோல்வியடைந்தாலும் கட்சிக்குள் பூகம்பம் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது என்பதைத்தான் இந்த சிறிய வெடிப்புக்கள் உணர்த்துகின்றன.

ஒரே மேடையில் இருவரும் ஏறினாலும், கட்சிக்குள் தொடரும் முரண்பாடுகள் தேர்தலில் கோத்தாபாயவுக்கு சாதகமாக அமைந்துவிடலாம் என்பதே ஐ.தே.க.விலுள்ள நடுநிலையாளர்களின் கருத்து. அதேவேளையில், அரசியலமைப்புக்குச் செய்யப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்படி, பிரதமரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் சனாதிபதிக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அதிக ஆதரவைக் கொண்டுள்ளவரே பிரதமராக முடியும். மைத்திரி செய்த அரசியலமைப்புப் புரட்சியின் போது ரணிலை மீண்டும் பிரமராக நியமிக்க மறுத்தார். ஆனால், அதனைத் தொடர அவரால் முடியவில்லை. பாராளுமன்றப் பெரும்பான்மைக்கு அடிபணிந்தார். ஆக, சஜித் சனாதிபதியானால், ரணிலுடனான மோதல் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

புலனாய்வுத் தகவல்களின்படி கோத்தபாயவுக்கான ஆதரவே இப்போது அதிகமாகவுள்ளது. சந்திரிகாவின் வருகை இந்த நிலையை மாற்றுமா? என்பது இப்போது எழும் முக்கிய கேள்வி. சுமார் 10 இலட்சம் வாக்குகள் அவரிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திங்கள் இரவு சந்திரிகா நாடு திரும்பியுள்ளமையை அடுத்து கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோத்தாபயவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள குமார வெல்கம போன்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளார். கட்சியின் தலைமைப் பதவியை மீளக் கைப்பற்றும் உபாயத்துடனேயே அவர் செயற்படுகிறார்.

சுதந்திரக் கட்சி ராஜபக்‌சக்களுடன் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ள போதிலும், அதில் பலர் அதிருப்தியடைந்துள்ளார்கள். குறிப்பாக வரப்போகும் பொதுத் தேர்தலையும் இலக்காகக் கொண்டதாகவே இந்த நகர்வுகள் உள்ளன. அதில் தமக்கு ஆசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுனையில் இணைய முன்வந்தார்கள்.

ஆனால், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் எதிர்காலத்தில் ஆசனங்களை சுதந்திரக் கட்சியினருக்கு வழங்குவது என்பதுதான் ராஜபக்சக்களின் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் 8 வீதமான வாக்குகளைப் பெற்ற சுதந்திரக் கட்சிக்கு இது கடும் அதிர்ச்சி.

அவர்களில் சிலர் சந்திரிகாவுடன் இணைந்து சஜித்துக்கு ஆதரவளிக்க முன்வருகின்றார்கள். இது குறித்த பேரம்பேசல்கள் இப்போது இடம்பெறுகின்றது. இந்த நிலையில் உடைந்து சந்திரிகாவுடன் வரக் கூடிய சுதந்திரக் கட்சியின் வாக்குகள் சஜித்தைப் பாதுகாப்பதற்குப் போதுமானதாக இருக்குமா?

Leave a Reply