உலக அரசியலின் பார்வையில் மாவீரம் மற்றும் பயங்கரவாதத்துக்கான வேறுபாடுகளை சிறு இடைவெளியே நிரப்பீடு செய்கின்றது. அதாவது போராட்டத்தின் விளைவுகளே தீர்மானிக்கிறது. விளைவு வெற்றியாக அமைகையில் அவனை மாவீரனாக புகழந்து இணைந்து செல்வதிலும், மறுபக்கத்தில் தோல்வியடைந்தவன் மீது பயங்கரவாத முத்திரியை குத்தி அரசியலிலிருந்து தவிர்ப்பதுவே நீண்டகால உலக அரசியலின் மரபாக வெளிப்படுகின்றது.
அம்மரபுக்குள்ளேயே தம் இனத்தின் தலைமுறை இருப்புக்காய் சாவை புன்னகையுடன் வரவேற்று சென்றவர்கள் மீதும் பயங்கரவாத முத்திரியை சர்வதேசம் குற்றியுள்ளது. எனினும் தமிழர் வாழும் தேசம் எல்லாம் இன்று மாவீரர் புகழ்வணக்கங்களால் கார்த்திகை மலர்வது மகிழ்வானது. எனினும் எமக்குள் எம்நாயகர்களை புகழாரம் சூடுவாற்கு அப்பால் சர்வதேசரீதியாகவும் அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிசெய்வதே நாம் அவர்களுக்கு வழங்கும் உரிய புகழ் வணக்கமாக அமையும்.
பாலஸ்தீன விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்ட யசீர் அரபாத் மற்றும் அவரது பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் அமெரிக்கா 1993ஆம் ஆண்டு கைகுலுக்கியது. இதற்கு பின்னால் 1987-1993 காலப்பகுதியில் பாலஸ்தீன மக்கள் திரட்சியின் கிளர்ச்சியால் வலுப்பெற்ற மக்கள் சுதந்திரப்பேரணியின் அழுத்தங்களே காரணமாகியது.
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் அறத்தை, அதுசார்ந்த நியாயப்பாட்டை கருத்தியல் தளத்திலும், மக்கள் செயற்பாட்டிலும் வலுவாக பொதுவெளியில் முன்னிறுத்த வேண்டும். இன்று தமிழ் மக்களிடையே ஒரு தரப்பிடையே மாவீரம் பாரட்டப்படும் சமதளத்தில் அவர்களை பாசிசவாதிகளாக முன்னிறுத்தும் உரையாடல்களும் தாயகத்தில் காணப்படுவது மறுப்பதற்கில்லை.
அவ்வாறான கருத்தாடல்கள் களையப்பட வேண்டும். சந்ததி கடந்து மாவீரர்கள் மாவீரம் கடத்தப்பட வேண்டும். நினைவேந்தல்களில் தீபங்களை ஏற்றி விட்டு கடந்து செல்லாது நினைவேந்தலுக்கான தார்ப்பரியத்தை கடத்த வேண்டும். 1980களுக்கு முன்னர் எவ்வாறான பின்னணியில் விடுதலைக்காக ஆயுதமேந்தினார்கள் என்பதை உரத்து சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஐ.வி. மகாசேனன்