எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை கையிலெடுக்க காடையர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (19)வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகத்தின் மீது அரங்கேற்றப் பட்ட அநியாயங்கள் போன்றே தியாக திலீபன் நினைவேந்தல் ஊர்வலத்தின் மீதும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் இனவெறுப்பு தாக்குதல் நடந்தப் பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளால் அநியாயமாக உயிர்களையும் உடமைகளையும் இழந்த அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே இன வெறுப்பு நிகழ்ச்சி நிரலை அரசியல் சுய நலத்திற்காக மீண்டும் கையில் எடுக்கின்றார்கள்.
தியாக திலீபன் நினைவேந்தல் ஊர்வலத்தை நிறுத்துவதாயின் நீதிமன்ற கட்டளையினை பெற்றிருக்க வேண்டுமே தவிர காடையர்களைக் கொண்டு வழி மறித்து தாக்குதலை நடத்த அனுமதிக்க முடியாது.
இதே போன்று தான் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அவர்களின் உடமைகள் மீதும் பள்ளிகள் மீதும் எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் இலாபங்களுக்காக பெரும்பான்மை காடையர்களைக் கொண்டு தாக்குதல்களை நடாத்தினார்கள்.
இவ்வாறான தாக்குதல்கள் குறித்து பல்வேறு முறை பாடுகள் செய்யப் பட்டிருந்தும் குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இனங்களிடையே ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் நிலை நாட்டுகிறோம் என ஐ.நா வரை கூச்சலிடும் ஆட்சியாளர்கள் சட்டத்தையும் நீதியையும் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மாத்திரம் விலக்களிக்கப்பது மனித உரிமை மீறல்களாகும்
எனவே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதல் நடாத்திய காடையர்களின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்